Thursday, 13 October 2022

பொன்னியின் செல்வன் 1

 பொன்னியின் செல்வன் 1 : ஒரு பார்வை  
இங்கிலாந்து போயிருந்த போது தியேட்டர் சென்று பிகில் படம் பார்த்தது, அப்புறம் கொரோனா, அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து போனபோது அண்ணாத்தே படத்துக்குப் பிறகு இப்போதுதான் தியேட்டர் போய் படம் பார்க்கிறேன்.
PS 1 படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன். பள்ளிக்காலங்களில் அம்மா பைண்ட் செய்து வைத்த பொ செ புத்தகத்தைப் படித்த பிறகு, கல்லூரி காலம் முடிந்து ஒரு முறை படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருஷங்களாக அதை மீண்டும் தொடவே இல்லை. இந்த முறை படம் வெளிவருவதற்கு முன் படிக்கலாம் என்ற ஒரு டெம்ப்டெஷன் இருந்தது. கோவை புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வாங்கியும் விட்டேன். ஆனால் நான்கைந்து பக்கங்கள் வாசித்ததும் பழைய வாசித்த நினைவுகள் வரவும் நிறுத்திக் கொண்டேன். வாசிக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். அத்தனை நேரமும் என்னிடம் இல்லாதிருந்ததும் உண்மை. எந்தவிதமான முன்முடிவுகளும் இல்லாமல் படத்தை நேரடியாகச் சென்று பார்ப்பது என்று முடிவு பண்ணினேன்.எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்து இங்கு மற்றும் வாட்ஸ்அப்பில் நடத்திய crash course எல்லாம் படித்தும் கதை சரியாக நினைவுக்கு வராததால் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஒருவழியாக படத்தைப் பார்த்தாகிவிட்டது.

1. படத்தை திரையில் பார்த்தபோது, பாகுபலி அளவுக்கு பிரமாண்டம் இல்லையென்றாலும் நன்றாகவே இருந்தது. போர்க்காட்சிகள், கடைசி கடல் காட்சிகள் தவிர அதிக இரைச்சல் இல்லை.

2. திரைக்கதையில் ஒரு சில பொத்தல்கள், இடைவெளிகள் இருந்தபோதும், படம் புரிந்தது. நான் திரைக்கதையை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்.

3. சோழா சோழா பாட்டுக்கு நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு சபாஷ். படத்துடன் இணைந்து பார்க்கும்போது தான், திரைகாட்சிக்கு, சொற்கள் ஓர் அழுத்தத்தைக் கொடுத்திருப்பது தெரிகிறது.

4. ஒரு இடத்திலும் திரை வசனம் ஷார்ப்பா இல்லை. 'நீயும் ஒரு தாயா?' என்று மொக்கையாக ரகுமான் பேசும் ஒரு வசனம். நிறைய இடங்களில் இப்படிதான் இருக்கிறது. பல இடங்களில் abrupt ஆக வசனம் நிற்பது போல இருக்கிறது.

5. ரஹ்மான் இசை நன்றாகவே ஒட்டியிருக்கிறது திரைப்படத்துடன். Historical, Non-Historical என்றெல்லாம் பேச தேவையும் இல்லை.

6. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற பதட்டம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லாத கதைக்களம் இது. அதனால், அடுத்து பாகம் என்ன என்று கிளப்பிவிடாமல், கதையின் தொடர்ச்சியை இரண்டாம் பாகமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைப்பதால், இந்த படம் ஓகேதான். இங்குதான் ஒரு நாவல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தன்னுள் இருக்கும் கதை சொல்லும் பாங்கை ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கிறது. அந்த வகையில் திரைக்கதையாக முடிந்த அளவுக்கு நியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

7. மூலக்கதை அமரர் கல்கி என்று போட்டிருக்கிறார்கள். இதிலெங்கே கல்கியின் மரியாதை குறைந்தது என்று தெரியவில்லை. புத்தகத்தைப் புத்தகமாகப் பாருங்க; சினிமாவை சினிமாவாகப் பாருங்க. ஓப்பீட்டில் வைக்க ஒன்றுக்கொன்று ஏதுவான தளம் அல்ல. இது புரியாததால் தான் கல்கிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என்கிறார்கள்.

8. நடிகர்கள்? அவரவர் இடத்தை அவரவர் நிரப்பியிருக்கிறார்கள். அவ்வளவே..அடுத்து தியேட்டரில் நடக்கும் அட்ராசிட்டிஸ் :

1. திரையில் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது நிறைய பேர் மொபைல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கண் முன்னாடி இத்தனை பெரிய ஸ்கிரீனில் படம் சத்தமாக ஓடும்போதும் மொபைல் பார்க்க தோன்றுகிறது என்றால், mobile addiction அதிகமாகி இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. சும்மாவே மொபைலைத் திறப்பதும் ஒன்றுமில்லாத மெசேஜுகளைப் படிப்பதும் மூடுவதுமாக இருக்கிறார்கள். ஆடின காலும் பாடின வாயும் நிக்காது என்பது போலதான் இது இருக்கிறது.

