Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Thursday, 13 October 2022

பொன்னியின் செல்வன் 1

 பொன்னியின் செல்வன் 1 : ஒரு பார்வை  




இங்கிலாந்து போயிருந்த போது தியேட்டர் சென்று பிகில் படம் பார்த்தது, அப்புறம் கொரோனா, அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து போனபோது அண்ணாத்தே படத்துக்குப் பிறகு இப்போதுதான் தியேட்டர் போய் படம் பார்க்கிறேன்.




PS 1 படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன். பள்ளிக்காலங்களில் அம்மா பைண்ட் செய்து வைத்த பொ செ புத்தகத்தைப் படித்த பிறகு, கல்லூரி காலம் முடிந்து ஒரு முறை படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருஷங்களாக அதை மீண்டும் தொடவே இல்லை. இந்த முறை படம் வெளிவருவதற்கு முன் படிக்கலாம் என்ற ஒரு டெம்ப்டெஷன் இருந்தது. கோவை புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வாங்கியும் விட்டேன். ஆனால் நான்கைந்து பக்கங்கள் வாசித்ததும் பழைய வாசித்த நினைவுகள் வரவும் நிறுத்திக் கொண்டேன். வாசிக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். அத்தனை நேரமும் என்னிடம் இல்லாதிருந்ததும் உண்மை. எந்தவிதமான முன்முடிவுகளும் இல்லாமல் படத்தை நேரடியாகச் சென்று பார்ப்பது என்று முடிவு பண்ணினேன்.



எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்து இங்கு மற்றும் வாட்ஸ்அப்பில் நடத்திய crash course எல்லாம் படித்தும் கதை சரியாக நினைவுக்கு வராததால் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஒருவழியாக படத்தைப் பார்த்தாகிவிட்டது.

1. படத்தை திரையில் பார்த்தபோது, பாகுபலி அளவுக்கு பிரமாண்டம் இல்லையென்றாலும் நன்றாகவே இருந்தது. போர்க்காட்சிகள், கடைசி கடல் காட்சிகள் தவிர அதிக இரைச்சல் இல்லை.

2. திரைக்கதையில் ஒரு சில பொத்தல்கள், இடைவெளிகள் இருந்தபோதும், படம் புரிந்தது. நான் திரைக்கதையை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்.

3. சோழா சோழா பாட்டுக்கு நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு சபாஷ். படத்துடன் இணைந்து பார்க்கும்போது தான், திரைகாட்சிக்கு, சொற்கள் ஓர் அழுத்தத்தைக் கொடுத்திருப்பது தெரிகிறது.

4. ஒரு இடத்திலும் திரை வசனம் ஷார்ப்பா இல்லை. 'நீயும் ஒரு தாயா?' என்று மொக்கையாக ரகுமான் பேசும் ஒரு வசனம். நிறைய இடங்களில் இப்படிதான் இருக்கிறது. பல இடங்களில் abrupt ஆக வசனம் நிற்பது போல இருக்கிறது.

5. ரஹ்மான் இசை நன்றாகவே ஒட்டியிருக்கிறது திரைப்படத்துடன். Historical, Non-Historical என்றெல்லாம் பேச தேவையும் இல்லை.

6. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற பதட்டம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லாத கதைக்களம் இது. அதனால், அடுத்து பாகம் என்ன என்று கிளப்பிவிடாமல், கதையின் தொடர்ச்சியை இரண்டாம் பாகமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைப்பதால், இந்த படம் ஓகேதான். இங்குதான் ஒரு நாவல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தன்னுள் இருக்கும் கதை சொல்லும் பாங்கை ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கிறது. அந்த வகையில் திரைக்கதையாக முடிந்த அளவுக்கு நியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

7. மூலக்கதை அமரர் கல்கி என்று போட்டிருக்கிறார்கள். இதிலெங்கே கல்கியின் மரியாதை குறைந்தது என்று தெரியவில்லை. புத்தகத்தைப் புத்தகமாகப் பாருங்க; சினிமாவை சினிமாவாகப் பாருங்க. ஓப்பீட்டில் வைக்க ஒன்றுக்கொன்று ஏதுவான தளம் அல்ல. இது புரியாததால் தான் கல்கிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என்கிறார்கள்.

