Friday, 27 December 2019

The Queen (க்யூயின்)

The Queen (க்யூயின்)

~ அகிலா 





சக்தி, ஜி எம் ஆர் என்னும் புனைப்பெயரில் நமக்கு அறிமுகமான முன்னாள் முதல்வர்கள் இருவரை நிஜ பாத்திரங்களாக உலவவிட்டு பார்த்த 'க்யூயின்' (Queen) வெப் சீரிஸ் எல்லாம் நம்ம ஊருக்கு புதுசு. 

சமீபத்துல நெட்பிளிக்ஸ்ல ஜீசஸை gay ன்னு காமெடி செய்துட்டாங்கன்னு பிரேசிலில் கலாட்டா செய்துட்டாங்க. நம்ம ஊரில் இன்னும் இல்ல. இது சம்பந்தமான வழக்கையும் இயக்குனர் கௌதம் 'அது நாவலின் காப்பி' என்று சொல்லி சரிசெய்துவிட்டார். மற்றபடி கொஞ்சம் சிலவற்றை மாத்தி சீன் பண்ணியிருந்தாலும் பெரும்பாலும் அவங்க வாழ்க்கையைக் கார்பன் காப்பி வச்சு எடுத்திருக்காங்க.

'க்யூயின்' சீரிஸில் எல்லாமே க்வீஸ் மாதிரி. பெயரை வைத்து நாம நிஜ கேரக்டரைக் கண்டுபிடிக்கிற வேலை. நல்லாதான் இருக்கு..

அனிதா சிவகுமரன் நாவல், 'The Queen' என்பதை Web Series ஆக தமிழில் எடுத்திருக்கிறார்கள். கௌதம் மேனன்(VTV - வி தா வ), பிரகாஷ் முருகேசன் (கிடாரி) இருவரின் இயக்கமும் இதில் இருக்கிறது. ஸ்கிரிப்ட் ரேஷ்மா கட்டாலா (நீதானே என் பொன் வசந்தம்) வசனங்கள் தெறிக்கிறது. 



அனிதா சிவகுமரன்



கௌதம் வாசுதேவன் 




பிரகாஷ் முருகேசன் 



ரேஷ்மா கட்டாலா 




ஜி எம் ஆர் ஆக வருகிற இந்திரஜித்.. குழி விழுந்த சிரிப்பு, வசீகர கண்கள்.. 'Anyone can fall for him' என்பதை செய்துக்காட்டியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்.. சான்ஸே இல்ல.. கம்பீரம், சோகம், மகிழ்ச்சி எல்லாம் அந்த முகத்தில்.. நிஜம் நம் முன்..

வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், அஞ்சனா எல்லோரும் ஓகே. சக்தியின் 'தோழி' சூரியகலாவாக வரும் விஜி சந்திரசேகர் சற்று சத்தத்தைக் குறைத்திருக்கலாம். 




















பிரதீபன் (தீபன்) மட்டும்தான் பெண் சமூகத்துக்கே எதிரி என்பது போன்ற ஒரு projection. ஜி எம் ஆரின் சாவு வீட்டில் பிரதீபனும் சக்தியும் பேசிக்கொள்ளும் அதிகப்படியான காட்சியமைப்பைத் தவிர்த்திருக்கலாம். ஏன்னா, அங்க நடந்த அத்தனையையும் டிவியில் பார்த்த சாட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் இன்னும் உயிரோடுதான் இருக்காங்க. அன்று அவங்க கிட்டே இருந்த ஆவேசம் தான் அவங்களின் இந்த உச்சிக்குக் காரணம். அதுதான் அவங்க குணம். இதில் ரொம்ப சாத்வீகமா அழுத்தமா காட்சி அமைப்பு மாறியதைப் பார்த்தபோது சீசன் 1 முடிவு காட்சிகள் மனதில் இலேசாகதான் பதிந்தன. அதற்கு முன்பு இருந்த கதை அழுத்தம், ரம்யா கிருஷ்ணனின் முகபாவங்களின் தீவிரம், உச்சரிப்பு வலிமை எல்லாமே சற்றென்று சரிந்தாற் போல் ஆனது. 

சக்தியின் வாழ்க்கைக் குறித்த நிறைய மர்மமுடிச்சுகளுக்கு பல வருடங்களாக மக்களாகத் தேடிய விடைகள் எல்லாம் எளிதாய் உடைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் வாசந்தியின் 'Amma :Jayalalithaa's Journey From Movie Star To Political Queen' படித்திருக்கிறேன். கொஞ்சம் அதிலிருந்தும் கதை உருவப்பட்டிருக்கிறது தெரிகிறது. 