2. 40, 50 வயதில் இருப்பவர்களின் இறப்புகளைக் கேள்விப்படும் போதெல்லாம் இங்கு எல்லோரும் கவலை கொள்வதைப் பார்க்கிறோம். தியேட்டரில் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் பாப்கார்னும் பஃப்ஸும், கோக்கும், ப்ரெஞ்சு பிரைஸுமாக தட்டு தட்டாக டப்பா டப்பாவாக நொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். திரையரங்குகளில் நடக்கும் இந்த உணவு வணிகம் நம் உயிரை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. திரையில் புதிதாக வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 'இது யாரு, இது யாரு' என்று 'கண்டுபிடியுங்கள் பார்ப்போம்' என்று competition வேறு பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு குடும்பம் ஓட்டு மொத்தமாகவே இந்த டிஸ்கஷனில் இருந்தார்கள். அதற்காக கூகிளைத் துணைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது பெரும்சிறப்பு 😀.. இந்த படம் குறித்த over hype தான் இதற்கு காரணம்.அவ்வளவுதான்..
எனக்குப் பொன்னியின் செல்வன் படம் பிடித்திருக்கிறது.
டாட்.Saturday, 24 July 2021

ஓவர்டேக்கும் அந்த டிரக்கும்

ஓவர்டேக்கும் அந்த டிரக்கும் 🚍            


           கெட்டதாய் காட்டப்படும் ஒன்றின் மீது ஏற்படும் ஈர்ப்பு சற்று வசீகரமானது. அது கண்முன் நின்று தொந்தரவு செய்யும்; தூங்கவிடாது. இப்படிதான் 'ஓவர்டேக்' என்னும் படம் பார்த்தும் ஆகிற்று.


            'ஓவர்டேக்' (Overtake) மலையாள படத்தைப் பார்க்க உட்கார்ந்தேன். 2017 யில் வெளிவந்த படம். ஆரம்பித்த கொஞ்ச நேரமும், முடியும் கொஞ்ச நேரமும் மட்டுமே கதை. மற்ற நேரமெல்லாம் Road show தான். அதுவும் பிரவுன் + கிரீன் கலர் dusty மலையின் வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கணவனும் மனைவியும் ஏசி வேலை செய்யாத பழைய பென்ஸ் காரில் செல்ல, அவர்களை தொடர்ந்து வந்து கொல்ல முயற்சிக்கும் டிரக் வித் டிரேய்லர்.. அது ஒரு Kenworth truck.. 🚛
                அந்த சிறிய கார் ஓவர்டேக் செய்ய முயலும் ஒவ்வொரு சமயத்திலும் அதை முன்னே செல்லவிடாமல், விடாது துரத்தும் பெரிய பூதமாய் அந்த டிரக்.. 🚍


              எனக்கு கதை மேல் பெரிய பிரியமில்லை. ஒளிந்து வந்து அட்டாக் செய்யும், துரத்தும், பூச்சாண்டி காட்டும் அந்த டிரக்கை மிகவும் பிடித்துப்போனது. அதன் டிரைவர் யாரென்று காட்டவில்லை; யாராக இருந்தால் என்ன, யாராகவும் இருந்துவிட்டு போகட்டும் என்னும் படியாக அதன் மேல் ஒரு பிரியம். 


              பழைய இரும்பு காய்லான் கடையில் இருந்து வந்தது போன்ற அதன் தோற்றம், இரு புகைபோக்கி குழாய்களின் வழியே வரும் சாம்பல் புகை, பயமுறுத்தும் ஆனால் பிடித்துப்போகும் அதன் முகம்.. அதுதான் வில்லன் என்று மனதுக்குள் விழுந்துவிட்டது.  🚛
                மலையின் மீது வளைந்து நெளிந்து வந்து கனவில் அது துரத்திய போதும் மகிழ்ச்சியாய் எழுந்தமர்ந்தேன். படத்தின் கதையில் பெரிதாய் கொண்டாட அந்த டிரக் மட்டுமே இருந்தது. இது Duel என்ற ஆங்கில படத்தின் ரீமேக். இதற்காக எடுக்கப்பட்ட டிரக் KSEB - Kerala State Electricity Board யின் அணை கட்டும் பயன்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 


                இப்படியான பழைய டிரக்குகளை மலைகளில் கட்டுமான பணி நடக்கும் இடங்களில், பணி முடிந்ததும் அங்கேயே மலை பாறைகளுக்கு இடையில் சொருகி நிற்பதைப் பார்த்திருக்கலாம். நான் வயநாடு செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன். பழைய காலங்களில் இவ்வாறு மலைகளில் இடையிடையே அணை கட்டுமான பணி முடிந்ததும் சிக்கிக்கொள்ளும் பெரிய வண்டிகளை அவ்வாறே விட்டுவிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றை படக்குழுவினர் எடுத்து பயன்படுத்தி இருக்கின்றனர். 


              படத்தின் நாயகர்கள் தப்பித்தாலும், தவறு இழைத்தவனுக்கு தண்டனை கிடைக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்த டிரக்கின் வில்லத்தனத்தை காட்டியே முடிக்கிறார்கள்.  

