Saturday, 2 November 2024
மெய்யழகன் | ஆண்கள் உலகம் | திரை விமர்சனம்
Saturday, 24 July 2021
ஓவர்டேக்கும் அந்த டிரக்கும்
ஓவர்டேக்கும் அந்த டிரக்கும் 🚍
கெட்டதாய் காட்டப்படும் ஒன்றின் மீது ஏற்படும் ஈர்ப்பு சற்று வசீகரமானது. அது கண்முன் நின்று தொந்தரவு செய்யும்; தூங்கவிடாது. இப்படிதான் 'ஓவர்டேக்' என்னும் படம் பார்த்தும் ஆகிற்று.
'ஓவர்டேக்' (Overtake) மலையாள படத்தைப் பார்க்க உட்கார்ந்தேன். 2017 யில் வெளிவந்த படம். ஆரம்பித்த கொஞ்ச நேரமும், முடியும் கொஞ்ச நேரமும் மட்டுமே கதை. மற்ற நேரமெல்லாம் Road show தான். அதுவும் பிரவுன் + கிரீன் கலர் dusty மலையின் வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கணவனும் மனைவியும் ஏசி வேலை செய்யாத பழைய பென்ஸ் காரில் செல்ல, அவர்களை தொடர்ந்து வந்து கொல்ல முயற்சிக்கும் டிரக் வித் டிரேய்லர்.. அது ஒரு Kenworth truck.. 🚛
அந்த சிறிய கார் ஓவர்டேக் செய்ய முயலும் ஒவ்வொரு சமயத்திலும் அதை முன்னே செல்லவிடாமல், விடாது துரத்தும் பெரிய பூதமாய் அந்த டிரக்.. 🚍
எனக்கு கதை மேல் பெரிய பிரியமில்லை. ஒளிந்து வந்து அட்டாக் செய்யும், துரத்தும், பூச்சாண்டி காட்டும் அந்த டிரக்கை மிகவும் பிடித்துப்போனது. அதன் டிரைவர் யாரென்று காட்டவில்லை; யாராக இருந்தால் என்ன, யாராகவும் இருந்துவிட்டு போகட்டும் என்னும் படியாக அதன் மேல் ஒரு பிரியம்.
பழைய இரும்பு காய்லான் கடையில் இருந்து வந்தது போன்ற அதன் தோற்றம், இரு புகைபோக்கி குழாய்களின் வழியே வரும் சாம்பல் புகை, பயமுறுத்தும் ஆனால் பிடித்துப்போகும் அதன் முகம்.. அதுதான் வில்லன் என்று மனதுக்குள் விழுந்துவிட்டது. 🚛
மலையின் மீது வளைந்து நெளிந்து வந்து கனவில் அது துரத்திய போதும் மகிழ்ச்சியாய் எழுந்தமர்ந்தேன். படத்தின் கதையில் பெரிதாய் கொண்டாட அந்த டிரக் மட்டுமே இருந்தது. இது Duel என்ற ஆங்கில படத்தின் ரீமேக். இதற்காக எடுக்கப்பட்ட டிரக் KSEB - Kerala State Electricity Board யின் அணை கட்டும் பயன்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இப்படியான பழைய டிரக்குகளை மலைகளில் கட்டுமான பணி நடக்கும் இடங்களில், பணி முடிந்ததும் அங்கேயே மலை பாறைகளுக்கு இடையில் சொருகி நிற்பதைப் பார்த்திருக்கலாம். நான் வயநாடு செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன். பழைய காலங்களில் இவ்வாறு மலைகளில் இடையிடையே அணை கட்டுமான பணி முடிந்ததும் சிக்கிக்கொள்ளும் பெரிய வண்டிகளை அவ்வாறே விட்டுவிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றை படக்குழுவினர் எடுத்து பயன்படுத்தி இருக்கின்றனர்.
படத்தின் நாயகர்கள் தப்பித்தாலும், தவறு இழைத்தவனுக்கு தண்டனை கிடைக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்த டிரக்கின் வில்லத்தனத்தை காட்டியே முடிக்கிறார்கள்.
Sunday, 20 June 2021
ஷேர்னி (Sherni) - இந்தி சினிமா - ஒரு பார்வை
ஷேர்னி - Sherni Movie
ஷேர்னி திரைப்படத்தை OTT தளத்தில் பார்க்க நேர்ந்தது. முந்தைய நாளே அந்த படம் என் கண்ணில் பட்டிருந்த போதிலும், மொழி தடுமாற்றம் - இந்தி மொழி படம் - காரணமாக யோசித்துவிட்டேன். ஆனாலும் அதன் கதை சுருக்கம் என்னை பார்க்காமல் ஒளிந்து கொள்வதற்கான காரணங்களைக் கேட்டது. கேள்விகளே, மனிதனின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. படம் பார்க்கப்பட்டுவிட்டது என்னால்.
Sherni என்றால் இந்தியில் பெண் சிங்கம் என்று பொருள். ஆனால் இந்த படத்தில் வருவது பெண்புலி. புலிக்கு உருது மொழியில் 'ஷேர்' என்பதும் அதுவே, பேச்சு வழக்கு மொழியாய் இந்தியிலும் அமைந்துவிடுவது உண்டு. அதுதான் பெண்புலியாய் 'ஷெர்னி'.