ஒரு காலகட்டத்தில் காதல், காதல் தோல்வி, காமம் குறித்த பல விஷயங்கள் ஒளித்தும் மறைத்தும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய மனிதர்களின் செயலாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றியவர்கள், அரசியல் சதிராட்டத்தில் எதிர்களத்தில் நின்றவர்கள் இப்படியாக பலர் எழுதி வெளிவந்த உண்மையும் பொய்யும் கலந்த வாழ்க்கை சரித்திரங்கள் நம்மிடையே புழங்கத் தொடங்கிய பிறகுதான், பெரிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்க்க அசிங்கப்படுத்த அவசியமில்லையெனும் அறிவு முதிர்வு (civilized / matured attitude) நமக்கு வந்தது எனலாம். 

காந்தி, நேரு, இந்திராகாந்தியென அடுத்தடுத்த புத்தகங்கள் வாசிப்பின் பிறகுதான் உன்னதம் என்பது யாதென்ற புரிதல் உண்டானது. 
'க்யூயின்' சீரிஸையும் அப்படியான நோக்கில்தான் எடுத்திருக்கிறார்கள். இது போன்ற காணொளிகள், பெண், பெண் சார்ந்த வியாபாரத்தன்மை, பெண்ணை பழிக்கும் ஆணின் மூளையுடன் இயங்கும் பெண்ணுலகம், பெண்ணின் மீது ஆண் செலுத்தும் அதிகாரதன்மை போன்ற பல வெளிகளை அசாத்திய கோணங்களில் அணுக சொல்லித்தருகிறது எனலாம். 

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இருவருக்கும் வாழ்த்துகள்..

தமிழில் இன்னும் எதிர்ப்பார்ப்போம்.. 





~ அகிலா.. 





Saturday, 4 June 2016

மனதுக்கு இசையாதவை - ஓர் அலசல்

திரையிசை - ஓர் அலசல் 


இளமை துள்ளும் பருவங்களில் வெளிவரும் அனேக திரைப்பட பாடல்கள் பெரிதாய் அலசப்படாமல் நம் மனதுக்குள் போய் நின்றுக்கொள்ளும். திரைப்படத்தில் கதையும் இருக்காது, பாடல்களும் பிரமாதப்படுத்தாது. இருந்தும் அதில் வரும் சில பாடல்கள் மனப்பாடம் செய்யப்பட்டிருக்கும். அதில் குத்து பாட்டுகள், காதல் பாட்டுகள் அதிகமாக இருக்கும். அவை அந்த நேரத்தில் நம் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும். 

காலப்போக்கில் அவற்றை நாம் மறந்திருக்கவும் கூடும். இருந்தும் என்றோ ஒரு நாள் ஓடும் பேருந்தில், டீ கடையில், கடந்து செல்லும் சமயம் மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட்டில் இருந்து காதில் விழும்போது, நம்மை அறியாமல் பாடலின் வரிகளை வாய் முணுமுணுக்கும். நம் மூளையின் ஏதோ ஒரு மடிப்பில் சொருகப்பட்டவைதான் அவை. மீட்சிக்காக காத்திருப்பவை. ‘நம்ம ஊரு சிங்காரி, சிங்கப்பூரு வந்தாளாம்...’ போன்ற பாடல்கள் இம்மாதிரிபட்டவையே.

எண்பதுகளில் வெளிவந்த படங்களில், பல கதாநாயகர்கள், மைக்கும் கையுமாக வண்ண விளக்குகளின் சிதறல்களுக்கு நடுவில் பளபள டிரஸுடன் கை கால்களை வெட்டிக்கொண்டு டிஸ்கோ ஆடுவதை பார்த்திருப்போம். ரவீந்தர், கமலஹாசன், மோகன், சுரேஷ், ஆனந்தபாபு என்று பட்டியல் நீளும். இன்றும் கூட அந்த மாதிரி பாடல் காட்சிகள் டிவியில் காட்டப்பட்டால், சேனல் மாற்றிவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.


உலக நாயகனின், ‘உனக்கென மேலே நின்றாய், ஓ நந்தலாலா...’ என்னும் பாடலுக்கான ஜிமிக்ஸ் தவிர்த்து அந்த பாடலை மட்டுமே ரசித்திருக்கிறேன். அப்புறம் வந்த தொன்னூறுகளின் படங்களில், டிஸ்கோ இல்லாமல், மைக் மட்டும் போதுமென்று நின்று பாடிய கதாநாயகர்களும், முரளி போல, உண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை.  