Sunday, 20 June 2021

ஷேர்னி (Sherni) - இந்தி சினிமா - ஒரு பார்வை

  ஷேர்னி - Sherni Movieஷேர்னி திரைப்படத்தை OTT தளத்தில் பார்க்க நேர்ந்தது. முந்தைய நாளே அந்த படம் என் கண்ணில் பட்டிருந்த போதிலும், மொழி தடுமாற்றம் - இந்தி மொழி படம் - காரணமாக யோசித்துவிட்டேன். ஆனாலும் அதன் கதை சுருக்கம் என்னை பார்க்காமல் ஒளிந்து கொள்வதற்கான காரணங்களைக் கேட்டது. கேள்விகளே, மனிதனின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. படம் பார்க்கப்பட்டுவிட்டது என்னால். 

Sherni என்றால் இந்தியில் பெண் சிங்கம் என்று பொருள். ஆனால் இந்த படத்தில் வருவது பெண்புலி. புலிக்கு உருது மொழியில் 'ஷேர்' என்பதும் அதுவே, பேச்சு வழக்கு மொழியாய் இந்தியிலும் அமைந்துவிடுவது உண்டு. அதுதான் பெண்புலியாய் 'ஷெர்னி'. 
மனிதர்களை வேட்டையாடும் பெண்புலியொன்று மலைகிராமங்களில் சுற்றித்திரிய, ஒரு காட்டை விட்டு மற்றொன்றுக்கு நகர்ந்து இரண்டு குட்டிகளை ஈன்று, பேராசையும் மமதையும் கொண்ட மனிதர்களிடம் சிக்கி இறந்து போவதே கதை. இங்கு வித்யா பாலன் (Vidya Balan) காட்டிலாக்கா அதிகாரியாக இடமாற்றத்தில் வந்து சிக்குகிறார். ஆண்கள் நிறைந்திருக்கும் அலுவலக சூழல், புலியைக் கொன்று பிடிக்க வேட்டையாளர்களின் சாதுர்யம், அதை சாதகமாக்கும் அரசியல் நாயகர்கள், வனத்தை நேசிக்கும் ஆனால் பயம் கொள்ளும் மலை வாழ் மக்கள் என்று கதை யதார்த்த களத்தைச் சுற்றி இயங்குகிறது. 

வனத்துறைக்குள்ளே இரண்டாய் உடைகிறது மனித அரசியல். மலைவாழ் மக்களுடன் தொடர்பில்லா மேல் தட்டு அதிகாரிகள், மக்களை, அவர்களின் மலையைச் சுற்றி இருக்கும் வாழ்விடங்களை, ஆடு மாடுகள் மேய்ப்பிடங்களை புரிய முடியாத அந்த அதிகார வர்க்கம், அவர்களுக்கான அரசியல் தொடர்புகள், இவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் கீழ் மற்றும் நடுத்தர தட்டு அதிகாரிகள், அதில் ஒன்றாய், காட்டிலாக்கா அதிகாரியாய் வரும் வித்யா பாலன் என்று கதை யாரையும் முதன்மைபடுத்தாமல் பிரச்சனையை மட்டும் திரைப்படம் முழுமையும் இழுத்து செல்வது சிறப்பு.
"ஒரு பொம்பளையை அனுப்பியிருக்காங்க.." என்ற பெண்ணினம் குமுறச்செய்யும் சொற்கள், அதை கேட்டதும் புலியாய் பொங்கி எழாமல் கண்களில் மட்டும் சிறிது சலிப்பைக் காட்டியபடி சாதாரணமாக பேசத்தொடங்கும் வித்யா பாலன், மிக நேர்த்தியான தேர்வுதான் இக்கதைக்கு. 

"நான் பார்த்துக்குகிறேன்.." என்று தைரியமூட்டும் மேல் அதிகாரியும் அரசியலுக்குள் தான் இயங்குகிறார் என்று தெரிந்ததும், நிதானமாய் ஆனால் கோபம் கலந்த, "கோழை" என்ற சொல்லுடன் விலகுவதும் சிறப்பு. யதார்த்தம் பேசுவதற்கு இங்கு ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? மனித நேயம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும். 

இங்கு வித்யா பாலனுக்குப் பதிலாக ஒரு ஆண் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் பெரிதாய் மாறியிருக்க போவதில்லை என்பது என் கருத்து. அதனால் இங்கு தலைப்பில் இருக்கும் பெண் புலி Sherni என்பதை நான் அந்த காட்டு புலிக்கானதாக நான் எடுத்துக் கொள்கிறேன். படத்தின் இறுதிவரை என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவர் ஒரு பெண் அதிகாரி என்ற உணர்வை (குடும்பத்தாலும் அதிகமான மன உளைச்சல் இல்லை), பாலின வேறுபாட்டால் பெரிதாய் பாதிக்கப்பட்டதாய் எங்கும் காட்டப்படவில்லை அல்லது வித்யா பாலன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை இயக்குனர் பெண் கதாபாத்திரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று எடுத்திருந்தால், இதை, இயக்குனர் அமித் மசூர்க்கர் (Amit Masurkar) அவர்களுக்கு ஒரு பாராட்டாய் தெரிவிக்கிறேன். வித்யா பாலனை மனதில் வைத்துதான் காட்டியிருந்தார் என்றால், அதன் தீவிரம் போதவில்லை என்று என்னால் சொல்லமுடியும். 

