Saturday, 2 November 2024

மெய்யழகன் | ஆண்கள் உலகம் | திரை விமர்சனம்

மெய்யழகன் 

ஆண்கள் உலகம் 




இயக்கம்: பிரேம் குமார் 

நடிகர்கள்:    கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி 

ஒளிப்பதிவு:     மகேந்திரன் ஜெயராஜூ

எடிட்டிங்: கோவிந்தராஜ்

இசை: கோவிந்த் வசந்த்

தயாரிப்பு நிறுவனம்: 2D எண்டடெயின்மெண்ட் (ஜோதிகா, சூர்யா)

******

மெய்யழகன்

 


மெய்யழகனை எழுதும் அளவுக்கு உந்தியிருப்பது இரண்டு விடயங்கள்: 
ஒன்று, கதையின் பின்புலத்தில் கத்தியின்றி இரத்தமின்றி வெட்டப்படும் உறவுக்கயிறு. 
இரண்டாவது, கண்முன் காட்டப்படும் கிராம, நகர மனித மேம்பாடுகள்/சிக்கல்கள். 


வீட்டு / சொத்து பிரச்சனை: 

திரைக்கதையில், எடுத்ததும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக காட்டப்படும் ஒரு குடும்பம் தனது வீட்டைத் துறந்து இரவோடு இரவாக வெளியேறும் காட்சி. அந்த வீடு அந்த குடும்பத்தலைவரின் சகோதரியின் கைக்கு போய் சேருவதாகப் பேசுகிறார்கள். அதுவும் கூட முணுமுணுவென்று. பின்னால் அந்த பிரச்சனைக் குறித்து பேசுவார்கள் என்று பார்த்தால், யாரும் அது குறித்து பேசவில்லை. கல்யாண வீட்டு சாப்பாட்டு அறையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அமர்ந்து சாப்பிடுவதாகக் காட்டுகிறார்கள். அவ்வளவே. படம் பார்க்கிற நீங்கள் அருளின் பக்கமாக நிற்கச்செய்யும் உத்திதான் இது. நாம் தேடும் விடையை கதை நிராகரிக்கிறது. நான் சொல்வதை, நான் காட்டுவதைதான் நீங்களும் பார்க்க வேண்டும்; நம்பவேண்டும் என்பதாக செல்வதால், நமது மனசு அருள் கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கொள்ள முதலில் சற்று சிரமப்படுகிறது.    

இன்றைய சமூகத்தில்  வரதட்சணை என்னும் கான்செப்ட் மீண்டும் வேர் விட்டு முளைப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொலைகாட்சி விவாதங்கள் மூலம் அவை தூசு தட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. கல்யாணத்திற்கு நிற்கும் பெண்பிள்ளைகளை வைத்தே காய் நகர்த்துகிறார்கள். அதை பெண் பிள்ளைகள் ஆதரிப்பதும் நடக்கிறது. எம்மாதிரியான குடும்பங்களில் அது முளைவிடுகிறது என்றால், எந்த குடும்பங்களில் பரம்பரை சொத்து என்ற ஒன்று இல்லையோ, அங்கு அந்த வீட்டு பெண்பிள்ளைகள் பெற்றோர் கடன்பட்டாவது, தனக்கு கல்யாணத்தின் போது, வேண்டியதை செய்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள், அல்லது நினைக்க வைக்கப்படுகிறார்கள். அதை ஒரு முதலீடாக, அந்த பெண்பிள்ளைகள் பார்ப்பதுதான் வருந்தத்தக்க விஷயம். பெண்ணுக்கு படிப்பை கொடுப்பதன் நோக்கமே, அதை பயன்படுத்தி, அவள் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பல பெண்பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு, வீட்டிலேயே இருந்து கொண்டு ஹவுஸ் வைப்பாக வாழ்வது சுகம் என்று நினைக்கிறார்கள். இந்த விடயத்தையும் பிரமோட் செய்ய ஒரு கூட்டம், ஊடகங்களில் புறப்பட்டு வந்திருக்கிறது. 

இங்கு சிரமப்படுபவன் ஆண் எனும்போது, அவனுமே வரதட்சணையை ஆதரிக்கிறான். திருமணத்தின் போது அதீத நகைகளை கொடுப்பதையும், கார் பைக் என்று கொடுப்பதையும் நிறுத்திவிட்டால், வீட்டை பிரிக்கும்போது அல்லது சொத்தை பிரித்தெழுதும் போது, பெண்பிள்ளைகளுக்கும் அந்த சம உரிமையை அளிக்க தயங்காத ஒரு நிலை உருவாகும். சொத்தை ஆண் மையப்படுத்துதல் குறையும். நம்முடைய சமூகத்தில், திருமணத்தின் போது பெண் வீட்டார் அதிகமான செலவுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. 'உன் கல்யாணத்துக்கு அப்பா நிறைய செய்துட்டார். அதனால் உனக்கு சொத்தில் பங்கு கிடையாது' என்ற தோரணையில் ஆண் வாரிசுகள் பேசுகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, இரு வீட்டாரும் சமமாக செலவுகளை ஏற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்தது. இதன் பின்னாலிருக்கும் சமூக அரசியலே தனி. பெண்ணை சீதையின் உருவகத்திற்கு மாற்றும் ஆதிக்கக்கூறுகள்தான் இவை என்பது புரியாத இன்றைய நடுத்தரவர்க்கத்து பெண்கள்/குடும்பங்கள் பலியாவது வருத்தமான ஒன்று. 

பெண்ணுக்கான திருமணச்செலவைக் கணக்குக்காட்டி, பல குடும்பங்கள் சொத்து பிரிக்கும் விடயத்தில் கோர்ட் வாசற்படி ஏறி வருடக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஆண் பெண் வீட்டார் இருவரும் சமமாக ஒரு திருமணத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுக்கும்போது, சொத்து பிரித்தல் கட்டத்தில், அந்த வீட்டின் ஆண் வாரிசுகள் பெண் பிள்ளைகளுக்கும் சொத்துக் கொடுப்பது குறித்து வருத்தம் இன்றி, தயக்கம் இன்றி செய்வார்கள். அவ்வாறு இல்லாமல் போகும்போதுதான் இந்த திரைப்படத்தில் காட்டியபடி குடும்பத்திற்குள், உறவுகளுக்குள் பலவித சங்கடங்களும் நெருடல்களும் உண்டாகின்றன எனலாம். ஆனால் இந்த திரைப்படம் அது குறித்து ஒரு லைனை மட்டும் இழுத்துவிட்டு, ஒரு நாள் கூத்தாக நடைபெறும், கிராமத்தில் சொந்த வீட்டை இழந்த ஒரு நகரத்தானின் கதையாக, பின்நவீனத்துவ பாணியில் சிறுகதையொன்றை அருமையாக மேடையேற்றிருக்கிறார்கள். 
 