8. நடிகர்கள்? அவரவர் இடத்தை அவரவர் நிரப்பியிருக்கிறார்கள். அவ்வளவே..



அடுத்து தியேட்டரில் நடக்கும் அட்ராசிட்டிஸ் :

1. திரையில் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது நிறைய பேர் மொபைல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கண் முன்னாடி இத்தனை பெரிய ஸ்கிரீனில் படம் சத்தமாக ஓடும்போதும் மொபைல் பார்க்க தோன்றுகிறது என்றால், mobile addiction அதிகமாகி இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. சும்மாவே மொபைலைத் திறப்பதும் ஒன்றுமில்லாத மெசேஜுகளைப் படிப்பதும் மூடுவதுமாக இருக்கிறார்கள். ஆடின காலும் பாடின வாயும் நிக்காது என்பது போலதான் இது இருக்கிறது.

2. 40, 50 வயதில் இருப்பவர்களின் இறப்புகளைக் கேள்விப்படும் போதெல்லாம் இங்கு எல்லோரும் கவலை கொள்வதைப் பார்க்கிறோம். தியேட்டரில் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் பாப்கார்னும் பஃப்ஸும், கோக்கும், ப்ரெஞ்சு பிரைஸுமாக தட்டு தட்டாக டப்பா டப்பாவாக நொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். திரையரங்குகளில் நடக்கும் இந்த உணவு வணிகம் நம் உயிரை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. திரையில் புதிதாக வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 'இது யாரு, இது யாரு' என்று 'கண்டுபிடியுங்கள் பார்ப்போம்' என்று competition வேறு பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு குடும்பம் ஓட்டு மொத்தமாகவே இந்த டிஸ்கஷனில் இருந்தார்கள். அதற்காக கூகிளைத் துணைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது பெரும்சிறப்பு 😀.. இந்த படம் குறித்த over hype தான் இதற்கு காரணம்.



அவ்வளவுதான்..
எனக்குப் பொன்னியின் செல்வன் படம் பிடித்திருக்கிறது.
டாட்.



Monday, 18 July 2011

திரைச்சீலை - ஒரு கண்ணோட்டம்

திரைச்சீலை


நூலும் தறியும்


ஓவியர் ஜீவா  

ஓவியர் ஜீவா எழுதிய ‘திரைச்சீலை’ என்ற இந்த நூல் இந்திய தேசிய விருது 2011இல் திரைப்படத்தைப் பற்றி சிறப்பாக எழுதபட்டமைக்காக கொடுக்கப்பட்டுள்ளது. திரைபடத்தின் உலக வரலாறு, இந்திய வரலாறு பற்றி பல கோணங்களில் அலசப்பட்டு உள்ளது. திரைப்பட துறையின் வளர்ச்சி எவ்வாறு இயக்குனர்கள், கதாசிரியர்கள் மற்றும் நடிகர்கள் போன்றவர்களால் வளர்க்கப்பட்டு உள்ளது என்றும், ரசிகர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.

இந்த புத்தகத்தில் பல அத்தியாயங்களில் தனிப்பட்டு ஒரு திரைப்படத்தையும், சில அத்தியாயங்களில் பல திரைப்படங்களை ஒரு சேரவும் அலசி இருக்கிறார். மொத்தமாக சுமார் அறுபது அத்தியாயங்களை எழுதியதாக தகவல். அவற்றுள் முப்பத்தி ஒன்பது மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. மற்ற அத்தியாயங்களையும் படிக்கும் ஆர்வம் இதை படித்தபிறகு நமக்கு ஏற்படுகிறது.