கிராபிக்ஸ் புலி வந்து திரைப்படத்திற்கான பார்க்கும் ரசனையை குறைத்துவிடுமோ என்ற யோசனை என்னுள் இருந்தது. அவ்வப்போது அதை காட்டவேண்டிய கட்டாயங்கள் நேரும் இடத்தில், நிஜ புலியானது, வனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் வழியாக காட்டப்படுகிறது. 


ஷரத் சக்சேனாConservationist என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஷரத் சக்சேனா (Sharat Saxena) இலகுவாக யதார்த்தத்தில் வேட்டைக்காரன் இப்படிதான் இருப்பான் என்பதை வடிவமைக்கிறார். வனப்பகுதிகளில் ரிசார்ட் கட்டுவதும், விலங்குகளை வேட்டையாடி அதில் வரும் புகழை போதையாய் கொண்டாடுவதும் இன்றைய மான் வேட்டை அத்துமீறல்களின் உளவியலாக கொள்ளலாம். 


இயக்குனர் அமித் மசூர்க்கர்இந்த படத்தில் புலி என்பது ஒரு குறியீடு. அவ்வளவே.. புலி என்பதை இயற்கைக்கான, மற்ற விலங்குகளுக்கான குறியீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் எந்த துறைக்கும் பொருத்திக்கொள்ளலாம். 


இந்த பதிவின் தலைப்பில் 'ஷேர்னியும் நானும்..' என்பதில் என்னுடைய தனிப்பட்ட மனநிலை ஒளிந்திருக்கிறது. 

சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்கொல்லி புலிகளைக் கொன்ற ஜிம் கார்பெட்டின் எழுத்தின் மீது ஒரு மையம் உண்டு. அவர் மனிதர்களைக் கொல்லும் புலிகளை மட்டுமே கொன்றிருக்கிறார். அதையும் அவர் அந்த கிராமத்து மக்களிடம் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே வேட்டைக்குக் கிளம்புவாராம்.

இத்திரைப்படத்திலும் அதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அன்றைய காலகட்டங்களில் மனிதனை மிருகங்களிடமிருந்து பாதுகாக்க பெரிதாய் முயற்சிகள் இல்லை. இந்தியாவில் சரணாலயங்கள் வந்ததே 1936யில் தான். அதனால் அரசு இதைதான் செய்யமுடியும் என்பது அன்றைய களநிலவரம். 

இயற்கையின் மீது தீரா மதிப்பும் காதலும் கொண்டவராக இருந்த அவர், ஒரு முறை, மூன்று மிலிட்டரி அதிகாரிகளை வேட்டைக்கு அழைத்து சென்ற இடத்தில், அவர்கள் கிட்டத்தட்ட 300 நீர் பறவைகளைச் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு பதறிப்போனவர், இனி எக்காரணம் கொண்டும் வேட்டை என்பதை விளையாட்டாய் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். அதனுடன் சூழலியலைக் காக்க முனைகிறார். 

அவருடைய 'முக்தேஸ்வர் ஆட்தின்னி' குறித்த எழுத்தில், ஆட்கொல்லி புலியைக் கொன்றபிறகு என்ன எழுதுகிறார் என்றால், 

"மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லி புலிகளை சுட்டு பிடிப்பது பெரிய திருப்தியை கொடுக்கிறது.... 

..... இதையெல்லாம் விட, மிக உன்னதமான திருப்தியாக நான் நினைப்பது என்னவென்றால், ஒரு துணிவான சிறு பெண்ணுக்கு, இந்த பெரிய பூமியில் ஒரு சிறு பகுதியை பயமின்றி பாதுகாப்பாய் நடக்க வழி செய்தது."

ஆனால், இப்போதோ, தனி மனிதனே தனது தோட்டத்தைச் சுற்றி மின்வேலியிட்டு, பூசணிக்குள் வெடி மருந்து வைத்து பெரிய யானையின் வாயை கிழித்துவிடுகிறான், பெட்ரோல் பாட்டில் வீசி காதை கிழிக்கிறான். முடிவில் அதன் இறப்பை உறுதி செய்கிறான். 

மிருகத்திற்கும் மனிதனுக்குமான இந்த நீண்ட கால போராட்டத்தில் மிருகமும் இவனிடமிருந்து வித்தைகளை கற்றுக்கொள்கிறது; மனிதனும் அதே போல தான். 

மக்களுக்கும் புலிகளுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை நிறுத்த, புலிகளை அவற்றுக்கான சரணாலயங்களிலும் மக்களைக் காடுகளுக்கு சற்று தொலைவிலும் நிறுத்த முயற்சிப்பதே இன்றைய காலகட்டத்தின் செயலாக இருக்கமுடியும். 