இந்த திரைக்கதை சொத்துப்பிரிப்பு பிரச்சனையை பின்னுக்குத் தள்ளி வைத்து, அதன் மேல் ஊரை வெறுக்கும் அல்லது ஊரை எதிர்நோக்க முடியாத அருளின் உளசிக்கலை முக்கியப்படுத்தி உள்ளது. மறைக்கப்பட்ட இந்த பின்புலத்தைப் பற்றி திரைப்படத்தில் அதன்பிறகாக யாரும் பேசாமல் போயிருந்தால் பரவாயில்லை. அந்த டாபிக் தான் இதன் மூலம் என்பது போல, சைக்கிள், ஜல்லிக்கட்டு என்றெல்லாம் சுற்றி வந்து, கடைசியாக மெய்யழகன், 'அந்த நாலு பேரை மன்னிச்சிடுங்க அண்ணே' என்கிறான். தன்னையுமறியாமல் (அறியாமல் எல்லாம் இல்லை) கதாசிரியர், என் கதையோட மையப்புள்ளி இதுதான் என்று சிவப்பு மை கொண்டு லைன் போடுகிறார். 


கிராம, நகர மனித சிக்கல்கள்: 

இந்த சிக்கல்களை பல கதைகள் பேசியிருக்கின்றன. கிராமத்து ஆணுக்கும் நகரத்து பெண்ணுக்குமாக (மாட்டுக்கார வேலன், பட்டிக்காடா பட்டணமா, தம்பிக்கு எந்த ஊரு, சகலகலா வல்லவன்) இருக்கும் சிக்கல்களைத் திரைக்கதைகளாக நாம் பார்த்துவிட்டோம். ஆண் மைய சமூகத்தில், நகரத்து பெண் சேலை கட்டி, குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவாள். அவையெல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டவை. 

உறவு அல்லது நட்பை அடிப்படையாகக் கொண்டு, ஆணுக்கும் ஆணுக்குமான ஈகோ சிக்கலைப் பேசுகிறது இப்படம். அதையும் கூட சில காட்சி அமைப்புக்களில் கிராமத்துக்காரன் அப்பாவி, நல்லவன் என்ற கோணத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பதை உணரமுடிகிறது. அதன் உச்சமாக, 'நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன், நீயும் அப்படியாகு' என்று காட்டுவதற்காகதான் மெய்யழகனின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருப்பதும் புரிகிறது. இது ஒருவகையில் நகரத்துக்காரனான அருளின் குற்றவுணர்வைத் தூண்டுதல். அதன் பொருட்டுதான் இந்த கதையை கதாசிரியரும் இயக்குனருமான பிரேம்குமார் நகர்த்தியிருக்கிறார். 

எனக்கு இந்த கதையின் பின்நவீனத்துவம், அதன் பொருட்டு அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் (இழுவை காட்சிகளும் உண்டு) பிடித்திருக்கிறது எனலாம். இம்மாதிரியான தற்செயலாக நேரும் பிணைப்பை, ஆணுக்கான இந்த சுதந்திர காட்சியமைப்புக்களைப் போல பெண்களுக்கும் அமைக்கமுடியுமா என நான் பலமுறை யோசித்திருக்கிறேன். 'அவள் ஒரு தொடர்கதை' என்று நினைக்கிறேன். படாபட் ஜெயலட்சுமிக்கும் சுஜாதாவுக்குமான நட்பை, படாபட் சுஜாதா மேல் இழைந்து குழைந்து அருவெறுக்க வைத்திருப்பார்கள். பெண்கள் நடிக்கும் காட்சி என்றால் மார்பகங்கள் உரசிக்கொள்ளும் அளவுக்கு ஏன் ஆபாசமாக்க வேண்டும்? ஆண் மைய சமூகத்தைச் சந்தோஷப்படுத்தவா? ஏன் அது இயல்பாக அமையவே கூடாதா என்ற கேள்விகள் என்னுள் எழுந்து பல காட்சிகளை நான் ஒதுக்கியிருக்கிறேன். ஆனால் இதிலும் கூட ஆணுக்கும் ஆணுக்குமிடையே ஒரு கட்டத்தில் இழைதல் அதிகமாவதும், பின் அக்காட்சி, கதையின் அடுத்த கட்டத்திற்கு நகரும்போது, இழைவு சரிசெய்யப்படுவதுமாக செல்கிறது. ஆனால் இத்தகைய நட்பை, காதலை, பிணைப்பை பெண்களிடையே காட்சிப்படுத்த திரைப்படங்கள் ஏன் முயலுவதில்லை என்னும் கேள்வியை 'ஆட்டோகிராப்' படத்திலிருந்து பல பெண்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

கதாபாத்திரத்தை உள்வாங்குதல் என்று பார்த்தால், கார்த்தி சரியாக செய்திருக்கிறார். அரவிந்த்சாமியை நாம் எப்போதுமே நகரத்து அழகனாக ஒரு பிம்ப கட்டமைப்பில் வைத்திருக்கிறோம். அப்படியென்றால் - சிரிப்புடன், கண் சிமிட்டலுடன் சீன் டூ சீன் கதாநாயகன் நகர்வதை உறுதி செய்திருக்கிறோம். அதாவது நடிப்பு தேவையில்லை. அரவிந்த்சாமி எந்த கதாபாத்திரத்திலும், இப்படியே வந்து போவார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த படம் அவரின் நடிப்பைக் கோரியிருக்கிறது. அதற்கு பெரிதாக அவர் நியாயம் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. நிறைய இடங்களில் கார்த்தியை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுவே நடிப்பு என்று அரவிந்த்சாமி தரப்பில், இயக்குனர் தரப்பில் நியாயப்படுத்தலாம். சைக்கிளைக் குறித்து கார்த்தி உணர்ச்சி வசப்பட்டு பேசும்போதும், ஜல்லிக்கட்டு காளைக் குறித்த உரையாடலின் போதும் கார்த்தியை ரசிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே நகரத்து நாயகன் வருவதால், அரவிந்த்சாமிக்காகவே அருளை உருவாக்கியிருக்கிறார்களோ என்று தோன்றியது. கார்த்தி வீட்டிலிருந்து குற்றவுணர்வுடன் வெளியேறும் இடத்தில் மட்டும் அவர் அருள் என்னும் கதாபாத்திரத்திற்குள் சென்று வந்தது போலவிருந்தது. 

இத்திரைப்படத்தில் பெண்கள்? பேசும்படி இல்லை என்பதைவிட, இக்கதையில் அவர்கள் செய்வதற்கு ஏதுமில்லாதது போல செய்துவிட்டார்கள் என்று புரிகிறது. சொத்து பிரச்சனையில் அருளின் அத்தையைப் பேசவைத்திருக்கலாம் அல்லது அருளின் மனைவி அது குறித்து பேசியிருக்கலாம், மெய்யழகனின் மனைவி சும்மா சிரித்துக்கொண்டு வந்து உபச்சாரம் செய்வதைவிட வேறு ஏதாவது முக்கியமாக பேசியிருக்கலாம்... இப்படி நிறைய 'லாம்' கள். ஆனால் முக்கியத்துவப்படுத்த வேண்டியது, அதாவது prioritize செய்வது, என்ற ஒன்றை நோக்கி சென்றதில், திரைக்கதை பெண்களைப் பின்னுக்குக் கொண்டு போயிருக்கிறது.

