Showing posts with label அகிலா. Show all posts
Showing posts with label அகிலா. Show all posts

Saturday, 2 November 2024

மெய்யழகன் | ஆண்கள் உலகம் | திரை விமர்சனம்

மெய்யழகன் 

ஆண்கள் உலகம் 




இயக்கம்: பிரேம் குமார் 

நடிகர்கள்:    கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி 

ஒளிப்பதிவு:     மகேந்திரன் ஜெயராஜூ

எடிட்டிங்: கோவிந்தராஜ்

இசை: கோவிந்த் வசந்த்

தயாரிப்பு நிறுவனம்: 2D எண்டடெயின்மெண்ட் (ஜோதிகா, சூர்யா)

******

மெய்யழகன்

 


மெய்யழகனை எழுதும் அளவுக்கு உந்தியிருப்பது இரண்டு விடயங்கள்: 
ஒன்று, கதையின் பின்புலத்தில் கத்தியின்றி இரத்தமின்றி வெட்டப்படும் உறவுக்கயிறு. 
இரண்டாவது, கண்முன் காட்டப்படும் கிராம, நகர மனித மேம்பாடுகள்/சிக்கல்கள். 


வீட்டு / சொத்து பிரச்சனை: 

திரைக்கதையில், எடுத்ததும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக காட்டப்படும் ஒரு குடும்பம் தனது வீட்டைத் துறந்து இரவோடு இரவாக வெளியேறும் காட்சி. அந்த வீடு அந்த குடும்பத்தலைவரின் சகோதரியின் கைக்கு போய் சேருவதாகப் பேசுகிறார்கள். அதுவும் கூட முணுமுணுவென்று. பின்னால் அந்த பிரச்சனைக் குறித்து பேசுவார்கள் என்று பார்த்தால், யாரும் அது குறித்து பேசவில்லை. கல்யாண வீட்டு சாப்பாட்டு அறையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அமர்ந்து சாப்பிடுவதாகக் காட்டுகிறார்கள். அவ்வளவே. படம் பார்க்கிற நீங்கள் அருளின் பக்கமாக நிற்கச்செய்யும் உத்திதான் இது. நாம் தேடும் விடையை கதை நிராகரிக்கிறது. நான் சொல்வதை, நான் காட்டுவதைதான் நீங்களும் பார்க்க வேண்டும்; நம்பவேண்டும் என்பதாக செல்வதால், நமது மனசு அருள் கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கொள்ள முதலில் சற்று சிரமப்படுகிறது.    

இன்றைய சமூகத்தில்  வரதட்சணை என்னும் கான்செப்ட் மீண்டும் வேர் விட்டு முளைப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொலைகாட்சி விவாதங்கள் மூலம் அவை தூசு தட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. கல்யாணத்திற்கு நிற்கும் பெண்பிள்ளைகளை வைத்தே காய் நகர்த்துகிறார்கள். அதை பெண் பிள்ளைகள் ஆதரிப்பதும் நடக்கிறது. எம்மாதிரியான குடும்பங்களில் அது முளைவிடுகிறது என்றால், எந்த குடும்பங்களில் பரம்பரை சொத்து என்ற ஒன்று இல்லையோ, அங்கு அந்த வீட்டு பெண்பிள்ளைகள் பெற்றோர் கடன்பட்டாவது, தனக்கு கல்யாணத்தின் போது, வேண்டியதை செய்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள், அல்லது நினைக்க வைக்கப்படுகிறார்கள். அதை ஒரு முதலீடாக, அந்த பெண்பிள்ளைகள் பார்ப்பதுதான் வருந்தத்தக்க விஷயம். பெண்ணுக்கு படிப்பை கொடுப்பதன் நோக்கமே, அதை பயன்படுத்தி, அவள் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பல பெண்பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு, வீட்டிலேயே இருந்து கொண்டு ஹவுஸ் வைப்பாக வாழ்வது சுகம் என்று நினைக்கிறார்கள். இந்த விடயத்தையும் பிரமோட் செய்ய ஒரு கூட்டம், ஊடகங்களில் புறப்பட்டு வந்திருக்கிறது. 