மனிதர்களை வேட்டையாடும் பெண்புலியொன்று மலைகிராமங்களில் சுற்றித்திரிய, ஒரு காட்டை விட்டு மற்றொன்றுக்கு நகர்ந்து இரண்டு குட்டிகளை ஈன்று, பேராசையும் மமதையும் கொண்ட மனிதர்களிடம் சிக்கி இறந்து போவதே கதை. இங்கு வித்யா பாலன் (Vidya Balan) காட்டிலாக்கா அதிகாரியாக இடமாற்றத்தில் வந்து சிக்குகிறார். ஆண்கள் நிறைந்திருக்கும் அலுவலக சூழல், புலியைக் கொன்று பிடிக்க வேட்டையாளர்களின் சாதுர்யம், அதை சாதகமாக்கும் அரசியல் நாயகர்கள், வனத்தை நேசிக்கும் ஆனால் பயம் கொள்ளும் மலை வாழ் மக்கள் என்று கதை யதார்த்த களத்தைச் சுற்றி இயங்குகிறது.
வனத்துறைக்குள்ளே இரண்டாய் உடைகிறது மனித அரசியல். மலைவாழ் மக்களுடன் தொடர்பில்லா மேல் தட்டு அதிகாரிகள், மக்களை, அவர்களின் மலையைச் சுற்றி இருக்கும் வாழ்விடங்களை, ஆடு மாடுகள் மேய்ப்பிடங்களை புரிய முடியாத அந்த அதிகார வர்க்கம், அவர்களுக்கான அரசியல் தொடர்புகள், இவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் கீழ் மற்றும் நடுத்தர தட்டு அதிகாரிகள், அதில் ஒன்றாய், காட்டிலாக்கா அதிகாரியாய் வரும் வித்யா பாலன் என்று கதை யாரையும் முதன்மைபடுத்தாமல் பிரச்சனையை மட்டும் திரைப்படம் முழுமையும் இழுத்து செல்வது சிறப்பு.
"ஒரு பொம்பளையை அனுப்பியிருக்காங்க.." என்ற பெண்ணினம் குமுறச்செய்யும் சொற்கள், அதை கேட்டதும் புலியாய் பொங்கி எழாமல் கண்களில் மட்டும் சிறிது சலிப்பைக் காட்டியபடி சாதாரணமாக பேசத்தொடங்கும் வித்யா பாலன், மிக நேர்த்தியான தேர்வுதான் இக்கதைக்கு.
"நான் பார்த்துக்குகிறேன்.." என்று தைரியமூட்டும் மேல் அதிகாரியும் அரசியலுக்குள் தான் இயங்குகிறார் என்று தெரிந்ததும், நிதானமாய் ஆனால் கோபம் கலந்த, "கோழை" என்ற சொல்லுடன் விலகுவதும் சிறப்பு. யதார்த்தம் பேசுவதற்கு இங்கு ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? மனித நேயம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும்.
இங்கு வித்யா பாலனுக்குப் பதிலாக ஒரு ஆண் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் பெரிதாய் மாறியிருக்க போவதில்லை என்பது என் கருத்து. அதனால் இங்கு தலைப்பில் இருக்கும் பெண் புலி Sherni என்பதை நான் அந்த காட்டு புலிக்கானதாக நான் எடுத்துக் கொள்கிறேன். படத்தின் இறுதிவரை என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவர் ஒரு பெண் அதிகாரி என்ற உணர்வை (குடும்பத்தாலும் அதிகமான மன உளைச்சல் இல்லை), பாலின வேறுபாட்டால் பெரிதாய் பாதிக்கப்பட்டதாய் எங்கும் காட்டப்படவில்லை அல்லது வித்யா பாலன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை இயக்குனர் பெண் கதாபாத்திரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று எடுத்திருந்தால், இதை, இயக்குனர் அமித் மசூர்க்கர் (Amit Masurkar) அவர்களுக்கு ஒரு பாராட்டாய் தெரிவிக்கிறேன். வித்யா பாலனை மனதில் வைத்துதான் காட்டியிருந்தார் என்றால், அதன் தீவிரம் போதவில்லை என்று என்னால் சொல்லமுடியும்.
கிராபிக்ஸ் புலி வந்து திரைப்படத்திற்கான பார்க்கும் ரசனையை குறைத்துவிடுமோ என்ற யோசனை என்னுள் இருந்தது. அவ்வப்போது அதை காட்டவேண்டிய கட்டாயங்கள் நேரும் இடத்தில், நிஜ புலியானது, வனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் வழியாக காட்டப்படுகிறது.
ஷரத் சக்சேனா
Conservationist என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஷரத் சக்சேனா (Sharat Saxena) இலகுவாக யதார்த்தத்தில் வேட்டைக்காரன் இப்படிதான் இருப்பான் என்பதை வடிவமைக்கிறார். வனப்பகுதிகளில் ரிசார்ட் கட்டுவதும், விலங்குகளை வேட்டையாடி அதில் வரும் புகழை போதையாய் கொண்டாடுவதும் இன்றைய மான் வேட்டை அத்துமீறல்களின் உளவியலாக கொள்ளலாம்.