ஒளிப்படக்காட்சிகள், இசை ஓகே. கமலஹாசனின் குரலில் 'யாரோ இவன் யாரோ' பாடல் ஓகே. 

முதலில் கூறிய நுண்ணரசியலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இப்படம் தனியொரு மனித ரசனையை நம்முடன் பகிர்ந்து கொள்வது புரிகிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் போதும், சில பார்வைகளை முன்வைப்பதன் மூலம், அது குறித்த உரையாடல்கள் தொடரும் என்றுதான் நான் நினைக்கிறேன். 


மெய்யழகன் - ஆண்களிடையே ஊடாடும் புரிதல் 









Monday, 15 January 2024

காதல்: The Core | Review | ஒரு பார்வை

 

காதல்: அதன் மூலம் 

Kadhal: The Core 



இயக்கம்: ஜியோ பேபி

எழுதியவர்: ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியா

நடிகர்கள்:    மம்முட்டி, ஜோதிகா 

ஒளிப்பதிவு:     சாலு கே. தாமஸ்

எடிட்டிங்: பிரான்சிஸ் லூயிஸ்

இசை: மாத்யூஸ் புலிக்கன்

தயாரிப்பு நிறுவனம்: மம்முட்டி கம்பனி


காதல்: தி கோர் 

பேசப்படாத பல விடயங்கள் இங்கு சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்பாலினச்சேர்க்கை, திருநங்கைகள்/நம்பிகள் குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசுவதற்கு, திரைப்படமாக எடுப்பதற்கு, இன்னும் இங்கு சமூகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஏன் பேசவேண்டும், இருக்கிற சமூக சீர்கேடுகள் போதாதா, expose பண்ணுவதாலே தான் அதிகப்பட்டு போகிறது, இப்படி போனா இனி ஆணுக்கும் பெண்ணுக்குமான கல்யாணம், சந்ததி வளருதல் இல்லாமல் போய்விடாதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.. 

சிலருக்கு பிடித்திருந்தும், எதுக்கு இதெல்லாம் என்கிறார்கள்; சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதனால் மொத்தமாக மறுக்கிறார்கள்; சிலர் ஏன் மலையாள படங்களில் அதிகமாக கிறித்துவ, இஸ்லாம் மதத்தினரை வைத்து எடுக்கிறார்கள் என்று மதத்தை முன்வைக்கிறார்கள்; சிலருக்கு, ஓரினச்சேர்க்கை குறித்த காட்சிகளே இல்லையெனவும், சரியாக எதுவும் காட்டப்படவில்லை என்னும் சரோஜாதேவி பத்திரிகை அளவுக்கு எதிரபார்க்கிறார்கள். 

இவையெல்லாம்  'காதல்: The Core' திரைப்படத்தை முன்வைத்து பேசுபவர்களிடம் இருந்து, எனக்கு கிடைத்த கருத்துகள்தான். படத்தை, நான் பார்த்து முடித்து ஐந்து நாட்கள் ஆகின்றது. படம் குறித்து நிறைய உரைகளையும் வாசித்தேன்.  

சரி, தவறு என்ற இரண்டு வாதங்களுக்கு இடையில், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்னும் நிலைப்பாடு ஒன்று சாம்பல் வண்ணத்துடன் உடல் குறுக்கி, நசுங்கி படுத்திருக்கும். அதை மிதித்துவிடாமல் செல்வதில், தாண்டுவதில், கண்டும் காணாமல் கடப்பதில், இந்த மனிதர்களானவர்கள் செய்யும் சாகசங்கள் இருக்கிறதே, அது வேடிக்கையானது.  

இந்த படம் அந்த சாம்பல் நிறத்தினுள் ஒளிந்திருக்கும் இருண்மையை உடைத்துப்பேசுகிறது. அதற்கு மதமோ, இனமோ தடையில்லை. மனிதர்கள் மட்டுமே தடையாக நிற்கிறார்கள். திருமணம் ஆகாத இளவட்டங்களின் தன்பாலினச்சேர்க்கையைக் குறித்து சற்று வெளிப்படையாக பேச முன்வருபவர்கள் கூட, திருமணமாகியிருக்கும் ஆண்களைக் குறித்து பேசுவதில்லை. திருமண பந்தத்திற்குள் சென்றுவிட்டால் அவன் பெண்ணின் உடல் சுகத்திற்கு அடிமையாகி சரியாகிவிடுவான் என்னும் கணிப்பு, பருவமடையாத பெண்ணை கல்யாணம் கட்டிக்கொடுத்தால் வயதுக்கு வந்துவிடுவாள் என்பதைப்போல.. ஆனால், அப்படி நடக்காவிட்டால்.. இது குறித்து பேச நம் சமூகம் ஒத்துக்கொள்வதில்லை. அதற்கடுத்தாற்போல், அவனின் மனைவியின் நிலை? நோ சான்ஸ்!   

‘காதல்: அதன் மூலம்’ படத்தில், முதலில் காட்டப்படும் இந்த குடும்பத்தின் சித்திரம் ஏறக்குறைய நமது குடும்பங்களைப் போலவே சாதாரணமானது தான். கணவன், மனைவி, கல்லூரி படிக்கும் மகள், வயதான அப்பா என்று. அந்த மனைவியானவள், இருபது வருட தாம்பத்தியத்திற்கு பின்பு, திருமணத்தை ரத்து செய்ய நினைத்து கோர்ட் வாசல் ஏறும்போது, அவள் கணவனுக்கு இருப்பது போல நமக்கும் குழப்பமாக இருக்கிறது. ஆனால், அதன் பின் ஒளிந்திருக்கும் யதார்த்தம்.. காட்சிகள் தொடர தொடர.. முதலில், இதற்குதானா.. இதற்காக குடும்பத்தை உடைக்கணுமா என்று நமக்குள்ளும் தோன்றவைப்பதும், மெதுவாக, அந்த கோர்ட் சீன் மூலம், வீட்டுக்குள், ஊருக்குள் நடக்கும் சத்தமில்லாத உரையாடல்கள் மூலம் படம் பார்க்கும் நமக்கும், நமக்குள்ளும், ஓரினச்சேர்க்கை விருப்பமுள்ள ஒருவனுடன் வாழ்தலின் கடினத்தை, அந்த கனத்தை சரியாக உண்டாக்கியிருக்கிறார்கள். இரண்டாவது முறையாக (முதலில், ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’)  வாழ்த்துகள் இயக்குனர் ஜியோ பேபி.. வசனங்கள் ஒவ்வொரு காட்சியிலும் ஷார்ப்.. வாழ்த்துகள் ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா 

...............................


கோர்ட்:

‘உங்க புருஷன் உண்மையிலே gay ஆக இருந்திருந்தால், எப்படி உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பொறந்திருக்கும்’ என்ற வக்கீலின் கேள்விக்கு, 'என் குழந்தைய நான் கேட்டு வாங்கினேன்..' என்றதான மனைவியின் பதில் அதிர வைக்கிறது.  

..................................

'அப்ப ஓமனா, உங்க கணவர் மேத்யூவோட எவ்வளவு frequent ஆ உடலுறவு வச்சுகிட்டு இருந்திருக்கீங்க?' 

'நாலு..' 