இங்கு சிரமப்படுபவன் ஆண் எனும்போது, அவனுமே வரதட்சணையை ஆதரிக்கிறான். திருமணத்தின் போது அதீத நகைகளை கொடுப்பதையும், கார் பைக் என்று கொடுப்பதையும் நிறுத்திவிட்டால், வீட்டை பிரிக்கும்போது அல்லது சொத்தை பிரித்தெழுதும் போது, பெண்பிள்ளைகளுக்கும் அந்த சம உரிமையை அளிக்க தயங்காத ஒரு நிலை உருவாகும். சொத்தை ஆண் மையப்படுத்துதல் குறையும். நம்முடைய சமூகத்தில், திருமணத்தின் போது பெண் வீட்டார் அதிகமான செலவுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. 'உன் கல்யாணத்துக்கு அப்பா நிறைய செய்துட்டார். அதனால் உனக்கு சொத்தில் பங்கு கிடையாது' என்ற தோரணையில் ஆண் வாரிசுகள் பேசுகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, இரு வீட்டாரும் சமமாக செலவுகளை ஏற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்தது. இதன் பின்னாலிருக்கும் சமூக அரசியலே தனி. பெண்ணை சீதையின் உருவகத்திற்கு மாற்றும் ஆதிக்கக்கூறுகள்தான் இவை என்பது புரியாத இன்றைய நடுத்தரவர்க்கத்து பெண்கள்/குடும்பங்கள் பலியாவது வருத்தமான ஒன்று. 

பெண்ணுக்கான திருமணச்செலவைக் கணக்குக்காட்டி, பல குடும்பங்கள் சொத்து பிரிக்கும் விடயத்தில் கோர்ட் வாசற்படி ஏறி வருடக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஆண் பெண் வீட்டார் இருவரும் சமமாக ஒரு திருமணத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுக்கும்போது, சொத்து பிரித்தல் கட்டத்தில், அந்த வீட்டின் ஆண் வாரிசுகள் பெண் பிள்ளைகளுக்கும் சொத்துக் கொடுப்பது குறித்து வருத்தம் இன்றி, தயக்கம் இன்றி செய்வார்கள். அவ்வாறு இல்லாமல் போகும்போதுதான் இந்த திரைப்படத்தில் காட்டியபடி குடும்பத்திற்குள், உறவுகளுக்குள் பலவித சங்கடங்களும் நெருடல்களும் உண்டாகின்றன எனலாம். ஆனால் இந்த திரைப்படம் அது குறித்து ஒரு லைனை மட்டும் இழுத்துவிட்டு, ஒரு நாள் கூத்தாக நடைபெறும், கிராமத்தில் சொந்த வீட்டை இழந்த ஒரு நகரத்தானின் கதையாக, பின்நவீனத்துவ பாணியில் சிறுகதையொன்றை அருமையாக மேடையேற்றிருக்கிறார்கள். 
 
இந்த திரைக்கதை சொத்துப்பிரிப்பு பிரச்சனையை பின்னுக்குத் தள்ளி வைத்து, அதன் மேல் ஊரை வெறுக்கும் அல்லது ஊரை எதிர்நோக்க முடியாத அருளின் உளசிக்கலை முக்கியப்படுத்தி உள்ளது. மறைக்கப்பட்ட இந்த பின்புலத்தைப் பற்றி திரைப்படத்தில் அதன்பிறகாக யாரும் பேசாமல் போயிருந்தால் பரவாயில்லை. அந்த டாபிக் தான் இதன் மூலம் என்பது போல, சைக்கிள், ஜல்லிக்கட்டு என்றெல்லாம் சுற்றி வந்து, கடைசியாக மெய்யழகன், 'அந்த நாலு பேரை மன்னிச்சிடுங்க அண்ணே' என்கிறான். தன்னையுமறியாமல் (அறியாமல் எல்லாம் இல்லை) கதாசிரியர், என் கதையோட மையப்புள்ளி இதுதான் என்று சிவப்பு மை கொண்டு லைன் போடுகிறார். 