இன்னும் மோசமாய், காதல் காட்சிகளில் கதாநாயகிகள் பரதநாட்டியம் ஆடுவது வழக்கம். வராத ஒரு நாட்டியத்தை கை கால்களை அஷ்டகோணலாக்கி உடம்பை வளைத்து, பிட்டம் காமேராவுக்குள் விழுமாறு மிக மோசமான காட்சிகளாக அவை அமைந்திருக்கும். டி ஆரின் ஒரு படத்தில் ஜீவிதாவின் நடனம் ஒன்றை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்து, பாக்கியராஜின் மோசமான, ‘கண்ணை திறக்கனும் சாமி..’ போன்ற ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட சிலபல பாடல்கள். இவையெல்லாம் கிளர்ச்சிக்காகவே எடுக்கப்பட்டவை. காமம் வாழ்க்கையில் ஒன்றுதான். அது ரசிக்கபடவேண்டியதே தவிர, ஆபாசப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதே அப்போதும் இப்போதும் என் கருத்தாய் இருந்திருக்கிறது.

Artificiality, செயற்கைத்தன்மை இல்லாத பட பாடல்கள் அந்த காலத்தில் மிக குறைவு தமிழில். பாலு மகேந்திரா கேமேராவுக்குள் மட்டுமே அம்மாதிரி சாத்தியங்கள் நிகழ்ந்திருக்கிறது.

கதையோ காட்சியோ மிகைப்படுத்தப்படலாம். மிகைப்படத்தப்பட்ட ஒன்றுதான் சில நேரங்களில் மக்களின் மனதுள் இடம்பெறும் என்ற புரிதலின் சூட்சமங்கள் அதில் அடங்கியுள்ளதால், அதை ஒத்துக் கொள்ளலாம்.

பாடல்கள் மிகைப்படுத்தப்படும் போது, அவையும் ரசிக்கப்படலாம். காட்சிக்காக இல்லை, பாடலின் வரிகளுக்காக, அதில் உள்ள வார்த்தை செறிவுக்காக. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும், ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது..’ போன்ற பாடல்கள் என்னுள் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு.

இன்றைய காலகட்டத்தில், பாடலும் கதையின் தளமும் இணைந்தே இயங்குவதால், பெரிதாய் நாம் சலிப்படைய வேண்டியதில்லை. ஒரு படத்தில் ஐந்தில் மூன்றாவது, தளம் மாறாமல் இருக்கிறது. இருந்தும் ஒப்பிடுகளில் வைக்கும் போது, எண்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் மனதில் தங்கிய அளவு இப்போதுள்ளவை தங்குவதில்லை. சொற்செறிவு குறைவாக இருப்பதாக கூட காரணம் சொல்லலாம்.


காட்சி அமைப்புகளில் செயற்கை இழைக்கப்படுவது தெரியாமல் எடிட் செய்யப்படுகிறது. இருந்தும் சில காட்சிகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது. சமீபத்தில் வெளிவந்த அப்பாவும் மகளுமாய் பாடும் பாடல் காட்சிகள், இரு வேறு நடிகர்கள் நடித்தது, ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’, ‘ஈனா, மீனா டீகா,...’.
ஒப்பிட்டில் இரண்டையும் வைக்கும் போது, இரண்டிலும் செயற்கை தன்மை காணப்படினும், முதலில் குறிப்பிட்ட பாடலில் அதிகமாய் தென்படுகிறது என்பது உண்மை..

பிடித்த அலசலும் தொடரும்..



Saturday, 30 January 2016

இளமை ஊஞ்சலாடுகிறது..

மீண்டும்..



டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது.

அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம்.

காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம்.

நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் அறிவாளிகள் இல்லை, பெண்களும்தான்..ஆனால் அவர்கள் அளவுக்கு எங்களால் அப்போது வெளிவர முடியவில்லை என்பதை இப்போதும் தோழிகள் நாங்கள் யோசிப்பதுண்டு. )

காதலும் மோகமும் வேறு வேறு என்பதை பிரித்தறியா காலம் அது. அவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறே என்று சொன்ன திரைப்படம் அது. அப்போது அதை ஏற்கும் மனநிலை இல்லை எங்களுக்குள். ஆனால், புதிதாய் ஒரு பார்வை காதலுக்குக் கொடுத்தது அந்த திரைப்படம் எனலாம்.