'மாசத்துல நாலுன்னா இது ஒரு healthy ஆன மேரேஜ் லைப்புக்கு ஆரோக்கியமானது தானே, யுவர் ஆனர்?

'மாசத்துல இல்ல.. கல்யாணத்துக்கு அப்புறம்.. இப்ப வரைக்கும் நாலு..' 

.................................................

கோர்ட்டில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த mental cruelty பற்றி விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் போது, மனைவியாக ஜோதிகா கூண்டிலும், கணவனாக மம்மூட்டி அந்த சாட்சி கூண்டின் வெளியிலும், அவளுடைய கைப்பையை வைத்துக்கொண்டு நிற்கும் காட்சி கிரேட்... Framed Secne.. கணவன் மனைவியின் சகிப்புத்தன்மை கொண்ட வித்தியாசமானதொரு உறவின் மீது நமக்கு ஆச்சரியம் எழுகிறது. வருடங்களான உடலுறவு அற்ற ஒரு நிலையிலும், ஒரு பெண் உடையாமல் அமைதியாக விவாகம் ரத்தாக நிற்பதும், அந்த ஆண் அவளுடன் அதை சரிவர வெளிபடுத்த இயலாமல் போனதான மனநிலையுடன் நிற்பதும் யதார்த்த வாழ்விலும் திரை வாழ்விலும் சாத்தியமற்ற ஒன்று. இது நுணுக்கமான அக வாழ்வை வெளிபடுத்துகிறது. சாதாரணமாக, இதை, விளிம்பு தட்டிய சலிப்பு நிலை, தோழமையுடன் வாழும் வாழ்வுக்கு பழக்கப்பட்டிருத்தல், உடல் குறித்த மரத்துப்போன நிலை (இருவருக்குமே), உடல் மற்றும் அது உண்டாக்கிய ஊனம் தவிர்த்த சமனானதொரு அகம்.. இப்படி எத்தனையோ காரணிகள்/சமாதானங்கள் நாம் சொல்லலாம். ஆனால் அதனுள் இறுகி போயிருக்கும் வலி?  

இருவரும் பிரிவதற்கான முன்னிரவில், தனித்திருக்கும்போது, அந்த ஆண், இத்தனை வருடமாக தான் ஓரினச் சேர்க்கைக்காரன் என்பதை செயல்களின் மூலமே உணர்த்தி வந்திருப்பதை அவன் சொல்லும், 'எனக்கு பயமா இருந்தது ஓமனா, உன் கிட்டே சொல்வதற்கு..' என்பது, மனைவி என்பவள், ஒருவகையில், எடுத்துக்கொள்ளப்பட்ட, தனக்கென உரித்தாக்கப்பட்ட/நேர்ந்து விடப்பட்ட அஃறிணை பொருள் என்ற மனநிலை அகங்காரமில்லாத ஆணின் உணர்வில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும், அவளாகவே துணிந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து, வெளிக்கொணர வேண்டியிருப்பதுதான் வேதனை. 

.................................

'நீங்க ஆசைப்படுற மாதிரியொரு வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா மேத்யூ? நான் இதெல்லாம் எனக்காகதான் செஞ்சேன்னு உங்களுக்கு தோனுதா?' என்ற அவளின் கேள்வி, இருபது வருட தாம்பத்தியத்தின் அனுபவத்தை/maturity யை சொல்கிறது. 

இதற்கு அடுத்தாற்போல், கண்ணீருடன் நெகிழ்வாய் அவள், அவனின் முன்வைக்கும் கேள்வி, 'இன்னைக்கு என் கூட படுப்பீங்களா' என்பதுதான்.. அதற்கு அவனின் பதிலாய், 'அடக்கடவுளே..' என்னும் கரைதல், அவர்கள் இத்தனை வருடங்களாக பேசிக்கொள்ளாத ஒன்றை அமைதியாய் சரிசெய்து கொண்டதாய் நமக்குள் ஒரு கணம் தோன்றுகிறதே, அது இப்படத்தின் ஓர் அகநிறைவு எனக்கொள்ளலாம். 




எத்தனை எத்தனை குடும்பங்கள் இவ்வாறு இருக்கலாம்.. இன்னும் கூட தொடர்ந்து கொண்டிருக்கலாம்.. எத்தனை ரத்துகள் இதை வெளிபடையாக பேசாமல் நடந்தேறி இருக்கலாம்.. எல்லோரும் முன்வைப்பது போல, எல்லா வீட்டிலுமா இவ்வாறு நடக்கிறது, பொது சமூகமோ, பெரும்பான்மையினரோ இப்படியில்லையே என்ற வாதங்களுக்கு என்னிடம் மறுப்பில்லை. ஆனால் இம்மாதிரியான விளிம்புநிலை கருத்தியல்களை யாரோ ஒருவர் பேசித்தானே ஆகவேண்டியிருக்கிறது. 


இயக்குநர் ஜோய் பேபி 

இதை பெரிய நடிகர்களை நடிக்க வைத்து எடுத்திருப்பது இது சமூகத்தின் காதுகளுக்குள் விழட்டும் என்றுதான் திரைப்படம் எடுத்தவர்களுக்குத் தோன்றியிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த 'The Great Indian Kitchen' படமும் இதை போன்ற ஒன்றைதானே பேசியது. பெண் என்றால், சில கட்டங்களைச் சத்தமின்றி கடந்து தானே ஆகவேண்டும் என்ற நிலைபாட்டை இம்மாதிரியான திரைப்படங்கள் உடைத்துக்கொண்டுதானே இருக்கின்றன. பெண் கருத்தியல்களில் சிதறும் சிறு துரும்புகளாக இவை எங்கோ தன்னைப் புதைத்துக்கொள்கின்றன. கண்டெடுத்து நம்முன் வைப்பவர்களை பாராட்டுவோம். 

வாழ்த்துகள் படக்குழுவினருக்கு.. 






Thursday, 13 October 2022

பொன்னியின் செல்வன் 1

 பொன்னியின் செல்வன் 1 : ஒரு பார்வை  




இங்கிலாந்து போயிருந்த போது தியேட்டர் சென்று பிகில் படம் பார்த்தது, அப்புறம் கொரோனா, அதன் பிறகு மீண்டும் இங்கிலாந்து போனபோது அண்ணாத்தே படத்துக்குப் பிறகு இப்போதுதான் தியேட்டர் போய் படம் பார்க்கிறேன்.




PS 1 படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன். பள்ளிக்காலங்களில் அம்மா பைண்ட் செய்து வைத்த பொ செ புத்தகத்தைப் படித்த பிறகு, கல்லூரி காலம் முடிந்து ஒரு முறை படித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 25 வருஷங்களாக அதை மீண்டும் தொடவே இல்லை. இந்த முறை படம் வெளிவருவதற்கு முன் படிக்கலாம் என்ற ஒரு டெம்ப்டெஷன் இருந்தது. கோவை புத்தகத் திருவிழாவில் புத்தகத்தை வாங்கியும் விட்டேன். ஆனால் நான்கைந்து பக்கங்கள் வாசித்ததும் பழைய வாசித்த நினைவுகள் வரவும் நிறுத்திக் கொண்டேன். வாசிக்கும் ஆர்வத்தை கட்டுப்படுத்திக் கொண்டேன். அத்தனை நேரமும் என்னிடம் இல்லாதிருந்ததும் உண்மை. எந்தவிதமான முன்முடிவுகளும் இல்லாமல் படத்தை நேரடியாகச் சென்று பார்ப்பது என்று முடிவு பண்ணினேன்.