கிராம, நகர மனித சிக்கல்கள்: 

இந்த சிக்கல்களை பல கதைகள் பேசியிருக்கின்றன. கிராமத்து ஆணுக்கும் நகரத்து பெண்ணுக்குமாக (மாட்டுக்கார வேலன், பட்டிக்காடா பட்டணமா, தம்பிக்கு எந்த ஊரு, சகலகலா வல்லவன்) இருக்கும் சிக்கல்களைத் திரைக்கதைகளாக நாம் பார்த்துவிட்டோம். ஆண் மைய சமூகத்தில், நகரத்து பெண் சேலை கட்டி, குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவாள். அவையெல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டவை. 

உறவு அல்லது நட்பை அடிப்படையாகக் கொண்டு, ஆணுக்கும் ஆணுக்குமான ஈகோ சிக்கலைப் பேசுகிறது இப்படம். அதையும் கூட சில காட்சி அமைப்புக்களில் கிராமத்துக்காரன் அப்பாவி, நல்லவன் என்ற கோணத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பதை உணரமுடிகிறது. அதன் உச்சமாக, 'நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன், நீயும் அப்படியாகு' என்று காட்டுவதற்காகதான் மெய்யழகனின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருப்பதும் புரிகிறது. இது ஒருவகையில் நகரத்துக்காரனான அருளின் குற்றவுணர்வைத் தூண்டுதல். அதன் பொருட்டுதான் இந்த கதையை கதாசிரியரும் இயக்குனருமான பிரேம்குமார் நகர்த்தியிருக்கிறார். 

எனக்கு இந்த கதையின் பின்நவீனத்துவம், அதன் பொருட்டு அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் (இழுவை காட்சிகளும் உண்டு) பிடித்திருக்கிறது எனலாம். இம்மாதிரியான தற்செயலாக நேரும் பிணைப்பை, ஆணுக்கான இந்த சுதந்திர காட்சியமைப்புக்களைப் போல பெண்களுக்கும் அமைக்கமுடியுமா என நான் பலமுறை யோசித்திருக்கிறேன். 'அவள் ஒரு தொடர்கதை' என்று நினைக்கிறேன். படாபட் ஜெயலட்சுமிக்கும் சுஜாதாவுக்குமான நட்பை, படாபட் சுஜாதா மேல் இழைந்து குழைந்து அருவெறுக்க வைத்திருப்பார்கள். பெண்கள் நடிக்கும் காட்சி என்றால் மார்பகங்கள் உரசிக்கொள்ளும் அளவுக்கு ஏன் ஆபாசமாக்க வேண்டும்? ஆண் மைய சமூகத்தைச் சந்தோஷப்படுத்தவா? ஏன் அது இயல்பாக அமையவே கூடாதா என்ற கேள்விகள் என்னுள் எழுந்து பல காட்சிகளை நான் ஒதுக்கியிருக்கிறேன். ஆனால் இதிலும் கூட ஆணுக்கும் ஆணுக்குமிடையே ஒரு கட்டத்தில் இழைதல் அதிகமாவதும், பின் அக்காட்சி, கதையின் அடுத்த கட்டத்திற்கு நகரும்போது, இழைவு சரிசெய்யப்படுவதுமாக செல்கிறது. ஆனால் இத்தகைய நட்பை, காதலை, பிணைப்பை பெண்களிடையே காட்சிப்படுத்த திரைப்படங்கள் ஏன் முயலுவதில்லை என்னும் கேள்வியை 'ஆட்டோகிராப்' படத்திலிருந்து பல பெண்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