இத்திரைக்கதையிலும் அதுவே தீர்வாகிறது. காடுகளுக்கு, அடர்ந்த வனங்களுக்கு, வனவிலங்குகளுக்கு, அங்கு வாழும் மக்களுக்கு நேரும் நியாயமற்ற நிலையைச் சுட்டும் கதைக்களம், ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்நிலையை மாற்ற, பெரிதாய் புரட்சி செய்துவிடமுடியாத சங்கடங்களையும் இதில் காட்டப்படும் பின்புலங்கள் நமக்கு காட்டுகின்றன. இருந்தும், அந்த புலியின் குட்டிகளை காப்பாற்றி படம் முடிக்கப்பட்டது போல, சின்ன சின்னதாய் இயற்கையையும் நம்மையும் சமன் செய்துக்கொள்ளலாம் நாம்.                                    Sunday, 21 June 2020

பெண்குயின் - ஒரு பார்வை

'பெண்குயின்'

பெண்கள் சம்பந்தப்பட்ட  திரைக்கதைகளைத் தொடர்ந்து திரையில் பார்த்து வருகிறோம். பெண்கல்வி, பெண் குழந்தைகள், பாலியல் வன்முறை, பெண் முன்னேற்றம் என்று எத்தனையோ பார்த்துவிட்டோம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பெண் சார்ந்த நிலைபாடுகள் திரைக்கதைகளிலும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. 

தன்னை பாலியல் வன்முறை செய்த ஆணையே தேடிப்பிடித்து திருமணம் செய்வதாக, அதுவே, பெண்ணுக்கான நியதி, அவளின் கற்பின் உண்மை என்றெல்லாம் திரைக்கதைகள், உண்மைவிளம்பிகளாக தங்களை பாவித்துக்கொண்டு படங்கள் வெளியிட்டன. அடுத்தடுத்த காலங்களில் தன்னைக் கெடுத்தவனை பெண் பழிவாங்குவதாக கதைகள் வெளிவந்தன. இவை சமூகத்தில் வாழும் பெண்களைப் பிரதிபலித்ததாகச் சொல்லப்பட்டது. இருக்கலாம். அல்லது திரைக்கதைகள் பெண் சமூகத்தைக் கட்டமைக்க முயற்சித்திருக்கலாம். 

பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்முறை, தகப்பனாகப்பட்டவன் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளைத் தேடிச்சென்று கண்டுபிடித்தல் என்று ஏகப்பட்ட கதைகள் வெளிவந்தன கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில். அதே வரிசையில் வந்த கதைதான் இதுவும் என்று கடந்துப் போய்விட முடியவில்லை. 

இக்கதையில் கடத்தப்படுவது ஆண் குழந்தை, தகப்பன் தேடிக் கண்டுபிடிக்காமல் தாயே தேடிக்கண்டுபிடிக்கிறாள் என்றெல்லாம் ஆறு வித்தியாசங்களாக அடுக்கிக் கொண்டே போகலாம்தான். ஆனால், அதுவல்ல இக்கதையின் மையம். இதன் கருப்பொருள் படமெங்கும் தேடினாலும் அத்தனை எளிதில் கிடைக்காததாய் அதை இயக்கிய இயக்குனரே தேடிக்கொண்டிருப்பதாக நம்மை நம்பவைக்கப்படுகிறது. 


ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன ஆண்குழந்தையை அந்த தாய் தேடிக்கொண்டேயிருக்கிறாள். இதற்கிடையில் அவளின் முதல் கணவன் பிரிந்து, இரண்டாவது கணவனின் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கிறாள். எட்டு மாதம்.. அந்த சமயத்தில் பையன் கிடைக்கப் பெறுகிறான். பேசாமல் இருக்கிறான். அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரானவர், உடலுறுப்புகளை விற்பனை செய்ய குழந்தைகளைக் கொலை செய்பவர். அதையும் அவளே ஹிட்ச்காக் வழியில் சென்று கண்டுபிடிக்கிறாள்.

இந்த பையனும் அவரிடம்தான் இருந்தான் என்று செல்லும் கதையில் டாக்டர் கைது செய்யப்பட்டு, அவர் ஒரு Game என்று அந்த பெண்ணுடன் பேச ஆரம்பிக்க... இப்படி சொதப்பலாய் நீளும் கதையில், அவளின் தோழியே தான் கடத்தலுக்குக் காரணம் என்று தெரிய வர, எட்டு மாத கர்ப்பணி பெண்ணுக்கு ஏற்படாத ஆயாசம் பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது. இப்படம் ஒரு விஷயத்தை சரியாய் கையாண்டிருக்கிறது என்றால், அது இன்றைய பெண் சமூக சூழல்தான். பெண் சுதந்திரம், மண விலகல், இரண்டாம் திருமணம் என்று சிலவற்றை இலகுவாகத் தொட்டுச் சென்றிருக்கிறது. இதெல்லாம் இன்றைய சமூகத்தில் சகஜம் என்பது போன்ற கட்டமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


கதை மலைப்பிரதேசம் ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. அழகான மலைகள், பள்ளத்தாக்குகள், திகில் படுத்தும் காட்சிகள் என்று கேமரா சொல்லும் கதையை நாம் ரசிக்கலாம். 