எல்லோரும் படம் பார்த்துவிட்டு வந்து இங்கு மற்றும் வாட்ஸ்அப்பில் நடத்திய crash course எல்லாம் படித்தும் கதை சரியாக நினைவுக்கு வராததால் அதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளவில்லை. ஒருவழியாக படத்தைப் பார்த்தாகிவிட்டது.

1. படத்தை திரையில் பார்த்தபோது, பாகுபலி அளவுக்கு பிரமாண்டம் இல்லையென்றாலும் நன்றாகவே இருந்தது. போர்க்காட்சிகள், கடைசி கடல் காட்சிகள் தவிர அதிக இரைச்சல் இல்லை.

2. திரைக்கதையில் ஒரு சில பொத்தல்கள், இடைவெளிகள் இருந்தபோதும், படம் புரிந்தது. நான் திரைக்கதையை மட்டும் தான் குறிப்பிடுகிறேன்.

3. சோழா சோழா பாட்டுக்கு நண்பர் இளங்கோ கிருஷ்ணனுக்கு சபாஷ். படத்துடன் இணைந்து பார்க்கும்போது தான், திரைகாட்சிக்கு, சொற்கள் ஓர் அழுத்தத்தைக் கொடுத்திருப்பது தெரிகிறது.

4. ஒரு இடத்திலும் திரை வசனம் ஷார்ப்பா இல்லை. 'நீயும் ஒரு தாயா?' என்று மொக்கையாக ரகுமான் பேசும் ஒரு வசனம். நிறைய இடங்களில் இப்படிதான் இருக்கிறது. பல இடங்களில் abrupt ஆக வசனம் நிற்பது போல இருக்கிறது.

5. ரஹ்மான் இசை நன்றாகவே ஒட்டியிருக்கிறது திரைப்படத்துடன். Historical, Non-Historical என்றெல்லாம் பேச தேவையும் இல்லை.

6. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பது போன்ற பதட்டம் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லாத கதைக்களம் இது. அதனால், அடுத்து பாகம் என்ன என்று கிளப்பிவிடாமல், கதையின் தொடர்ச்சியை இரண்டாம் பாகமாகப் பார்க்க வேண்டும் என்று தோன்ற வைப்பதால், இந்த படம் ஓகேதான். இங்குதான் ஒரு நாவல் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. தன்னுள் இருக்கும் கதை சொல்லும் பாங்கை ஒவ்வொன்றாய் எடுத்து வைக்கிறது. அந்த வகையில் திரைக்கதையாக முடிந்த அளவுக்கு நியாயம் செய்யப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

7. மூலக்கதை அமரர் கல்கி என்று போட்டிருக்கிறார்கள். இதிலெங்கே கல்கியின் மரியாதை குறைந்தது என்று தெரியவில்லை. புத்தகத்தைப் புத்தகமாகப் பாருங்க; சினிமாவை சினிமாவாகப் பாருங்க. ஓப்பீட்டில் வைக்க ஒன்றுக்கொன்று ஏதுவான தளம் அல்ல. இது புரியாததால் தான் கல்கிக்கு நியாயம் கற்பிக்கவில்லை என்கிறார்கள்.

8. நடிகர்கள்? அவரவர் இடத்தை அவரவர் நிரப்பியிருக்கிறார்கள். அவ்வளவே..



அடுத்து தியேட்டரில் நடக்கும் அட்ராசிட்டிஸ் :

1. திரையில் படம் ஓடிக்கிட்டு இருக்கும் போது நிறைய பேர் மொபைல் பார்த்துக் கொண்டு இருந்தனர். கண் முன்னாடி இத்தனை பெரிய ஸ்கிரீனில் படம் சத்தமாக ஓடும்போதும் மொபைல் பார்க்க தோன்றுகிறது என்றால், mobile addiction அதிகமாகி இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. சும்மாவே மொபைலைத் திறப்பதும் ஒன்றுமில்லாத மெசேஜுகளைப் படிப்பதும் மூடுவதுமாக இருக்கிறார்கள். ஆடின காலும் பாடின வாயும் நிக்காது என்பது போலதான் இது இருக்கிறது.

2. 40, 50 வயதில் இருப்பவர்களின் இறப்புகளைக் கேள்விப்படும் போதெல்லாம் இங்கு எல்லோரும் கவலை கொள்வதைப் பார்க்கிறோம். தியேட்டரில் முக்கால்வாசி பெண்களும் ஆண்களும் பாப்கார்னும் பஃப்ஸும், கோக்கும், ப்ரெஞ்சு பிரைஸுமாக தட்டு தட்டாக டப்பா டப்பாவாக நொறுக்கிக் கொண்டே இருக்கிறார்கள். திரையரங்குகளில் நடக்கும் இந்த உணவு வணிகம் நம் உயிரை குடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

3. திரையில் புதிதாக வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் 'இது யாரு, இது யாரு' என்று 'கண்டுபிடியுங்கள் பார்ப்போம்' என்று competition வேறு பக்கத்தில் இருப்பவர்களிடம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு குடும்பம் ஓட்டு மொத்தமாகவே இந்த டிஸ்கஷனில் இருந்தார்கள். அதற்காக கூகிளைத் துணைக்கு வைத்துக் கொண்டார்கள் என்பது பெரும்சிறப்பு 😀.. இந்த படம் குறித்த over hype தான் இதற்கு காரணம்.



அவ்வளவுதான்..
எனக்குப் பொன்னியின் செல்வன் படம் பிடித்திருக்கிறது.
டாட்.



Saturday, 24 July 2021

ஓவர்டேக்கும் அந்த டிரக்கும்

ஓவர்டேக்கும் அந்த டிரக்கும் 🚍 



           


           கெட்டதாய் காட்டப்படும் ஒன்றின் மீது ஏற்படும் ஈர்ப்பு சற்று வசீகரமானது. அது கண்முன் நின்று தொந்தரவு செய்யும்; தூங்கவிடாது. இப்படிதான் 'ஓவர்டேக்' என்னும் படம் பார்த்தும் ஆகிற்று.