கதாபாத்திரத்தை உள்வாங்குதல் என்று பார்த்தால், கார்த்தி சரியாக செய்திருக்கிறார். அரவிந்த்சாமியை நாம் எப்போதுமே நகரத்து அழகனாக ஒரு பிம்ப கட்டமைப்பில் வைத்திருக்கிறோம். அப்படியென்றால் - சிரிப்புடன், கண் சிமிட்டலுடன் சீன் டூ சீன் கதாநாயகன் நகர்வதை உறுதி செய்திருக்கிறோம். அதாவது நடிப்பு தேவையில்லை. அரவிந்த்சாமி எந்த கதாபாத்திரத்திலும், இப்படியே வந்து போவார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த படம் அவரின் நடிப்பைக் கோரியிருக்கிறது. அதற்கு பெரிதாக அவர் நியாயம் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. நிறைய இடங்களில் கார்த்தியை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுவே நடிப்பு என்று அரவிந்த்சாமி தரப்பில், இயக்குனர் தரப்பில் நியாயப்படுத்தலாம். சைக்கிளைக் குறித்து கார்த்தி உணர்ச்சி வசப்பட்டு பேசும்போதும், ஜல்லிக்கட்டு காளைக் குறித்த உரையாடலின் போதும் கார்த்தியை ரசிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே நகரத்து நாயகன் வருவதால், அரவிந்த்சாமிக்காகவே அருளை உருவாக்கியிருக்கிறார்களோ என்று தோன்றியது. கார்த்தி வீட்டிலிருந்து குற்றவுணர்வுடன் வெளியேறும் இடத்தில் மட்டும் அவர் அருள் என்னும் கதாபாத்திரத்திற்குள் சென்று வந்தது போலவிருந்தது. 

இத்திரைப்படத்தில் பெண்கள்? பேசும்படி இல்லை என்பதைவிட, இக்கதையில் அவர்கள் செய்வதற்கு ஏதுமில்லாதது போல செய்துவிட்டார்கள் என்று புரிகிறது. சொத்து பிரச்சனையில் அருளின் அத்தையைப் பேசவைத்திருக்கலாம் அல்லது அருளின் மனைவி அது குறித்து பேசியிருக்கலாம், மெய்யழகனின் மனைவி சும்மா சிரித்துக்கொண்டு வந்து உபச்சாரம் செய்வதைவிட வேறு ஏதாவது முக்கியமாக பேசியிருக்கலாம்... இப்படி நிறைய 'லாம்' கள். ஆனால் முக்கியத்துவப்படுத்த வேண்டியது, அதாவது prioritize செய்வது, என்ற ஒன்றை நோக்கி சென்றதில், திரைக்கதை பெண்களைப் பின்னுக்குக் கொண்டு போயிருக்கிறது.

ஒளிப்படக்காட்சிகள், இசை ஓகே. கமலஹாசனின் குரலில் 'யாரோ இவன் யாரோ' பாடல் ஓகே. 

முதலில் கூறிய நுண்ணரசியலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இப்படம் தனியொரு மனித ரசனையை நம்முடன் பகிர்ந்து கொள்வது புரிகிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் போதும், சில பார்வைகளை முன்வைப்பதன் மூலம், அது குறித்த உரையாடல்கள் தொடரும் என்றுதான் நான் நினைக்கிறேன். 


மெய்யழகன் - ஆண்களிடையே ஊடாடும் புரிதல் 









Sunday, 20 June 2021

ஷேர்னி (Sherni) - இந்தி சினிமா - ஒரு பார்வை

  ஷேர்னி - Sherni Movie



ஷேர்னி திரைப்படத்தை OTT தளத்தில் பார்க்க நேர்ந்தது. முந்தைய நாளே அந்த படம் என் கண்ணில் பட்டிருந்த போதிலும், மொழி தடுமாற்றம் - இந்தி மொழி படம் - காரணமாக யோசித்துவிட்டேன். ஆனாலும் அதன் கதை சுருக்கம் என்னை பார்க்காமல் ஒளிந்து கொள்வதற்கான காரணங்களைக் கேட்டது. கேள்விகளே, மனிதனின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. படம் பார்க்கப்பட்டுவிட்டது என்னால். 

Sherni என்றால் இந்தியில் பெண் சிங்கம் என்று பொருள். ஆனால் இந்த படத்தில் வருவது பெண்புலி. புலிக்கு உருது மொழியில் 'ஷேர்' என்பதும் அதுவே, பேச்சு வழக்கு மொழியாய் இந்தியிலும் அமைந்துவிடுவது உண்டு. அதுதான் பெண்புலியாய் 'ஷெர்னி'. 