ஏகப்பட்ட குறைகள், திரைக்கதையில் கிழிசல்கள் என்று இருப்பதை நாம் கடந்து வேறு முக்கிய பார்வைகளுக்குள் செல்வோம். முக்கிய பார்வைகள் இரண்டு : 


எட்டு மாத கர்ப்பிணிப்பெண், இத்தனை தூரம் ஒரு கொலைகாரனைத் தேடி இருட்டில், மலையில், காட்டில் அலைவது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருக்கிறது. அதை அந்த கொலைகார டாக்டர் அவளிடம் கேட்கும்போது, 'நான் கர்ப்பிணிதான், மூளை செத்தவள் அல்ல..' என்று அவள் சொல்லும் வசனம் பெண்ணாய் கேட்பதற்கு, ஆஹா என்று இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டும் அதையெல்லாம் தாங்கும் வலு பெற்றதாய் இருக்காது. வயிற்றில் இருக்கும் குழந்தையைவிடவும் ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை முக்கியமாகிப் போகும் சந்தர்ப்பங்கள் அவளை ஒரு நல்ல தாயாய் உயர்த்தினாலும், அதை ஏற்றுக்கொள்ள படம் பார்க்கும் ஒருவனின்/ ஒருத்தியின் மனதை, அவளின் மேடிட்ட வயிறு சலனப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதைதான் ஒரு இயக்குனராய் ஈஸ்வர் கார்த்திக் விரும்பினார் என்றால், அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் எனலாம். 


மனிதனின் மனம் என்பது ஒரு குற்ற உணர்ச்சியுடனே ஒரு நாளின் சிலநேரங்களையாவது கழிக்கும் தன்மை உடையது. பழைய நினைவுகளினாலோ, ஆபத்தின் நேரடி அனுபவத்தினாலோ இம்மாதிரியான சஞ்சலங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். அதை இயக்குனர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மனிதன் அசூயைப்படும், அவஸ்தையாய் சிந்திக்கும் விஷயங்களை பார்க்க வைத்து, அவனின் உளவியலை உற்று நோக்குதல், மனித சமூகத்தில் அந்த வலியின் போக்கைக் கண்டறிதல் என்பது ஒருவித குரூரமான விளையாட்டாய் எடுத்துக்கொள்ளலாம். அதை இப்படத்தில் நிகழ்த்தியிருக்கிறார் என்றும் கொள்ளலாம். 


அல்லது, கர்ப்பிணியாய் இருக்கும் பெண்ணின் தீவிர உளவியல் பிரச்சனையாக, இயக்குனர் இதை கொண்டு சென்றிருக்கலாம். 

'அந்த ஏரியின் பக்கம் போகாதே' என்னும் டாக்டரின் எச்சரிக்கை, அவளை அங்கே போகச் சொல்கிறது என்பது கர்ப்பமாய் இருக்கும் பெண்ணின் மனநிலையின் படிமங்களைக் குறித்து, நம்மை யோசிக்கச்சொல்கிறது. தன் மகனை இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்தவனிடமிருந்து காரணங்களை அறிய விழைகிறாள். அந்த எண்ணத்தைத் தீவிரபடுத்துகிறாள். இது வயிற்றில் வளரும் மற்றொரு சிசுவுக்கான ஆபத்து என்பதைப் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு என்ன பெண் இவள் என்ற சாதாரண கேள்வியுடன் கடந்துச் செல்லமுடியாது. இது அந்த நேரத்து கர்ப்பமாய் இருக்கும் அப்பெண்ணின் தீவிரதன்மை, அதீத அன்பு எதன் மீது சார்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். 

இக்கதை அமைப்பை, இப்படி ஒரு பொம்பளை இருப்பாளா, இவள் மட்டும்தான் கண்டுபிடிக்க அலையனுமா, போலிஸ் இல்லையா, வீட்டுக்காரன் இல்லையா போன்ற சாதாரண காரணங்களுக்காக, இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை மேற்சொன்ன காரணங்களைக் கொண்டு யோசித்து பார்த்தால் புரியக்கூடும். 
கார்த்திக் சுப்புராஜ் படம் என்பது ஒரு கூடுதல் பார்வையாக இருக்கக்கூடும். 


ஆண்-பெண் சமன்பாடு :


இக்கதையில், பெண்ணைத் தூக்கிப்பிடித்திருப்பதாக சொல்ல ஏதுமில்லை. ஒவ்வொரு முறை அவள் பரிதவித்து விடையறியாமல் நிற்கும்போது, அவளுக்கு யோசனை சொல்வதாகவும் கதையை முன்னெடுத்து செல்ல உதவுவதாகவும் இருப்பதாய் காட்சி படுத்தப்பட்டிருப்பது ஆணை கொண்டுதான் என்பதை நாம் கவனிக்கலாம். 


அவளின் பையன் கிடைத்ததும், அவனின் செய்கைகளுக்கு, அவளின் முதல் கணவன்தான் யுக்தியை வெளிபடுத்துகிறான். 'ஒருவேளை இவனைக் கடத்தியவன் இவனை என்ன சொல்லி அனுப்பி வைத்திருப்பானோ..', மகன் மிரட்டலுக்கு அடிபணிவதாக சொல்வது.. இப்படி.. 


அடுத்ததாய், கடத்தியது ஒரு பெண் என்பதை அவளின் இரண்டாவது கணவன்தான் சரியாய் வழிகாட்டுகிறான். கொலைகார டாக்டர் கூட, அவளின் Critical sense யைப் பயன்படுத்தச் சொல்லி Game விளையாடுகிறார்.

கடைசியில் அவளின் தோழி, தான் கடத்தியதைச் சொல்லும்போது, 'ஓவர்கோட், குடை, கொலை, கடத்தல் என்றால் ஆண் என்றுதான் நினைப்பதா..' என்பது பெண்ணின் ஆளுமை இம்மாதிரியான செயல்களிலும் இருக்கக்கூடும் என்ற தாழ்மையை தான் உண்டுபண்ணுகிறது.  