            'ஓவர்டேக்' (Overtake) மலையாள படத்தைப் பார்க்க உட்கார்ந்தேன். 2017 யில் வெளிவந்த படம். ஆரம்பித்த கொஞ்ச நேரமும், முடியும் கொஞ்ச நேரமும் மட்டுமே கதை. மற்ற நேரமெல்லாம் Road show தான். அதுவும் பிரவுன் + கிரீன் கலர் dusty மலையின் வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கணவனும் மனைவியும் ஏசி வேலை செய்யாத பழைய பென்ஸ் காரில் செல்ல, அவர்களை தொடர்ந்து வந்து கொல்ல முயற்சிக்கும் டிரக் வித் டிரேய்லர்.. அது ஒரு Kenworth truck.. 🚛




                அந்த சிறிய கார் ஓவர்டேக் செய்ய முயலும் ஒவ்வொரு சமயத்திலும் அதை முன்னே செல்லவிடாமல், விடாது துரத்தும் பெரிய பூதமாய் அந்த டிரக்.. 🚍


              எனக்கு கதை மேல் பெரிய பிரியமில்லை. ஒளிந்து வந்து அட்டாக் செய்யும், துரத்தும், பூச்சாண்டி காட்டும் அந்த டிரக்கை மிகவும் பிடித்துப்போனது. அதன் டிரைவர் யாரென்று காட்டவில்லை; யாராக இருந்தால் என்ன, யாராகவும் இருந்துவிட்டு போகட்டும் என்னும் படியாக அதன் மேல் ஒரு பிரியம். 


              பழைய இரும்பு காய்லான் கடையில் இருந்து வந்தது போன்ற அதன் தோற்றம், இரு புகைபோக்கி குழாய்களின் வழியே வரும் சாம்பல் புகை, பயமுறுத்தும் ஆனால் பிடித்துப்போகும் அதன் முகம்.. அதுதான் வில்லன் என்று மனதுக்குள் விழுந்துவிட்டது.  🚛




                மலையின் மீது வளைந்து நெளிந்து வந்து கனவில் அது துரத்திய போதும் மகிழ்ச்சியாய் எழுந்தமர்ந்தேன். படத்தின் கதையில் பெரிதாய் கொண்டாட அந்த டிரக் மட்டுமே இருந்தது. இது Duel என்ற ஆங்கில படத்தின் ரீமேக். இதற்காக எடுக்கப்பட்ட டிரக் KSEB - Kerala State Electricity Board யின் அணை கட்டும் பயன்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகிறது. 


                இப்படியான பழைய டிரக்குகளை மலைகளில் கட்டுமான பணி நடக்கும் இடங்களில், பணி முடிந்ததும் அங்கேயே மலை பாறைகளுக்கு இடையில் சொருகி நிற்பதைப் பார்த்திருக்கலாம். நான் வயநாடு செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன். பழைய காலங்களில் இவ்வாறு மலைகளில் இடையிடையே அணை கட்டுமான பணி முடிந்ததும் சிக்கிக்கொள்ளும் பெரிய வண்டிகளை அவ்வாறே விட்டுவிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்றை படக்குழுவினர் எடுத்து பயன்படுத்தி இருக்கின்றனர். 


              படத்தின் நாயகர்கள் தப்பித்தாலும், தவறு இழைத்தவனுக்கு தண்டனை கிடைக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்த டிரக்கின் வில்லத்தனத்தை காட்டியே முடிக்கிறார்கள்.  





Sunday, 20 June 2021

ஷேர்னி (Sherni) - இந்தி சினிமா - ஒரு பார்வை

  ஷேர்னி - Sherni Movie



ஷேர்னி திரைப்படத்தை OTT தளத்தில் பார்க்க நேர்ந்தது. முந்தைய நாளே அந்த படம் என் கண்ணில் பட்டிருந்த போதிலும், மொழி தடுமாற்றம் - இந்தி மொழி படம் - காரணமாக யோசித்துவிட்டேன். ஆனாலும் அதன் கதை சுருக்கம் என்னை பார்க்காமல் ஒளிந்து கொள்வதற்கான காரணங்களைக் கேட்டது. கேள்விகளே, மனிதனின் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. படம் பார்க்கப்பட்டுவிட்டது என்னால். 

Sherni என்றால் இந்தியில் பெண் சிங்கம் என்று பொருள். ஆனால் இந்த படத்தில் வருவது பெண்புலி. புலிக்கு உருது மொழியில் 'ஷேர்' என்பதும் அதுவே, பேச்சு வழக்கு மொழியாய் இந்தியிலும் அமைந்துவிடுவது உண்டு. அதுதான் பெண்புலியாய் 'ஷெர்னி'. 




மனிதர்களை வேட்டையாடும் பெண்புலியொன்று மலைகிராமங்களில் சுற்றித்திரிய, ஒரு காட்டை விட்டு மற்றொன்றுக்கு நகர்ந்து இரண்டு குட்டிகளை ஈன்று, பேராசையும் மமதையும் கொண்ட மனிதர்களிடம் சிக்கி இறந்து போவதே கதை. இங்கு வித்யா பாலன் (Vidya Balan) காட்டிலாக்கா அதிகாரியாக இடமாற்றத்தில் வந்து சிக்குகிறார். ஆண்கள் நிறைந்திருக்கும் அலுவலக சூழல், புலியைக் கொன்று பிடிக்க வேட்டையாளர்களின் சாதுர்யம், அதை சாதகமாக்கும் அரசியல் நாயகர்கள், வனத்தை நேசிக்கும் ஆனால் பயம் கொள்ளும் மலை வாழ் மக்கள் என்று கதை யதார்த்த களத்தைச் சுற்றி இயங்குகிறது. 

வனத்துறைக்குள்ளே இரண்டாய் உடைகிறது மனித அரசியல். மலைவாழ் மக்களுடன் தொடர்பில்லா மேல் தட்டு அதிகாரிகள், மக்களை, அவர்களின் மலையைச் சுற்றி இருக்கும் வாழ்விடங்களை, ஆடு மாடுகள் மேய்ப்பிடங்களை புரிய முடியாத அந்த அதிகார வர்க்கம், அவர்களுக்கான அரசியல் தொடர்புகள், இவர்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் கீழ் மற்றும் நடுத்தர தட்டு அதிகாரிகள், அதில் ஒன்றாய், காட்டிலாக்கா அதிகாரியாய் வரும் வித்யா பாலன் என்று கதை யாரையும் முதன்மைபடுத்தாமல் பிரச்சனையை மட்டும் திரைப்படம் முழுமையும் இழுத்து செல்வது சிறப்பு.




"ஒரு பொம்பளையை அனுப்பியிருக்காங்க.." என்ற பெண்ணினம் குமுறச்செய்யும் சொற்கள், அதை கேட்டதும் புலியாய் பொங்கி எழாமல் கண்களில் மட்டும் சிறிது சலிப்பைக் காட்டியபடி சாதாரணமாக பேசத்தொடங்கும் வித்யா பாலன், மிக நேர்த்தியான தேர்வுதான் இக்கதைக்கு. 

"நான் பார்த்துக்குகிறேன்.." என்று தைரியமூட்டும் மேல் அதிகாரியும் அரசியலுக்குள் தான் இயங்குகிறார் என்று தெரிந்ததும், நிதானமாய் ஆனால் கோபம் கலந்த, "கோழை" என்ற சொல்லுடன் விலகுவதும் சிறப்பு. யதார்த்தம் பேசுவதற்கு இங்கு ஆண் பெண் என்ற பேதம் எதற்கு? மனித நேயம் உள்ள மனிதனாய் இருந்தால் போதும். 