உடல் ரீதியான விஷயங்களுக்கு காதல் மட்டுமல்ல, சூழலும் இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியான பழக்கமும் காரணங்கள் எனவும் புதிதான ஒரு பார்வை அந்த திரைப்படம் காட்டியிருக்கிறது. காதலற்று ஒரு உறவு உண்டாவதும், காதலுடன் நாயகி உறவுக்காய் காத்திருப்பதும், ஏற்றுக் கொள்வதும் திரைக்கதையின் போக்கை புதிதாய் புரிய வைக்க முயற்சித்திருக்கிறது.

இதை அந்த காலத்தில் ஒரு முயற்சியாக ஸ்ரீதர் இயக்கினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அதை ரசிகர்கள் ஜனரஞ்சகமான ஒரு திரைப்படமாகவே பார்த்தார்கள் என்பது மட்டுமே உறுதி. அதை 175 நாட்கள் ஓட்டி வெற்றி படமாக்கியதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

சமூகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாதபோது சொல்லப்படும் சில விஷயங்கள் சமூக கட்டுகள் சற்று தளரும் சமயங்களிலேயே புரியப்படுகிறது.

ம்ம்..மீண்டுமாய் ஒர் இளமை ஊஞ்சலாடுகிறது..



Friday, 31 July 2015

பாகுபலி - விமர்சனம் - Bahubali

பாகுபலி



பாகுபலி, மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு, மிகப் பெரிதாய் உலகெங்கும் திரையிடப்பட்டு, அதிகமாய் பேசப்பட்ட படம். 
இந்த படத்தை நான் இரண்டு முறை பார்க்கும்படி ஆயிற்று. 

முதல் முறை சென்னை PVR பிவிஆர் ஸ்க்ரீன்லே. அடுத்த முறை, கோவையில் கங்கா தியேட்டரில்.

ஒன்று, படத்தை படம் எடுக்கப்பட்ட எபக்ட்டோடவே காண்பித்தது. மற்றொன்று, படத்தை சாதாரணமாக்கி காண்பித்தது. இது சம்பந்தமாக கடைசியில் அலசலாம்.

கங்கா தியேட்டரில், moviebuzz விளம்பரம் வழியே, படம் போடும் முன்பே ராஜமௌலி வந்து, இது முதல் பாகம், இரண்டாம் பாகம் விரைவில் வரும்ன்னு சொல்லிட்டாங்க.

ஓகே.. இனி கதைக்குள் போவோம்..


Director RajaMouli  




Bahubali, The Begining

முதல் களம்



படம் தொடங்கியதுமே, மலையடிவாரம். அதில் முழுக்க முழுக்க ஜிவ்வுன்னு தண்ணீர், அருவியாய் கொட்டுது. எங்கே பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர்...நாமளே தண்ணிக்குள்ளே இருக்கிற மாதிரி குளிர்ச்சியாக ஒரு உணர்வு.
பிவிஆர் தியேட்டரில் பின் சீட்டு சிறுவன், ‘இந்த இடம் எங்கேம்மா இருக்குன்னு கேட்டு அவங்க அம்மாவை தொல்லை பண்ணிக்கிட்டு இருந்தான்.

அருமையான படப்பிடிப்பு...சாபு சிரில், மனு ஜகத், செந்தில்குமார் மட்டுமல்லாமல் Visual effects, Camera, animation ன்னு ஒரு டிபார்ட்மென்ட் லிஸ்ட்டே ஓடுது. Credits go to them.

இதற்கு கேமரா மட்டுமே முழு பொறுப்பு அல்ல. இடையிடையே இழையோடும் இசை மற்றும் பாடல் வரிகள் மிக நேர்த்தி. அந்த காட்சிகளைத் தூக்கிப் பிடிப்பது அவைதான். இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கு பாராட்டுக்கள்  



முதலில், ரம்யா கிருஷ்ணன்.....குழந்தையை நீருக்கு மேல் தூக்கிப்பிடித்து... அழுத்தமான கணீரென்ற அவரின் குரல் ஒரு வசியம்தான்.



அடுத்ததாய் கதாநாயகன் பிரபாஸ், இளமையாக அதுவும் அழகாக இப்படி ஒரு கதாநாயகனை தமிழ் சினிமா பார்த்து வெகு நாட்களாகிறது.