பொழுதுபோக்கு அம்சமான சினிமாவை எப்படி பார்க்க வேண்டும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கதையை  எப்படி தரம் பிரித்து பார்ப்பது, அதை எப்படி உள் வாங்கிக் கொள்வது, நிஜ வாழ்க்கையில் எப்படி அதை பிரதிபலிப்பது என்பதையெல்லாம் தெளிவாக இந்நூலில் கூறியிருக்கிறார். 

திரைப்படங்களை நாம் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமே பார்ப்பது, அதில் நடித்திருக்கும் நடிகர்களை மட்டுமே பிரமாண்டபடுத்துவது போன்ற மனப்பான்மை தவறு என்றும் புரிய வைத்திருக்கிறார். நடிகர்கள்( சிவாஜி உட்பட) இயக்குனர்களால் எப்படி செதுக்கபடுகிறார்கள்? எப்படி திரையில் அதை காட்டுகிறார்கள்? என்பதை தெளிவாக்கி இருக்கிறார்.


ஆசிரியர் ஜீவா :

ஆசிரியர் ஜீவா (Sketched by me)

      
முதலில் இந்த அருமையான நூலின் ஆசிரியரான ஜீவா அவர்களை பற்றி பார்ப்போம். ஜீவா அவர்கள் படித்ததேன்னவோ வழக்கறிஞர் ஆவதற்கு தான். செய்யும் தொழிலோ ஓவியம் வரைவது. தீவிரமான பொழுது போக்கு திரைப்படம் பார்ப்பது. அவரின் திரைப்பட அனுபவத்தைத்தான் இந்த புத்தகத்தில் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் எழுத்தாளராக இல்லாமல் ஓவியராக இருப்பதால் இந்த புத்தகத்தை ஓவியமாக எழுதி இருக்கிறார்.

சிறு வயதிலிருந்து அவர் பார்த்த, பார்க்க மறந்த, அனுபவித்த, உணர்ந்த அத்தனை திரைப்பட விவரங்களையும் நம்மிடையே பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட நூற்றிஎண்பத்து மூன்று(183) வெளிநாட்டு திரைப்படங்களை இந்நூலில் பட்டியலிட்டு உள்ளார்.


அவரின் திரை அனுபவம் பற்றிய கட்டுரைகள் இலக்கிய இதழான ‘ரசனை’ மாத இதழில் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது. அதன் தொகுப்புதான் இந்த அரிய புத்தகம். 2004ஆம் வருடத்திலிருந்தே எழுதப்பட்டிருக்கும் 

இந்த கட்டுரைகளில் அவரின் கண்ணோட்டத்தில், சிந்தனையில், விமரிசிக்கும் திறனில் எந்த மாறுதலும் இல்லாமல் ஒரே சீராக, கோர்வையாக விமரிசிக்க அவரால் முடிந்திருக்கிறது. இதுவே அவருக்கு தேசிய விருதினை பெற்று தந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவரின் எழுத்து நடையும், அதில் இடையிடையே தொனிக்கும் நையாண்டிகளும், படங்களை குறித்த அவரின் யதார்த்தமான பார்வையும் இந்த நூலுக்கு அழகு சேர்த்திருக்கிறது.


என்னுரை :


       புத்தகத்தை படிக்க திறந்தேன். படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் எல்லோரும் பாராட்டும் அளவிற்கு என்னதான் இருக்கிறது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் உந்த முதல் இரண்டு நாட்கள் எந்த நேரமும் திரைச்சிலையும் நானுமாக இருந்தேன். குருவி தலையில் பனங்காயை வைத்தமாதிரி உணர்ந்தேன். ஏன் என்பது புரிந்தது...இந்த புத்தகம் சிறுகதை தொகுப்போ, குறு நாவலோ, நெடுங்கதையோ அல்ல. ஒரே நாளில் படித்துமுடிக்க.....ஒரு சினிமா ரசிகன் சினிமாவை, தான் வாழ்ந்த, வாழ்கிற நாட்களில் எப்படி உள்வாங்கி கொண்டான் என்பதை குறித்த நூல் இது.
     