இங்கு வித்யா பாலனுக்குப் பதிலாக ஒரு ஆண் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் பெரிதாய் மாறியிருக்க போவதில்லை என்பது என் கருத்து. அதனால் இங்கு தலைப்பில் இருக்கும் பெண் புலி Sherni என்பதை நான் அந்த காட்டு புலிக்கானதாக நான் எடுத்துக் கொள்கிறேன். படத்தின் இறுதிவரை என்னால் அப்படிதான் பார்க்க முடிந்தது. ஏனென்றால், அவர் ஒரு பெண் அதிகாரி என்ற உணர்வை (குடும்பத்தாலும் அதிகமான மன உளைச்சல் இல்லை), பாலின வேறுபாட்டால் பெரிதாய் பாதிக்கப்பட்டதாய் எங்கும் காட்டப்படவில்லை அல்லது வித்யா பாலன் அவ்வாறு செய்யவில்லை. ஒருவேளை இயக்குனர் பெண் கதாபாத்திரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று எடுத்திருந்தால், இதை, இயக்குனர் அமித் மசூர்க்கர் (Amit Masurkar) அவர்களுக்கு ஒரு பாராட்டாய் தெரிவிக்கிறேன். வித்யா பாலனை மனதில் வைத்துதான் காட்டியிருந்தார் என்றால், அதன் தீவிரம் போதவில்லை என்று என்னால் சொல்லமுடியும். 

கிராபிக்ஸ் புலி வந்து திரைப்படத்திற்கான பார்க்கும் ரசனையை குறைத்துவிடுமோ என்ற யோசனை என்னுள் இருந்தது. அவ்வப்போது அதை காட்டவேண்டிய கட்டாயங்கள் நேரும் இடத்தில், நிஜ புலியானது, வனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவின் வழியாக காட்டப்படுகிறது. 


ஷரத் சக்சேனா



Conservationist என்னும் கதாபாத்திரத்தில் வரும் ஷரத் சக்சேனா (Sharat Saxena) இலகுவாக யதார்த்தத்தில் வேட்டைக்காரன் இப்படிதான் இருப்பான் என்பதை வடிவமைக்கிறார். வனப்பகுதிகளில் ரிசார்ட் கட்டுவதும், விலங்குகளை வேட்டையாடி அதில் வரும் புகழை போதையாய் கொண்டாடுவதும் இன்றைய மான் வேட்டை அத்துமீறல்களின் உளவியலாக கொள்ளலாம். 


இயக்குனர் அமித் மசூர்க்கர்



இந்த படத்தில் புலி என்பது ஒரு குறியீடு. அவ்வளவே.. புலி என்பதை இயற்கைக்கான, மற்ற விலங்குகளுக்கான குறியீடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் எந்த துறைக்கும் பொருத்திக்கொள்ளலாம். 


இந்த பதிவின் தலைப்பில் 'ஷேர்னியும் நானும்..' என்பதில் என்னுடைய தனிப்பட்ட மனநிலை ஒளிந்திருக்கிறது. 

சிறு வயதிலிருந்தே எனக்கு ஆட்கொல்லி புலிகளைக் கொன்ற ஜிம் கார்பெட்டின் எழுத்தின் மீது ஒரு மையம் உண்டு. அவர் மனிதர்களைக் கொல்லும் புலிகளை மட்டுமே கொன்றிருக்கிறார். அதையும் அவர் அந்த கிராமத்து மக்களிடம் விசாரித்து தெரிந்துக்கொண்ட பிறகே வேட்டைக்குக் கிளம்புவாராம்.

இத்திரைப்படத்திலும் அதுதான் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அன்றைய காலகட்டங்களில் மனிதனை மிருகங்களிடமிருந்து பாதுகாக்க பெரிதாய் முயற்சிகள் இல்லை. இந்தியாவில் சரணாலயங்கள் வந்ததே 1936யில் தான். அதனால் அரசு இதைதான் செய்யமுடியும் என்பது அன்றைய களநிலவரம். 

இயற்கையின் மீது தீரா மதிப்பும் காதலும் கொண்டவராக இருந்த அவர், ஒரு முறை, மூன்று மிலிட்டரி அதிகாரிகளை வேட்டைக்கு அழைத்து சென்ற இடத்தில், அவர்கள் கிட்டத்தட்ட 300 நீர் பறவைகளைச் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு பதறிப்போனவர், இனி எக்காரணம் கொண்டும் வேட்டை என்பதை விளையாட்டாய் செய்யக்கூடாது என்ற முடிவுக்கு வருகிறார். அதனுடன் சூழலியலைக் காக்க முனைகிறார். 

அவருடைய 'முக்தேஸ்வர் ஆட்தின்னி' குறித்த எழுத்தில், ஆட்கொல்லி புலியைக் கொன்றபிறகு என்ன எழுதுகிறார் என்றால், 

"மனிதர்களை வேட்டையாடும் ஆட்கொல்லி புலிகளை சுட்டு பிடிப்பது பெரிய திருப்தியை கொடுக்கிறது.... 

..... இதையெல்லாம் விட, மிக உன்னதமான திருப்தியாக நான் நினைப்பது என்னவென்றால், ஒரு துணிவான சிறு பெண்ணுக்கு, இந்த பெரிய பூமியில் ஒரு சிறு பகுதியை பயமின்றி பாதுகாப்பாய் நடக்க வழி செய்தது."

ஆனால், இப்போதோ, தனி மனிதனே தனது தோட்டத்தைச் சுற்றி மின்வேலியிட்டு, பூசணிக்குள் வெடி மருந்து வைத்து பெரிய யானையின் வாயை கிழித்துவிடுகிறான், பெட்ரோல் பாட்டில் வீசி காதை கிழிக்கிறான். முடிவில் அதன் இறப்பை உறுதி செய்கிறான். 

மிருகத்திற்கும் மனிதனுக்குமான இந்த நீண்ட கால போராட்டத்தில் மிருகமும் இவனிடமிருந்து வித்தைகளை கற்றுக்கொள்கிறது; மனிதனும் அதே போல தான். 

மக்களுக்கும் புலிகளுக்கும் இடைப்பட்ட போராட்டத்தை நிறுத்த, புலிகளை அவற்றுக்கான சரணாலயங்களிலும் மக்களைக் காடுகளுக்கு சற்று தொலைவிலும் நிறுத்த முயற்சிப்பதே இன்றைய காலகட்டத்தின் செயலாக இருக்கமுடியும். 

இத்திரைக்கதையிலும் அதுவே தீர்வாகிறது. காடுகளுக்கு, அடர்ந்த வனங்களுக்கு, வனவிலங்குகளுக்கு, அங்கு வாழும் மக்களுக்கு நேரும் நியாயமற்ற நிலையைச் சுட்டும் கதைக்களம், ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. இந்நிலையை மாற்ற, பெரிதாய் புரட்சி செய்துவிடமுடியாத சங்கடங்களையும் இதில் காட்டப்படும் பின்புலங்கள் நமக்கு காட்டுகின்றன. இருந்தும், அந்த புலியின் குட்டிகளை காப்பாற்றி படம் முடிக்கப்பட்டது போல, சின்ன சின்னதாய் இயற்கையையும் நம்மையும் சமன் செய்துக்கொள்ளலாம் நாம்.                                    



Sunday, 21 June 2020

பெண்குயின் - ஒரு பார்வை

'பெண்குயின்'





பெண்கள் சம்பந்தப்பட்ட  திரைக்கதைகளைத் தொடர்ந்து திரையில் பார்த்து வருகிறோம். பெண்கல்வி, பெண் குழந்தைகள், பாலியல் வன்முறை, பெண் முன்னேற்றம் என்று எத்தனையோ பார்த்துவிட்டோம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பெண் சார்ந்த நிலைபாடுகள் திரைக்கதைகளிலும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. 