அது என்னமோ தெரியலங்க, அவங்க அம்மா பேச்சை கேட்காம அருவிக்கு மேலே ஏற முயற்சித்து, எவ்வளவு உச்சிக்கு போய் கீழே விழுந்தாலும் கதாநாயகனுக்கு மட்டும் அடியே படமாட்டேங்குது. அவ்வளவு வீரனாம்...

அப்புறம், ரோகினி அம்மாவாய்...எல்லா அம்மாக்களுமே இப்போது இளமையாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வளவையும் கதை களத்தின் கீழ்படியில் நின்றுதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.


இரண்டாவது களம்  



அடுத்து, கொஞ்சம் மேலே, கதாநாயகனுடன் நீர்மலை, அதுதாங்க அந்த அருவி + மலையோட பேரு, ஏறிப் போனால், அங்கே அழகாய் ஒரு கதாநாயகி, தமன்னா.

இயல்பான ஒரு ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். நம்ம தமிழ் சினிமாவில ‘வேங்கை’ மட்டும்தான் அவர் இதே போல் நடித்த ஒன்று என நினைக்கிறேன்.

இந்த களத்தில், கதாநாயகன் எப்படி இவ்வளவு ஆக்ரோஷம் காட்டும் கதாநாயகியை தன் வசப்படுத்துகிறான் என்பதே முக்கியமாய் காட்டப்பட்டுள்ளது. 

பெண் என்பவள் எளிதில் மயங்கிவிடும் தன்மை கொண்டவள் என்பதை மீண்டும் மீண்டும் சினிமா உலகம் நிருபித்துவருகிறது. இனிமையான ஒரு இசையுடன், புன்சிரிப்புடன், அவளை வன்மமாய் கையாண்டு அவளை பெண்ணாய் உணரவைத்து, அடுத்த நிமிடம் அனைத்தும் அவனால் முடித்துக் காட்டப்படுகிறது.

இது குறித்து, Anna MM Vetticad என்னும் விமர்சகரும் The Rape of Avanthika என்னும் தலைப்பில், தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
(http://www.thehindubusinessline.com/blink/watch/the-rape-of-avanthika/article7433603.ece)

இந்த இரண்டாவது களத்தில் குகை, மரங்கள் செடிகள் என்று கொஞ்சம் பசுமை. கதாநாயகனுடன் சேர்த்து நாமும் இதற்கு முந்தைய தண்ணீரையும் அம்மா அப்பாவையும் மறந்துவிடுவோம்.


மூன்றாவது களம்



அடுத்த களமாய், பனிக் கட்டியுடன் எல்லாம் போராட்டம், அதாவது மலை உச்சிக்கு வந்துட்டோம்ன்னு அர்த்தம்.

அங்கு மகிழ்மதி ராஜ்யம். அடுக்கி வைக்கப்பட்ட கோபுரங்களும் மாட மாளிகைகளும் ஆபரணவாசிகளும் அகங்காரங்களுமாய் அழகாய் படமாக்கப்பட்டுள்ளது.  





இங்கு ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இவர்களே அதிகமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ராஜ்யத்தில் பொது மக்களையும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் ஒரு காட்சியை தவிர, வேறு எங்கும் காட்டப்படவில்லை. எல்லோரும் மாளிகைகளின் உச்சியிலே நின்றே கதையை நகர்த்துகிறார்கள்.

இதன் இடையில் வரும் பாடல்களையும் நடனங்களையும் சொல்லியாக வேண்டும். அதுவும், மூன்று பெண்களுடன் பிரபாஸ் நடனம் வித்தியாசம். வழக்கமாய் high grade குத்துப் பாடல்கள் எல்லாம் C Grade லெவலுக்கு போய்விடும். ஆனால் இதில் தனித்துவம் காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. Dance composition நன்றாக வந்துள்ளது. பிரேம் ரட்சித், தினேஷ் குமார், சங்கர் என்று நடன அமைப்பாளர்கள், உழைத்திருக்கிறார்கள்.




ராஜ்யம் என்றால், போர் இருக்கும் தானே. போரை காண்பித்திருக்கிறார்கள். பல ஆங்கிலப் படங்களின் கலப்பு இருந்தாலும், போரின் ஆரம்பத்தில் அம்பு விடும் காட்சியில் ஒரு அதிர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சபாஷ் போடலாம்.

முடிவு



அப்புறம், முக்கியமாய் கதையின் இல்லாத ஒரு முடிவை பற்றி பேசுவோம்.