இறுதியில் அம்மா என்னும் சொல்லை உணர்ச்சிகளுக்கு உரியதாய் சமர்ப்பித்திருப்பது இயக்குனர் கதை முழுவதும் கருப்பொருளைத் தேடி கடைசியில் கண்டெடுத்திருப்பதாய் சொன்னது, இதைதான். இது பெண்மை, தாய்மை, தாய்மையின் தீவிரம் என்னும் பெண்ணின் குணாதிசியங்களுடன் விளையாடும் உத்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். 


இதில் ஆண் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரும் அறிவோடும், பெண்ணின் கதாபாத்திரம் என்பது உணர்வு சார்ந்தும் அதுவும் கர்ப்பம் என்ற கூடுதல் உணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. இக்கதை, பெண்ணுக்கானது என்று மேம்போக்காய் சொல்லப்படுவதை, இக்காரணங்களால் நாம் ஒதுக்கிவிடமுடியும். இருந்தும் இக்கதையின் ஏதோ ஓன்று ஈர்ப்பைக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை. 'பென்குயின்'  

~அகிலா
எழுத்தாளர்..        

Monday, 25 May 2020

Thappad - A View

Thappad Slap. Slapping a woman. Slapping a woman by a man. Slapping a wife by the husband. That's the story line. 

When someone asks you to tell the story line, we can have versions of going through the story. 
'A man slaps his wife in a bit of anger and there she goes to court'. 
 'A husband has the right to slap his wife. What's big in that?'
 'For a slap, shall you move to court? Its overreacted.'
 'Sorry.. No Comments.. These Women !'

Like these, the Slap reacts as a Boomerang here in our Indian society. 

A Slap is not as simple as this. A husband's right is proclaimed, more pronounced in the weaker sect of our society. This weaker sect is more in middle class strata of the society, whether its lower or upper middle class. The Slap is beared by many women. When a 'Husband' is drunk or in rage, he slaps his wife, pulls her by her hair, stomps in her stomach and breasts. So here, the Slap is the least physical violence that a 'Wife' can accept with ease.   

Mark the word 'Wife'. To that word, you could tone anything that fits in.. as a slave, servant, taken for granted creature or a lovable pet. But not a woman. For men, definition of a housewife is a woman, who has to look after his house, makes it a home to live, rears his children, loves his parents and at the least being a woman in bed. 

This story is not a different one. For slapping in anger for which she is not the cause. His office work tension makes his anger to take a bypass route and that's where she gets the reward, a Slap. Its not the story line that makes the mark. It is the underlying rotten root of the society that is exposed in a well knit way. 

The value based, added characters are the other women, not some, but all the women characters shown in that film, have their say. Somewhat illogical and compromised one is the husband who slapped, had left the job, the London work and starting a new life from the scratch as a repent action. These materialistic things are woven in way that men will lose everything for the sake of his love to be back. Or otherwise to show his remorseful feeling. That is not so important. 

Women are always or somewhat compromisable to the norms of the men's society. Whether she is financially independent or dependent, the backdrop of 'slap' remains there. Each woman has this slap in her heart, like a mother in that film compromises her singing. 

Singing, dancing, cooking are not so profitable professions in this society. Its all a waste of time, as many men think. So women's household chores are not appreciable, not valuable, not profitable. Why womens' feeling are not so important for men? Is it their design, of being like this? Is this the way the men and women are there in this world to adjust to live? Somewhat these type of thoughts are biblical in nature. 

Respect must be earned, goes the saying. Are her deeds not so worth to earn that respect. Maybe the deeds are not monetarily profitable for men. But they are so worth that they earn him a good value as a family in the society. Respecting a woman for her loyalty towards the family is the stressed message underlain here.  

So this slap is not a physical assault. Its an internal injury, the permanent mark, which marks the story line. 

           
Friday, 27 December 2019

The Queen (க்யூயின்)

The Queen (க்யூயின்)

~ அகிலா 

சக்தி, ஜி எம் ஆர் என்னும் புனைப்பெயரில் நமக்கு அறிமுகமான முன்னாள் முதல்வர்கள் இருவரை நிஜ பாத்திரங்களாக உலவவிட்டு பார்த்த 'க்யூயின்' (Queen) வெப் சீரிஸ் எல்லாம் நம்ம ஊருக்கு புதுசு. 

சமீபத்துல நெட்பிளிக்ஸ்ல ஜீசஸை gay ன்னு காமெடி செய்துட்டாங்கன்னு பிரேசிலில் கலாட்டா செய்துட்டாங்க. நம்ம ஊரில் இன்னும் இல்ல. இது சம்பந்தமான வழக்கையும் இயக்குனர் கௌதம் 'அது நாவலின் காப்பி' என்று சொல்லி சரிசெய்துவிட்டார். மற்றபடி கொஞ்சம் சிலவற்றை மாத்தி சீன் பண்ணியிருந்தாலும் பெரும்பாலும் அவங்க வாழ்க்கையைக் கார்பன் காப்பி வச்சு எடுத்திருக்காங்க.