மனிதர்களை வேட்டையாடும் பெண்புலியொன்று மலைகிராமங்களில் சுற்றித்திரிய, ஒரு காட்டை விட்டு மற்றொன்றுக்கு நகர்ந்து இரண்டு குட்டிகளை ஈன்று, பேராசையும் மமதையும் கொண்ட மனிதர்களிடம் சிக்கி இறந்து போவதே கதை. இங்கு வித்யா பாலன் (Vidya Balan) காட்டிலாக்கா அதிகாரியாக இடமாற்றத்தில் வந்து சிக்குகிறார். ஆண்கள் நிறைந்திருக்கும் அலுவலக சூழல், புலியைக் கொன்று பிடிக்க வேட்டையாளர்களின் சாதுர்யம், அதை சாதகமாக்கும் அரசியல் நாயகர்கள், வனத்தை நேசிக்கும் ஆனால் பயம் கொள்ளும் மலை வாழ் மக்கள் என்று கதை யதார்த்த களத்தைச் சுற்றி இயங்குகிறது. 

வனத்துறைக்குள்ளே இரண்டாய் உடைகிறது மனித அரசியல். மலைவாழ் மக்களுடன் தொடர்பில்லா மேல் தட்டு அதிகாரிகள், மக்களை, அவர்களின் மலையைச் சுற்றி இருக்கும் வாழ்விடங்களை, ஆடு மாடுகள் மேய்ப்பிடங்களை புரிய முடியாத அந்த அதிகார வர்க்கம், அவர்களுக்கான அரசியல் தொடர்புகள், இவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் கீழ் மற்றும் நடுத்தர தட்டு அதிகாரிகள், அதில் ஒன்றாய், காட்டிலாக்கா அதிகாரியாய் வரும் வித்யா பாலன் என்று கதை யாரையும் முதன்மைபடுத்தாமல் பிரச்சனையை மட்டும் திரைப்படம் முழுமையும் இழுத்து செல்வது சிறப்பு.




"ஒரு பொம்பளையை அனுப்பியிருக்காங்க.." என்ற பெண்ணினம் குமுறச்செய்யும் சொற்கள், அதை கேட்டதும் புலியாய் பொங்கி எழாமல் கண்களில் மட்டும் சிறிது சலிப்பைக் காட்டியபடி சாதாரணமாக பேசத்தொடங்கும் வித்யா பாலன், மிக நேர்த்தியான தேர்வுதான் இக்கதைக்கு. 

"நான் பார்த்துக்குகிறேன்.." என்று தைரியமூட்டும் மேல் அதிகாரியும் அரசியலுக்குள் தான் இயங்குகிறார் என்று தெரிந்ததும், நிதானமாய் ஆனால் கோபம் கலந்த, "கோழை" என்ற சொல்லுடன் விலகுவதும் சிறப்பு. யதார்த்தம் பேசுவதற்கு இங்கு ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? மனித நேயம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும். 

இங்கு வித்யா பாலனுக்குப் பதிலாக ஒரு ஆண் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் பெரிதாய் மாறியிருக்க போவதில்லை என்பது என் கருத்து. அதனால் இங்கு தலைப்பில் இருக்கும் பெண் புலி Sherni என்பதை நான் அந்த காட்டு புலிக்கானதாக நான் எடுத்துக் கொள்கிறேன். படத்தின் இறுதிவரை என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவர் ஒரு பெண் அதிகாரி என்ற உணர்வை (குடும்பத்தாலும் அதிகமான மன உளைச்சல் இல்லை), பாலின வேறுபாட்டால் பெரிதாய் பாதிக்கப்பட்டதாய் எங்கும் காட்டப்படவில்லை அல்லது வித்யா பாலன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை இயக்குனர் பெண் கதாபாத்திரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று எடுத்திருந்தால், இதை, இயக்குனர் அமித் மசூர்க்கர் (Amit Masurkar) அவர்களுக்கு ஒரு பாராட்டாய் தெரிவிக்கிறேன். வித்யா பாலனை மனதில் வைத்துதான் காட்டியிருந்தார் என்றால், அதன் தீவிரம் போதவில்லை என்று என்னால் சொல்லமுடியும். 