இயக்குனர் அமித் மசூர்க்கர்
இந்த படத்தில் புலி என்பது ஒரு குறியீடு. அவ்வளவே.. புலி என்பதை இயற்கைக்கான, மற்ற விலங்குகளுக்கான குறியீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் எந்த துறைக்கும் பொருத்திக்கொள்ளலாம்.
இந்த பதிவின் தலைப்பில் 'ஷேர்னியும் நானும்..' என்பதில் என்னுடைய தனிப்பட்ட மனநிலை ஒளிந்திருக்கிறது.
சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்கொல்லி புலிகளைக் கொன்ற ஜிம் கார்பெட்டின் எழுத்தின் மீது ஒரு மையம் உண்டு. அவர் மனிதர்களைக் கொல்லும் புலிகளை மட்டுமே கொன்றிருக்கிறார். அதையும் அவர் அந்த கிராமத்து மக்களிடம் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே வேட்டைக்குக் கிளம்புவாராம்.
இத்திரைப்படத்திலும் அதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அன்றைய காலகட்டங்களில் மனிதனை மிருகங்களிடமிருந்து பாதுகாக்க பெரிதாய் முயற்சிகள் இல்லை. இந்தியாவில் சரணாலயங்கள் வந்ததே 1936யில் தான். அதனால் அரசு இதைதான் செய்யமுடியும் என்பது அன்றைய களநிலவரம்.
இயற்கையின் மீது தீரா மதிப்பும் காதலும் கொண்டவராக இருந்த அவர், ஒரு முறை, மூன்று மிலிட்டரி அதிகாரிகளை வேட்டைக்கு அழைத்து சென்ற இடத்தில், அவர்கள் கிட்டத்தட்ட 300 நீர் பறவைகளைச் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு பதறிப்போனவர், இனி எக்காரணம் கொண்டும் வேட்டை என்பதை விளையாட்டாய் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். அதனுடன் சூழலியலைக் காக்க முனைகிறார்.
அவருடைய 'முக்தேஸ்வர் ஆட்தின்னி' குறித்த எழுத்தில், ஆட்கொல்லி புலியைக் கொன்றபிறகு என்ன எழுதுகிறார் என்றால்,
"மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லி புலிகளை சுட்டு பிடிப்பது பெரிய திருப்தியை கொடுக்கிறது....
..... இதையெல்லாம் விட, மிக உன்னதமான திருப்தியாக நான் நினைப்பது என்னவென்றால், ஒரு துணிவான சிறு பெண்ணுக்கு, இந்த பெரிய பூமியில் ஒரு சிறு பகுதியை பயமின்றி பாதுகாப்பாய் நடக்க வழி செய்தது."
ஆனால், இப்போதோ, தனி மனிதனே தனது தோட்டத்தைச் சுற்றி மின்வேலியிட்டு, பூசணிக்குள் வெடி மருந்து வைத்து பெரிய யானையின் வாயை கிழித்துவிடுகிறான், பெட்ரோல் பாட்டில் வீசி காதை கிழிக்கிறான். முடிவில் அதன் இறப்பை உறுதி செய்கிறான்.
மிருகத்திற்கும் மனிதனுக்குமான இந்த நீண்ட கால போராட்டத்தில் மிருகமும் இவனிடமிருந்து வித்தைகளை கற்றுக்கொள்கிறது; மனிதனும் அதே போல தான்.
மக்களுக்கும் புலிகளுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை நிறுத்த, புலிகளை அவற்றுக்கான சரணாலயங்களிலும் மக்களைக் காடுகளுக்கு சற்று தொலைவிலும் நிறுத்த முயற்சிப்பதே இன்றைய காலகட்டத்தின் செயலாக இருக்கமுடியும்.
இத்திரைக்கதையிலும் அதுவே தீர்வாகிறது. காடுகளுக்கு, அடர்ந்த வனங்களுக்கு, வனவிலங்குகளுக்கு, அங்கு வாழும் மக்களுக்கு நேரும் நியாயமற்ற நிலையைச் சுட்டும் கதைக்களம், ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்நிலையை மாற்ற, பெரிதாய் புரட்சி செய்துவிடமுடியாத சங்கடங்களையும் இதில் காட்டப்படும் பின்புலங்கள் நமக்கு காட்டுகின்றன. இருந்தும், அந்த புலியின் குட்டிகளை காப்பாற்றி படம் முடிக்கப்பட்டது போல, சின்ன சின்னதாய் இயற்கையையும் நம்மையும் சமன் செய்துக்கொள்ளலாம் நாம்.
Saturday, 4 June 2016
மனதுக்கு இசையாதவை - ஓர் அலசல்
Friday, 31 July 2015
பாகுபலி - விமர்சனம் - Bahubali
இந்த படத்தை நான் இரண்டு முறை பார்க்கும்படி ஆயிற்று.