'க்யூயின்' சீரிஸில் எல்லாமே க்வீஸ் மாதிரி. பெயரை வைத்து நாம நிஜ கேரக்டரைக் கண்டுபிடிக்கிற வேலை. நல்லாதான் இருக்கு..

அனிதா சிவகுமரன் நாவல், 'The Queen' என்பதை Web Series ஆக தமிழில் எடுத்திருக்கிறார்கள். கௌதம் மேனன்(VTV - வி தா வ), பிரகாஷ் முருகேசன் (கிடாரி) இருவரின் இயக்கமும் இதில் இருக்கிறது. ஸ்கிரிப்ட் ரேஷ்மா கட்டாலா (நீதானே என் பொன் வசந்தம்) வசனங்கள் தெறிக்கிறது. அனிதா சிவகுமரன்கௌதம் வாசுதேவன் 
பிரகாஷ் முருகேசன் ரேஷ்மா கட்டாலா 
ஜி எம் ஆர் ஆக வருகிற இந்திரஜித்.. குழி விழுந்த சிரிப்பு, வசீகர கண்கள்.. 'Anyone can fall for him' என்பதை செய்துக்காட்டியிருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன்.. சான்ஸே இல்ல.. கம்பீரம், சோகம், மகிழ்ச்சி எல்லாம் அந்த முகத்தில்.. நிஜம் நம் முன்..

வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், அஞ்சனா எல்லோரும் ஓகே. சக்தியின் 'தோழி' சூரியகலாவாக வரும் விஜி சந்திரசேகர் சற்று சத்தத்தைக் குறைத்திருக்கலாம். 
பிரதீபன் (தீபன்) மட்டும்தான் பெண் சமூகத்துக்கே எதிரி என்பது போன்ற ஒரு projection. ஜி எம் ஆரின் சாவு வீட்டில் பிரதீபனும் சக்தியும் பேசிக்கொள்ளும் அதிகப்படியான காட்சியமைப்பைத் தவிர்த்திருக்கலாம். ஏன்னா, அங்க நடந்த அத்தனையையும் டிவியில் பார்த்த சாட்சிகள் தமிழ்நாட்டில் அதிகம் பேர் இன்னும் உயிரோடுதான் இருக்காங்க. அன்று அவங்க கிட்டே இருந்த ஆவேசம் தான் அவங்களின் இந்த உச்சிக்குக் காரணம். அதுதான் அவங்க குணம். இதில் ரொம்ப சாத்வீகமா அழுத்தமா காட்சி அமைப்பு மாறியதைப் பார்த்தபோது சீசன் 1 முடிவு காட்சிகள் மனதில் இலேசாகதான் பதிந்தன. அதற்கு முன்பு இருந்த கதை அழுத்தம், ரம்யா கிருஷ்ணனின் முகபாவங்களின் தீவிரம், உச்சரிப்பு வலிமை எல்லாமே சற்றென்று சரிந்தாற் போல் ஆனது. 

சக்தியின் வாழ்க்கைக் குறித்த நிறைய மர்மமுடிச்சுகளுக்கு பல வருடங்களாக மக்களாகத் தேடிய விடைகள் எல்லாம் எளிதாய் உடைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் வாசந்தியின் 'Amma :Jayalalithaa's Journey From Movie Star To Political Queen' படித்திருக்கிறேன். கொஞ்சம் அதிலிருந்தும் கதை உருவப்பட்டிருக்கிறது தெரிகிறது. 

ஒரு காலகட்டத்தில் காதல், காதல் தோல்வி, காமம் குறித்த பல விஷயங்கள் ஒளித்தும் மறைத்தும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய மனிதர்களின் செயலாளர்கள், அவர்களின் கீழ் பணியாற்றியவர்கள், அரசியல் சதிராட்டத்தில் எதிர்களத்தில் நின்றவர்கள் இப்படியாக பலர் எழுதி வெளிவந்த உண்மையும் பொய்யும் கலந்த வாழ்க்கை சரித்திரங்கள் நம்மிடையே புழங்கத் தொடங்கிய பிறகுதான், பெரிய மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்க்க அசிங்கப்படுத்த அவசியமில்லையெனும் அறிவு முதிர்வு (civilized / matured attitude) நமக்கு வந்தது எனலாம். 

காந்தி, நேரு, இந்திராகாந்தியென அடுத்தடுத்த புத்தகங்கள் வாசிப்பின் பிறகுதான் உன்னதம் என்பது யாதென்ற புரிதல் உண்டானது. 
'க்யூயின்' சீரிஸையும் அப்படியான நோக்கில்தான் எடுத்திருக்கிறார்கள். இது போன்ற காணொளிகள், பெண், பெண் சார்ந்த வியாபாரத்தன்மை, பெண்ணை பழிக்கும் ஆணின் மூளையுடன் இயங்கும் பெண்ணுலகம், பெண்ணின் மீது ஆண் செலுத்தும் அதிகாரதன்மை போன்ற பல வெளிகளை அசாத்திய கோணங்களில் அணுக சொல்லித்தருகிறது எனலாம். 

கௌதம் வாசுதேவ் மேனன், பிரசாத் முருகேசன் இருவருக்கும் வாழ்த்துகள்..

தமிழில் இன்னும் எதிர்ப்பார்ப்போம்.. 

~ அகிலா..