கிராபிக்ஸ் புலி வந்து திரைப்படத்திற்கான பார்க்கும் ரசனையை குறைத்துவிடுமோ என்ற யோசனை என்னுள் இருந்தது. அவ்வப்போது அதை காட்டவேண்டிய கட்டாயங்கள் நேரும் இடத்தில், நிஜ புலியானது, வனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் வழியாக காட்டப்படுகிறது. 


ஷரத் சக்சேனா



Conservationist என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஷரத் சக்சேனா (Sharat Saxena) இலகுவாக யதார்த்தத்தில் வேட்டைக்காரன் இப்படிதான் இருப்பான் என்பதை வடிவமைக்கிறார். வனப்பகுதிகளில் ரிசார்ட் கட்டுவதும், விலங்குகளை வேட்டையாடி அதில் வரும் புகழை போதையாய் கொண்டாடுவதும் இன்றைய மான் வேட்டை அத்துமீறல்களின் உளவியலாக கொள்ளலாம். 


இயக்குனர் அமித் மசூர்க்கர்



இந்த படத்தில் புலி என்பது ஒரு குறியீடு. அவ்வளவே.. புலி என்பதை இயற்கைக்கான, மற்ற விலங்குகளுக்கான குறியீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் எந்த துறைக்கும் பொருத்திக்கொள்ளலாம். 


இந்த பதிவின் தலைப்பில் 'ஷேர்னியும் நானும்..' என்பதில் என்னுடைய தனிப்பட்ட மனநிலை ஒளிந்திருக்கிறது. 

சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்கொல்லி புலிகளைக் கொன்ற ஜிம் கார்பெட்டின் எழுத்தின் மீது ஒரு மையம் உண்டு. அவர் மனிதர்களைக் கொல்லும் புலிகளை மட்டுமே கொன்றிருக்கிறார். அதையும் அவர் அந்த கிராமத்து மக்களிடம் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே வேட்டைக்குக் கிளம்புவாராம்.

இத்திரைப்படத்திலும் அதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அன்றைய காலகட்டங்களில் மனிதனை மிருகங்களிடமிருந்து பாதுகாக்க பெரிதாய் முயற்சிகள் இல்லை. இந்தியாவில் சரணாலயங்கள் வந்ததே 1936யில் தான். அதனால் அரசு இதைதான் செய்யமுடியும் என்பது அன்றைய களநிலவரம். 

இயற்கையின் மீது தீரா மதிப்பும் காதலும் கொண்டவராக இருந்த அவர், ஒரு முறை, மூன்று மிலிட்டரி அதிகாரிகளை வேட்டைக்கு அழைத்து சென்ற இடத்தில், அவர்கள் கிட்டத்தட்ட 300 நீர் பறவைகளைச் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு பதறிப்போனவர், இனி எக்காரணம் கொண்டும் வேட்டை என்பதை விளையாட்டாய் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். அதனுடன் சூழலியலைக் காக்க முனைகிறார். 

அவருடைய 'முக்தேஸ்வர் ஆட்தின்னி' குறித்த எழுத்தில், ஆட்கொல்லி புலியைக் கொன்றபிறகு என்ன எழுதுகிறார் என்றால், 

"மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லி புலிகளை சுட்டு பிடிப்பது பெரிய திருப்தியை கொடுக்கிறது.... 

..... இதையெல்லாம் விட, மிக உன்னதமான திருப்தியாக நான் நினைப்பது என்னவென்றால், ஒரு துணிவான சிறு பெண்ணுக்கு, இந்த பெரிய பூமியில் ஒரு சிறு பகுதியை பயமின்றி பாதுகாப்பாய் நடக்க வழி செய்தது."