இந்த மாதிரி sequel படங்கள் நிறைய மொழிகளில் வந்திருக்கிறது. spiderman, oz, lord of rings, Die Hard, matrix என்று சொல்லிக் கொண்டே போகலாம். நமது இந்திய மொழியில் இது ஒரு புது திருப்பம்தான், ஒரு படத்தை தொடராக எடுப்பது.

ஆனால், அந்த படங்களில் எல்லாம் ஒரு மனம் நிறையும் முடிவு கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அதை தவற விட்டுவிட்டார்கள். ரம்யா கிருஷ்ணனிடம் ஆரம்பித்த காட்சி இறுதியில் அவரிடமே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு sequel பிலிம் பார்த்த நிறைவு இருக்கும். இது நமது திரையுலகில் முதல் விஷயம் என்பதால், சற்று விட்டுவிடலாம்.

ஆனாலும், இப்படி ஒன்றை பார்த்திராத மக்கள் சற்று திகைத்து போனார்கள் என்பதே நிஜம். முடித்திருக்கலாமோ என்கிற ஆதங்கம் தியேட்டரிலேயே மக்களிடம் வெளிப்பட்டது.

இவ்வளவுதாங்க படம்...


சிறிய குறை  

இதில் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று கதையை உருவாக்கி அதற்கு பிரமாண்ட பட்டம் கட்டியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் நிறைய முதன்மைகளை செய்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள்.

1.        250 கோடி செலவு செய்த முதல் படம்.
2.        மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது.
3.    பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்.
4.        23 புகழ்பெற்ற கேமராமேன்
5.        48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
6.       56 துணை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.
7.    தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா. அவர்களின் உடற்பயிற்சிகாக மட்டுமே 1.5 கோடி செலவு செய்துள்ளனர்.
8.        40 கலை இயக்குனர்கள்
9.        90 உதவி கலை இயக்குனர் வேலை செய்தனர்.
10.     2000 தொழிலாளர் வேலை செய்த முதல் இந்திய படம்.
11.     2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்.
12.     20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
13.     125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
14.     4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்.
15.   திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம்.
16.     26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
17.     ஒவ்வொரு காட்சியையும் 3 மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
18.     1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
19.   கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்.
20.     உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
21.     மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி,
22.     உணவுக்கு 24 கோடி  செலவு செய்த முதல் இந்திய படம்.
23.   சுமார் 1 லட்சம் டன் மரக்கட்டை, பழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
24.     109 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
25  அதிக ஆடை, ஆபரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
26.     மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
27.   போரின்போது வில்லன் பேசும்  உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
28.     162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
29.     உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்.
30.     முதன்முறையாக BBC Tv சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்.
31.     ஒரே நாளில் ட்ரெய்லரை 5மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். .

(Courtesy : Wiki)




இதில் ஒரு சிறிய குறை மட்டும்தான் எனக்கு.

முதலில் சொன்னேனே, ரெண்டு தியேட்டரில் படம் பார்த்தேன் என்று. அதில்தான் குறை உள்ளது.

பெரிய multiplex தியேட்டரில் பார்க்கும் போது, நானும் படம் பார்த்து அதிசயித்து போனேன். மேலே சொல்லப்பட்ட 31 பாயிண்ட்டும் படத்தில் இருந்தது. தொழில்நுட்பம் விளையாடி இருக்கிறது.

அடுத்ததாய், சாதாரண தியேட்டரில் பார்க்கும் போது, அந்த அருவி படமாக்கப்பட்ட பிரமாண்டமோ சீட்டு கட்டாய் இருந்த மாட மாளிகைகளோ அற்புதமான போர் காட்சிகளோ எதுவுமே தெரியவில்லை. சாதாரண வரலாற்று படம் பார்க்கும் ஒரு பாதிப்புதான் இருந்தது.

முதலில் பார்த்தப்போதே இந்த விமர்சனம் எழுதியிருந்தால், தவறாய் புகழ்ந்திருப்பேனோ என்ற எண்ணம் உண்டாகியது.

பிரமாண்டங்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

நீங்கள் எடுக்கும் படத்தை டவுன், கிராமம் மற்றும் பஞ்சாயத்து, நகராட்சி என அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள். பெரிய பெரிய மால் ஸ்க்ரீன்ஸ் காட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டு உங்களை புகழ்ந்து எழுதும் விமர்சகர்களை இந்த பட்டி தொட்டிகளிலும் போய் பார்த்து எழுதச் சொல்லுங்கள்.

