Showing posts with label கௌரவம். Show all posts
Showing posts with label கௌரவம். Show all posts

Thursday, 16 May 2013

கௌரவம் - ஒர் அலசல்



Cast & Crew

Director : Radha Mohan
Producer : Prakash Raj
Music Director : Thamman
Lyricst : Karkky
Allu Sirish, Yami Gautam, Prakash Raj, Nassar 

கௌரவம் படம் பார்த்து ஒரு பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. சென்ற வாரம் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இலக்கிய வட்டத்தில் அதன் விமர்சனம் வந்தபோது கூட நான் அதிகமாய் பேசவில்லை.  

காரணம் ஒன்றுதான்...மனதில் அந்த படத்தின் தாக்கம் சரியாக இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இந்த படம் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. 


கௌரவக் கொலைகள்...

இந்த கௌரவக் கொலைகள் டெல்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் நிறைய நடப்பதை நாலைந்து மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகள் பெரிதுப்படுத்தி இருந்தன. லண்டனில் வாழும் இந்தியர்கள் கூட வீட்டை விட்டு காதலனுடன் போகும் தன் வீட்டு பெண்களை டாக்ஸி ஓட்டுனர்களை வைத்து கண்டுபிடித்து தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள கொலைகள் செய்வதாக படித்திருக்கிறேன். 


கதை...

இதை தான் ராதாமோகன் படமாக எடுத்திருக்கிறார். இளைஞன் ஒருவன் தற்செயலாக தன் நண்பனின் ஊரின் வழியாக பயணிக்க, பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவனை தேட, அந்த தேடல் முடியும் இடம் கௌரவக் கொலையாக இருக்கிறது. 

அவனின் நண்பன் காதலித்தப் பெண் உயர் சாதியை சேர்ந்தவள். கௌரவம் பார்த்த அவளின் வீட்டு ஆண்கள் அவர்கள் இருவரையும் கொலை செய்துவிடுகிறார்கள்...அதை கதாநாயகனும் அவன் நண்பர்களும் கண்டுபிடிக்கிறார்கள். மீடியா, சமூக வலைதளங்கள் என்று அனைத்தையும் உபயோகித்து உடன் படித்த நண்பர்களை வரவழைத்து போராடி கடைசியில் கொலையை கண்டுப்பிடிக்கிறார்கள்.      





நிறைகளும் குறைகளும்...

நிஜத்தை கதைப் பண்ணியிருக்கிறார்கள். நேரடியாய் கதைப் பண்ணாமல் நண்பனின் மூலமாய் சொல்லியிருக்கும் முறை சற்று வித்தியாசமானது. இதில் நாமும் கதை வழியாகவே பயணிப்பதால் நமக்கு அந்த வன்முறையின் முழு பாதிப்பும் தெரியாமல் மிதமாய் கதை நகர்கிறது. 

ஆனால் அதுவே டைரக்டர் தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தி சொல்ல முடியாமல் போனதற்கும் நம் மனதில் இந்த சமூக கொடூரம் சரிவர பதியாமல் போனதற்கும் காரணமும் ஆகிறது. 

இதை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான். 


இதில் உயர் சாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஹரிஷ் தங்களின் பங்கை ஒழுங்காய்ச் செய்திருக்கிறார்கள். எல்லா திரைக்கதைகளிலும் இருக்கும் பெரிய வில்லன் அமைதியாகவும் சிறிய வில்லன் கோபமாகவும் வரும் ஸ்டாண்டர்ட் பார்மட் இந்த படத்திலும் உண்டு. பிரகாஷ் ராஜின் அழுத்தமான நடிப்பினால் அந்தக் குறை காணாமல் போய்விட்டது. 





ஹீரோ அல்லு சிரிஷ் நமக்கு புதுசுதான். இந்த திரைக்கதைக்கு தேவையான இளவயதின் சுறுசுறுப்பை கண்களில் காட்டியிருக்கிறார். இயல்பாய் நடித்திருக்கிறார். 




ஹீரோயின் எமி கௌதமுக்கு கதையில் இருக்கும் பங்களிப்பு குறைவுதான். அதை டைரக்டர் சொன்ன வார்த்தைகளின் வழி நடித்திருக்கிறார்.  




ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் நண்பன் மூவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் யதார்த்தமானவை. 

இப்போதிருக்கும் படங்களில் வருவது போல் வக்கிரமான காமெடி இல்லாமல் எடுத்திருப்பதே இந்த படத்தின் தரத்தைக் கண்பித்துவிடுகிறது. 

ஆடிசம் வந்த பையனாக வரும் அந்த சிறுவன் கூட பேசாமலே நடித்திருக்கிறான். இளங்கோ குமாரவேல், நாசர், ஸ்ரீ சரண் அனைவரின் யதார்த்த நடிப்பு படத்தின் கதைக்கு ஆணித்தரமாய் அஸ்திவாரம் போடுகின்றன. 

காதல் காட்சிகள் எதுவும் பெரிதுப்படுத்தப்படவில்லை என்பதே இதில் சந்தோஷமான விஷயம். சாதாரணமாய் சந்திப்புக்களை உருவாக்கிக் கடற்கரைக் காதலை ஒதுக்கியிருக்கிறார்.  

'ஒரு கிராமம் கெடக்கு....' என்ற ஒரு பாட்டு, கானா பாலா, பாடியது மட்டும் நல்லாயிருக்கு. 




அங்கங்கே சில தோய்வுகள் கதையில் இருக்கின்றது. 


கதாநாயகன் தன் நண்பர்களை அழைத்து வருவது வரைக்கும் சரிதான். அடுத்து வரும் காட்சிகள் அந்த டெம்போவைக் கொண்டு செல்லவில்லை. மறுபடியும் கதாநாயகனே அலைவதாகத் தான்  காட்சிகள் வருகிறது. 

பாழடைந்த கோயில் என்று அந்த ஊரினரால் காட்டப்படும் ஒரு இடம் பயம் தருவதாக இல்லவே இல்லை. அந்த சிறுவன் அங்கே தான் இருக்கிறான் என்பதும் சாதாரணமாகவே காட்டப்படுகிறது. 

சித்தர் என்று ஒருவர் வருகிறார். இதுவும் எல்லா படங்களிலும் வரும் பைத்தியக்காரன் கதாபாத்திரம் போல். தவிர்த்திருக்கலாம் இதை. 

அந்த சிறுவன் வரைந்த படங்களை ஹீரோவும் அவன் நண்பர்களும் ஆராயும் போது பார்த்தவுடனே கண்டுப்பிடித்துவிடக் கூடிய ஒரு விஷயத்தை திருப்பி திருப்பி காண்பித்து கொஞ்சம் சலிக்க வைத்திருக்கிறார்கள்.

கடைசிக் காட்சியின் போது பெரிய குடும்பத்தில் இருக்கும் இரு பெண்களும் (மனைவியும் மருமகளும் ) 'இனி இங்கு இருக்க மாட்டோம் ' என்று கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். பிரகாஷ்ராஜும் தற்கொலை செய்துக் கொள்கிறார். ஏதோ அவசர முடிவு போல் அமைத்திருக்கிறார் டைரக்டர். 

இந்த மாதிரி திரைக்கதையில் சில இடங்களில் தோய்வு இருந்தாலும் கதையை சரியான பாதையில் ராதாமோகன் இட்டுச் செல்வதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. 


டைரக்டர் ராதாமோகன்....




பாராட்டியே ஆகவேண்டும் இந்த கதையை எடுத்ததற்கு. ஒரு சமூக அநீதியை வன்முறை இல்லாமல், தியேட்டர்கள் பற்றி எரியாமல் ஒரு கிளை கதையாய் எடுத்து கௌரவக் கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். 

கௌரவம் என்ற போர்வையில் இரு உயிர்கள் பறிக்கப்படும் கொடூரமான செயலை தொட்டுச் சென்றிருக்கிறார். சிறு பாதிப்பையும் உண்டு பண்ணியிருக்கிறார். 



சமூகக் கொடுமையைக் கதையின் கருவாகக் கொண்டு அதை பணியாரமாக்க பூரணமாய் அதை மாவின் உள்ளே வைத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அவசியமில்லைதான். ஆனாலும் இந்த சமூகத்தில் நல்லதொருப் படைப்பைப் படையலாக்கத் தேவையாயிருக்கிறது.