நான் சாதாரணமானவள். சினிமா என்பது என்னை பொருத்தவரை வெறும் திரையில் தெரியும் வண்ண பொம்மலாட்டம். அதன் பின்புலமோ அதன் ஆக்கசக்தியோ எனக்கு தெரியாது இப்புத்தகம் நிறைய அறிவுபூர்வமான விசயங்களை உள் அடக்கியது. ஒரே நாளில் படித்து முடிக்க வேண்டிய நூல் அல்ல இது என்பது புரிந்தது. நிதானப்படுத்தினேன்.....




மதிப்புரை :

பொதுவாகவே ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு திரைபடத்தையும் முழு கதையோடு விமரிசித்து உள்ளார்.
தி ரெட் வயலின்’ படத்தை குறிப்பிடும் போது, உயிரற்ற பொருட்களை மையப்படுத்தி எத்தனை படங்கள் உலக அளவில் வெளிவந்திருக்கிறது, அவற்றை யார் யார் இயக்கியது என்றெல்லாம் வரிசைப்படுத்தி விட்டு கதைக்குள் செல்கிறார். கதை சொல்லி முடித்தவுடன் அதை அலசியிருக்கிறார். இதே பாணியை நூலின் எல்லா அத்தியாயங்களிலும் காணலாம்.
நகைசுவைப் படங்களை விமரிசிக்கும் போது ஒரே படத்தை மட்டும் கையாளாமல் அநேக படங்களையும் அதன் விவரங்களையும் பதித்திருக்கிறார்.

ஆவணப் படங்களைப் பற்றி குறிப்பிடும் போது, சமுக நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களை அழகான தமிழில் விமரிசித்திருக்கிறார். இதில் ‘ராமையாவின் குடிசை’ என்ற ஆவணத்தை முன்னிறுத்தி இருக்கிறார்.

      ‘பதேர் பாஞ்சாலி’ படத்தின் விமரிசனத்தையும் சத்யஜித் ராயின் போராட்டங்களையும் படித்த போது இத்தனை தகவல்களை இவர் எங்கிருந்து திரட்டினார் என்று நம்மை ஆச்சிரியபடுத்துகிறார் ஆசிரியர். Frame by frame ஆக அதை சொல்லி இருக்கும் விதம் நேர்த்தி.

பேசும் படங்கள் தோன்றிய காலத்தில், நடிகர்கள் முழு ஒப்பனையுடன் பாடிக் கொண்டிருக்க வாத்திய கோஷ்டி கேமரா பார்வைக்கு வெளியே இசைத்து கொண்டிருப்பார்கள்’ என்ற விவரங்கள் புதுமை.


சிவாஜியை பற்றி குறிப்பிடும் போது, ஆசிரியர் உயர்ந்திருக்கிறார் தன் எழுத்தால். அதில் உரைநடையின் போக்கு ஒரே சீராக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கருத்தை இரு வேறு இடங்களில் குழப்பாமல் அழகாக எழுதியிருக்கும் விதம் நேர்த்தி. தமிழின் மேல் நமக்கு பற்று ஏற்படுத்துகிறது.

கதாசிரியரும் நகைச்சுவை நடிகரும் ஆன ஸ்ரீநிவாசனை பற்றி குறிப்பிடும் போது ‘சோ’ -வை நினைவுபடுத்துகிறார்.

'சைக்கிள் டிக்கெட்’ என்று இரு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அதை சரியாக விளக்காதது, தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

     ‘மாயா தர்ப்பன்’ படம் பார்த்த அனுபவத்தை – ஆப்ரேட்டர் ரீல்களை மாற்றி போட்டு மன்னிப்பு கேட்டது, மாற்றி போட்டதை தெரிந்து கொள்ளமுடியாத தெளிவில்லாத திரைக்கதை  – படித்த போது சிரித்தேவிட்டேன்.