நீங்கள் நகரத்துக்காக மட்டும் படம் எடுத்துவிட்டு பிரமாண்டம், பிரமாண்டம் என்று கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே எனக்குப் படுகிறது.

இதை பெரிதாய் கொள்ளவில்லையென்றால், பாகுபலி திரைப்படம் ஒரு மைல்கல் தான் நமது இந்திய திரையுலகத்திற்கு.

அடுத்த பாகுபலியின் கதையை நம்மால் அனுமானிக்க முடிந்தாலும், அந்த காட்சி அமைப்புக்காகவும் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்காகவும் எதிர்ப்பார்ப்போம்.  

Bahubali, The Wonder..








Thursday, 16 May 2013

கௌரவம் - ஒர் அலசல்



Cast & Crew

Director : Radha Mohan
Producer : Prakash Raj
Music Director : Thamman
Lyricst : Karkky
Allu Sirish, Yami Gautam, Prakash Raj, Nassar 

கௌரவம் படம் பார்த்து ஒரு பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. சென்ற வாரம் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இலக்கிய வட்டத்தில் அதன் விமர்சனம் வந்தபோது கூட நான் அதிகமாய் பேசவில்லை.  

காரணம் ஒன்றுதான்...மனதில் அந்த படத்தின் தாக்கம் சரியாக இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இந்த படம் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. 


கௌரவக் கொலைகள்...

இந்த கௌரவக் கொலைகள் டெல்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் நிறைய நடப்பதை நாலைந்து மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகள் பெரிதுப்படுத்தி இருந்தன. லண்டனில் வாழும் இந்தியர்கள் கூட வீட்டை விட்டு காதலனுடன் போகும் தன் வீட்டு பெண்களை டாக்ஸி ஓட்டுனர்களை வைத்து கண்டுபிடித்து தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள கொலைகள் செய்வதாக படித்திருக்கிறேன். 


கதை...

இதை தான் ராதாமோகன் படமாக எடுத்திருக்கிறார். இளைஞன் ஒருவன் தற்செயலாக தன் நண்பனின் ஊரின் வழியாக பயணிக்க, பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவனை தேட, அந்த தேடல் முடியும் இடம் கௌரவக் கொலையாக இருக்கிறது. 

அவனின் நண்பன் காதலித்தப் பெண் உயர் சாதியை சேர்ந்தவள். கௌரவம் பார்த்த அவளின் வீட்டு ஆண்கள் அவர்கள் இருவரையும் கொலை செய்துவிடுகிறார்கள்...அதை கதாநாயகனும் அவன் நண்பர்களும் கண்டுபிடிக்கிறார்கள். மீடியா, சமூக வலைதளங்கள் என்று அனைத்தையும் உபயோகித்து உடன் படித்த நண்பர்களை வரவழைத்து போராடி கடைசியில் கொலையை கண்டுப்பிடிக்கிறார்கள்.      





நிறைகளும் குறைகளும்...

நிஜத்தை கதைப் பண்ணியிருக்கிறார்கள். நேரடியாய் கதைப் பண்ணாமல் நண்பனின் மூலமாய் சொல்லியிருக்கும் முறை சற்று வித்தியாசமானது. இதில் நாமும் கதை வழியாகவே பயணிப்பதால் நமக்கு அந்த வன்முறையின் முழு பாதிப்பும் தெரியாமல் மிதமாய் கதை நகர்கிறது. 

ஆனால் அதுவே டைரக்டர் தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தி சொல்ல முடியாமல் போனதற்கும் நம் மனதில் இந்த சமூக கொடூரம் சரிவர பதியாமல் போனதற்கும் காரணமும் ஆகிறது. 

இதை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான். 


இதில் உயர் சாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஹரிஷ் தங்களின் பங்கை ஒழுங்காய்ச் செய்திருக்கிறார்கள். எல்லா திரைக்கதைகளிலும் இருக்கும் பெரிய வில்லன் அமைதியாகவும் சிறிய வில்லன் கோபமாகவும் வரும் ஸ்டாண்டர்ட் பார்மட் இந்த படத்திலும் உண்டு. பிரகாஷ் ராஜின் அழுத்தமான நடிப்பினால் அந்தக் குறை காணாமல் போய்விட்டது. 





ஹீரோ அல்லு சிரிஷ் நமக்கு புதுசுதான். இந்த திரைக்கதைக்கு தேவையான இளவயதின் சுறுசுறுப்பை கண்களில் காட்டியிருக்கிறார். இயல்பாய் நடித்திருக்கிறார். 