ஆனால், இப்போதோ, தனி மனிதனே தனது தோட்டத்தைச் சுற்றி மின்வேலியிட்டு, பூசணிக்குள் வெடி மருந்து வைத்து பெரிய யானையின் வாயை கிழித்துவிடுகிறான், பெட்ரோல் பாட்டில் வீசி காதை கிழிக்கிறான். முடிவில் அதன் இறப்பை உறுதி செய்கிறான். 

மிருகத்திற்கும் மனிதனுக்குமான இந்த நீண்ட கால போராட்டத்தில் மிருகமும் இவனிடமிருந்து வித்தைகளை கற்றுக்கொள்கிறது; மனிதனும் அதே போல தான். 

மக்களுக்கும் புலிகளுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை நிறுத்த, புலிகளை அவற்றுக்கான சரணாலயங்களிலும் மக்களைக் காடுகளுக்கு சற்று தொலைவிலும் நிறுத்த முயற்சிப்பதே இன்றைய காலகட்டத்தின் செயலாக இருக்கமுடியும். 

இத்திரைக்கதையிலும் அதுவே தீர்வாகிறது. காடுகளுக்கு, அடர்ந்த வனங்களுக்கு, வனவிலங்குகளுக்கு, அங்கு வாழும் மக்களுக்கு நேரும் நியாயமற்ற நிலையைச் சுட்டும் கதைக்களம், ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்நிலையை மாற்ற, பெரிதாய் புரட்சி செய்துவிடமுடியாத சங்கடங்களையும் இதில் காட்டப்படும் பின்புலங்கள் நமக்கு காட்டுகின்றன. இருந்தும், அந்த புலியின் குட்டிகளை காப்பாற்றி படம் முடிக்கப்பட்டது போல, சின்ன சின்னதாய் இயற்கையையும் நம்மையும் சமன் செய்துக்கொள்ளலாம் நாம்.                                    



Friday, 27 December 2019

The Queen (க்யூயின்)

The Queen (க்யூயின்)

~ அகிலா 





சக்தி, ஜி எம் ஆர் என்னும் புனைப்பெயரில் நமக்கு அறிமுகமான முன்னாள் முதல்வர்கள் இருவரை நிஜ பாத்திரங்களாக உலவவிட்டு பார்த்த 'க்யூயின்' (Queen) வெப் சீரிஸ் எல்லாம் நம்ம ஊருக்கு புதுசு. 

சமீபத்துல நெட்பிளிக்ஸ்ல ஜீசஸை gay ன்னு காமெடி செய்துட்டாங்கன்னு பிரேசிலில் கலாட்டா செய்துட்டாங்க. நம்ம ஊரில் இன்னும் இல்ல. இது சம்பந்தமான வழக்கையும் இயக்குனர் கௌதம் 'அது நாவலின் காப்பி' என்று சொல்லி சரிசெய்துவிட்டார். மற்றபடி கொஞ்சம் சிலவற்றை மாத்தி சீன் பண்ணியிருந்தாலும் பெரும்பாலும் அவங்க வாழ்க்கையைக் கார்பன் காப்பி வச்சு எடுத்திருக்காங்க.

'க்யூயின்' சீரிஸில் எல்லாமே க்வீஸ் மாதிரி. பெயரை வைத்து நாம நிஜ கேரக்டரைக் கண்டுபிடிக்கிற வேலை. நல்லாதான் இருக்கு..

அனிதா சிவகுமரன் நாவல், 'The Queen' என்பதை Web Series ஆக தமிழில் எடுத்திருக்கிறார்கள். கௌதம் மேனன்(VTV - வி தா வ), பிரகாஷ் முருகேசன் (கிடாரி) இருவரின் இயக்கமும் இதில் இருக்கிறது. ஸ்கிரிப்ட் ரேஷ்மா கட்டாலா (நீதானே என் பொன் வசந்தம்) வசனங்கள் தெறிக்கிறது. 