     ‘தி பியானிஸ்ட்’ போன்ற போர் சம்மந்தப்பட்ட படங்களையும் ‘தி ரோடு ஹோம்’ போன்ற புரியாத படங்களையும் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். ஆசிரியர் ஜீவாவிற்கு அது அதிகம். இவர் விமரிசனம் எழுதுவதற்காக படங்களை பார்க்கவில்லை. தான் பார்த்தவற்றை விமரிசித்திருக்கிறார்.

வன்முறை படமான ‘சிட்டி ஆப் காட்’ கதையை படித்த போது அந்த படத்தில் இருக்கும் வன்முறை காட்சிகள் நம் கண்முன் விரிகின்றன.

நான் இவ்வளவு நாள் சார்லி சாப்ளினை ஒரு நகைச்சுவை நடிகனாகதான் பார்த்திருக்கிறேன். என்னை மாதிரி நிறைய பேர் இருப்பார்கள். இவரின் கருத்துகளை படித்த பிறகுதான் சாப்ளின் எடுத்த ஒவ்வொரு படத்திற்கு பின்னும் ஒரு நோக்கம் ஒளிந்திருக்கிறது என்று. ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்தை பார்த்திருக்கிறேன். இந்த கோணத்தில் நினைத்து பார்ப்பது இதுவே முதல் தடவை.
Hats Off to the Author...


மாற்று கருத்து :

     Movies won’t get changed. Our perspective towards life gets changed from time to time....இது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்த நூலில் விமரிசிக்கப்பட்ட பெரும்பாலான படங்கள் எல்லாமே கலை பார்வையுடன், யதார்த்தமான வாழ்வை சித்திகரிக்ககூடிய – dry subject films - படங்களாகவே இருக்கிறது. ஆசிரியருடைய ரசனையும் அதை சார்ந்தே இருக்கிறது. இந்த மாதிரி படங்கள்தான் நல்ல தரமான படங்கள் என்று இவர்களுக்கு எல்லாம் யார் சொல்லி கொடுத்தது என்று தெரியவில்லை.

ஜனரஞ்சகமான எந்த படத்தையும் அவர் விமரிசிக்காதது வருத்தம் அளிக்கிறது. அந்த மாதிரி படங்களை அவர் படமாகவே ஏற்றுக்கொள்ளவில்லையோ தெரியவில்லை. அவையும் சமுதாயத்திற்கு ஓர் அளவிற்கு தேவைபடுகிறது. நாள் முழுவதும் உழைத்து சலித்த மக்களுக்கு பொழுது போக்காக, தன்னால் செய்ய முடியாததை கதாநாயகன் செய்து, அவர்களை ஒரு போலி உலகத்துக்குள் இழுத்து சென்று சந்தோஷபடுத்தும் குதூகலமும் மனிதனுக்கு தேவைபடுகிறது. அதை செய்யும் படங்கள் நம் நடைமுறை வாழ்க்கைக்கு மிக அவசியமான ஓன்று என்பது என் கருத்து.


திரைச்சீலை :

இந்த நூலின் மூலம் ஆசிரியர் பல உலக மொழிகளில் வெளியான படங்களை நமக்கு அறிமுகபடுத்தி, நளினமான தமிழில் கதைகள் சொல்லி, திரைப்படத்தை பகுத்தறியும் யுக்தியை நமக்கு சொல்லி கொடுத்து, திரை உலகை பற்றி நமக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தி இருக்கிறார்.

     அவர் நெய்து கொடுத்த இந்த திரைச்சீலையின் வழியாக நாமும் இனி வரும் திரைப்படங்களை பார்த்து ரசிப்போம்.