ஹீரோயின் எமி கௌதமுக்கு கதையில் இருக்கும் பங்களிப்பு குறைவுதான். அதை டைரக்டர் சொன்ன வார்த்தைகளின் வழி நடித்திருக்கிறார்.  




ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் நண்பன் மூவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் யதார்த்தமானவை. 

இப்போதிருக்கும் படங்களில் வருவது போல் வக்கிரமான காமெடி இல்லாமல் எடுத்திருப்பதே இந்த படத்தின் தரத்தைக் கண்பித்துவிடுகிறது. 

ஆடிசம் வந்த பையனாக வரும் அந்த சிறுவன் கூட பேசாமலே நடித்திருக்கிறான். இளங்கோ குமாரவேல், நாசர், ஸ்ரீ சரண் அனைவரின் யதார்த்த நடிப்பு படத்தின் கதைக்கு ஆணித்தரமாய் அஸ்திவாரம் போடுகின்றன. 

காதல் காட்சிகள் எதுவும் பெரிதுப்படுத்தப்படவில்லை என்பதே இதில் சந்தோஷமான விஷயம். சாதாரணமாய் சந்திப்புக்களை உருவாக்கிக் கடற்கரைக் காதலை ஒதுக்கியிருக்கிறார்.  

'ஒரு கிராமம் கெடக்கு....' என்ற ஒரு பாட்டு, கானா பாலா, பாடியது மட்டும் நல்லாயிருக்கு. 




அங்கங்கே சில தோய்வுகள் கதையில் இருக்கின்றது. 


கதாநாயகன் தன் நண்பர்களை அழைத்து வருவது வரைக்கும் சரிதான். அடுத்து வரும் காட்சிகள் அந்த டெம்போவைக் கொண்டு செல்லவில்லை. மறுபடியும் கதாநாயகனே அலைவதாகத் தான்  காட்சிகள் வருகிறது. 

பாழடைந்த கோயில் என்று அந்த ஊரினரால் காட்டப்படும் ஒரு இடம் பயம் தருவதாக இல்லவே இல்லை. அந்த சிறுவன் அங்கே தான் இருக்கிறான் என்பதும் சாதாரணமாகவே காட்டப்படுகிறது. 

சித்தர் என்று ஒருவர் வருகிறார். இதுவும் எல்லா படங்களிலும் வரும் பைத்தியக்காரன் கதாபாத்திரம் போல். தவிர்த்திருக்கலாம் இதை. 

அந்த சிறுவன் வரைந்த படங்களை ஹீரோவும் அவன் நண்பர்களும் ஆராயும் போது பார்த்தவுடனே கண்டுப்பிடித்துவிடக் கூடிய ஒரு விஷயத்தை திருப்பி திருப்பி காண்பித்து கொஞ்சம் சலிக்க வைத்திருக்கிறார்கள்.

கடைசிக் காட்சியின் போது பெரிய குடும்பத்தில் இருக்கும் இரு பெண்களும் (மனைவியும் மருமகளும் ) 'இனி இங்கு இருக்க மாட்டோம் ' என்று கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். பிரகாஷ்ராஜும் தற்கொலை செய்துக் கொள்கிறார். ஏதோ அவசர முடிவு போல் அமைத்திருக்கிறார் டைரக்டர். 

இந்த மாதிரி திரைக்கதையில் சில இடங்களில் தோய்வு இருந்தாலும் கதையை சரியான பாதையில் ராதாமோகன் இட்டுச் செல்வதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. 


டைரக்டர் ராதாமோகன்....




பாராட்டியே ஆகவேண்டும் இந்த கதையை எடுத்ததற்கு. ஒரு சமூக அநீதியை வன்முறை இல்லாமல், தியேட்டர்கள் பற்றி எரியாமல் ஒரு கிளை கதையாய் எடுத்து கௌரவக் கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். 

கௌரவம் என்ற போர்வையில் இரு உயிர்கள் பறிக்கப்படும் கொடூரமான செயலை தொட்டுச் சென்றிருக்கிறார். சிறு பாதிப்பையும் உண்டு பண்ணியிருக்கிறார். 



சமூகக் கொடுமையைக் கதையின் கருவாகக் கொண்டு அதை பணியாரமாக்க பூரணமாய் அதை மாவின் உள்ளே வைத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அவசியமில்லைதான். ஆனாலும் இந்த சமூகத்தில் நல்லதொருப் படைப்பைப் படையலாக்கத் தேவையாயிருக்கிறது.