அனிதா சிவகுமரன்



கௌதம் வாசுதேவன் 




பிரகாஷ் முருகேசன் 



ரேஷ்மா கட்டாலா 




ஜி எம் ஆர் ஆக வருகிற இந்திரஜித்.. குழி விழுந்த சிரிப்பு, வசீகர கண்கள்.. 'Anyone can fall for him' என்பதை செய்துக்காட்டியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்.. சான்ஸே இல்ல.. கம்பீரம், சோகம், மகிழ்ச்சி எல்லாம் அந்த முகத்தில்.. நிஜம் நம் முன்..

வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், அஞ்சனா எல்லோரும் ஓகே. சக்தியின் 'தோழி' சூரியகலாவாக வரும் விஜி சந்திரசேகர் சற்று சத்தத்தைக் குறைத்திருக்கலாம். 




















பிரதீபன் (தீபன்) மட்டும்தான் பெண் சமூகத்துக்கே எதிரி என்பது போன்ற ஒரு projection. ஜி எம் ஆரின் சாவு வீட்டில் பிரதீபனும் சக்தியும் பேசிக்கொள்ளும் அதிகப்படியான காட்சியமைப்பைத் தவிர்த்திருக்கலாம். ஏன்னா, அங்க நடந்த அத்தனையையும் டிவியில் பார்த்த சாட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் இன்னும் உயிரோடுதான் இருக்காங்க. அன்று அவங்க கிட்டே இருந்த ஆவேசம் தான் அவங்களின் இந்த உச்சிக்குக் காரணம். அதுதான் அவங்க குணம். இதில் ரொம்ப சாத்வீகமா அழுத்தமா காட்சி அமைப்பு மாறியதைப் பார்த்தபோது சீசன் 1 முடிவு காட்சிகள் மனதில் இலேசாகதான் பதிந்தன. அதற்கு முன்பு இருந்த கதை அழுத்தம், ரம்யா கிருஷ்ணனின் முகபாவங்களின் தீவிரம், உச்சரிப்பு வலிமை எல்லாமே சற்றென்று சரிந்தாற் போல் ஆனது. 

சக்தியின் வாழ்க்கைக் குறித்த நிறைய மர்மமுடிச்சுகளுக்கு பல வருடங்களாக மக்களாகத் தேடிய விடைகள் எல்லாம் எளிதாய் உடைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் வாசந்தியின் 'Amma :Jayalalithaa's Journey From Movie Star To Political Queen' படித்திருக்கிறேன். கொஞ்சம் அதிலிருந்தும் கதை உருவப்பட்டிருக்கிறது தெரிகிறது. 

ஒரு காலகட்டத்தில் காதல், காதல் தோல்வி, காமம் குறித்த பல விஷயங்கள் ஒளித்தும் மறைத்தும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய மனிதர்களின் செயலாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றியவர்கள், அரசியல் சதிராட்டத்தில் எதிர்களத்தில் நின்றவர்கள் இப்படியாக பலர் எழுதி வெளிவந்த உண்மையும் பொய்யும் கலந்த வாழ்க்கை சரித்திரங்கள் நம்மிடையே புழங்கத் தொடங்கிய பிறகுதான், பெரிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்க்க அசிங்கப்படுத்த அவசியமில்லையெனும் அறிவு முதிர்வு (civilized / matured attitude) நமக்கு வந்தது எனலாம். 

காந்தி, நேரு, இந்திராகாந்தியென அடுத்தடுத்த புத்தகங்கள் வாசிப்பின் பிறகுதான் உன்னதம் என்பது யாதென்ற புரிதல் உண்டானது. 
'க்யூயின்' சீரிஸையும் அப்படியான நோக்கில்தான் எடுத்திருக்கிறார்கள். இது போன்ற காணொளிகள், பெண், பெண் சார்ந்த வியாபாரத்தன்மை, பெண்ணை பழிக்கும் ஆணின் மூளையுடன் இயங்கும் பெண்ணுலகம், பெண்ணின் மீது ஆண் செலுத்தும் அதிகாரதன்மை போன்ற பல வெளிகளை அசாத்திய கோணங்களில் அணுக சொல்லித்தருகிறது எனலாம். 

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இருவருக்கும் வாழ்த்துகள்..

தமிழில் இன்னும் எதிர்ப்பார்ப்போம்.. 





~ அகிலா..