தன்னை பாலியல் வன்முறை செய்த ஆணையே தேடிப்பிடித்து திருமணம் செய்வதாக, அதுவே, பெண்ணுக்கான நியதி, அவளின் கற்பின் உண்மை என்றெல்லாம் திரைக்கதைகள், உண்மைவிளம்பிகளாக தங்களை பாவித்துக்கொண்டு படங்கள் வெளியிட்டன. அடுத்தடுத்த காலங்களில் தன்னைக் கெடுத்தவனை பெண் பழிவாங்குவதாக கதைகள் வெளிவந்தன. இவை சமூகத்தில் வாழும் பெண்களைப் பிரதிபலித்ததாகச் சொல்லப்பட்டது. இருக்கலாம். அல்லது திரைக்கதைகள் பெண் சமூகத்தைக் கட்டமைக்க முயற்சித்திருக்கலாம். 

பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்முறை, தகப்பனாகப்பட்டவன் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளைத் தேடிச்சென்று கண்டுபிடித்தல் என்று ஏகப்பட்ட கதைகள் வெளிவந்தன கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில். அதே வரிசையில் வந்த கதைதான் இதுவும் என்று கடந்துப் போய்விட முடியவில்லை. 

இக்கதையில் கடத்தப்படுவது ஆண் குழந்தை, தகப்பன் தேடிக் கண்டுபிடிக்காமல் தாயே தேடிக்கண்டுபிடிக்கிறாள் என்றெல்லாம் ஆறு வித்தியாசங்களாக அடுக்கிக் கொண்டே போகலாம்தான். ஆனால், அதுவல்ல இக்கதையின் மையம். இதன் கருப்பொருள் படமெங்கும் தேடினாலும் அத்தனை எளிதில் கிடைக்காததாய் அதை இயக்கிய இயக்குனரே தேடிக்கொண்டிருப்பதாக நம்மை நம்பவைக்கப்படுகிறது. 






ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன ஆண்குழந்தையை அந்த தாய் தேடிக்கொண்டேயிருக்கிறாள். இதற்கிடையில் அவளின் முதல் கணவன் பிரிந்து, இரண்டாவது கணவனின் குழந்தையை வயிற்றில் சுமந்திருக்கிறாள். எட்டு மாதம்.. அந்த சமயத்தில் பையன் கிடைக்கப் பெறுகிறான். பேசாமல் இருக்கிறான். அவனுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டரானவர், உடலுறுப்புகளை விற்பனை செய்ய குழந்தைகளைக் கொலை செய்பவர். அதையும் அவளே ஹிட்ச்காக் வழியில் சென்று கண்டுபிடிக்கிறாள்.

இந்த பையனும் அவரிடம்தான் இருந்தான் என்று செல்லும் கதையில் டாக்டர் கைது செய்யப்பட்டு, அவர் ஒரு Game என்று அந்த பெண்ணுடன் பேச ஆரம்பிக்க... இப்படி சொதப்பலாய் நீளும் கதையில், அவளின் தோழியே தான் கடத்தலுக்குக் காரணம் என்று தெரிய வர, எட்டு மாத கர்ப்பணி பெண்ணுக்கு ஏற்படாத ஆயாசம் பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது. 







இப்படம் ஒரு விஷயத்தை சரியாய் கையாண்டிருக்கிறது என்றால், அது இன்றைய பெண் சமூக சூழல்தான். பெண் சுதந்திரம், மண விலகல், இரண்டாம் திருமணம் என்று சிலவற்றை இலகுவாகத் தொட்டுச் சென்றிருக்கிறது. இதெல்லாம் இன்றைய சமூகத்தில் சகஜம் என்பது போன்ற கட்டமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. 


கதை மலைப்பிரதேசம் ஒன்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. அழகான மலைகள், பள்ளத்தாக்குகள், திகில் படுத்தும் காட்சிகள் என்று கேமரா சொல்லும் கதையை நாம் ரசிக்கலாம். 

ஏகப்பட்ட குறைகள், திரைக்கதையில் கிழிசல்கள் என்று இருப்பதை நாம் கடந்து வேறு முக்கிய பார்வைகளுக்குள் செல்வோம். 







முக்கிய பார்வைகள் இரண்டு : 


எட்டு மாத கர்ப்பிணிப்பெண், இத்தனை தூரம் ஒரு கொலைகாரனைத் தேடி இருட்டில், மலையில், காட்டில் அலைவது சற்று ஏற்றுக்கொள்ள முடியாததாய் இருக்கிறது. அதை அந்த கொலைகார டாக்டர் அவளிடம் கேட்கும்போது, 'நான் கர்ப்பிணிதான், மூளை செத்தவள் அல்ல..' என்று அவள் சொல்லும் வசனம் பெண்ணாய் கேட்பதற்கு, ஆஹா என்று இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை, மனநிலை இரண்டும் அதையெல்லாம் தாங்கும் வலு பெற்றதாய் இருக்காது. வயிற்றில் இருக்கும் குழந்தையைவிடவும் ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை முக்கியமாகிப் போகும் சந்தர்ப்பங்கள் அவளை ஒரு நல்ல தாயாய் உயர்த்தினாலும், அதை ஏற்றுக்கொள்ள படம் பார்க்கும் ஒருவனின்/ ஒருத்தியின் மனதை, அவளின் மேடிட்ட வயிறு சலனப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதைதான் ஒரு இயக்குனராய் ஈஸ்வர் கார்த்திக் விரும்பினார் என்றால், அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் எனலாம். 


மனிதனின் மனம் என்பது ஒரு குற்ற உணர்ச்சியுடனே ஒரு நாளின் சிலநேரங்களையாவது கழிக்கும் தன்மை உடையது. பழைய நினைவுகளினாலோ, ஆபத்தின் நேரடி அனுபவத்தினாலோ இம்மாதிரியான சஞ்சலங்கள் இருந்துக்கொண்டே இருக்கும். அதை இயக்குனர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மனிதன் அசூயைப்படும், அவஸ்தையாய் சிந்திக்கும் விஷயங்களை பார்க்க வைத்து, அவனின் உளவியலை உற்று நோக்குதல், மனித சமூகத்தில் அந்த வலியின் போக்கைக் கண்டறிதல் என்பது ஒருவித குரூரமான விளையாட்டாய் எடுத்துக்கொள்ளலாம். அதை இப்படத்தில் நிகழ்த்தியிருக்கிறார் என்றும் கொள்ளலாம். 


அல்லது, கர்ப்பிணியாய் இருக்கும் பெண்ணின் தீவிர உளவியல் பிரச்சனையாக, இயக்குனர் இதை கொண்டு சென்றிருக்கலாம். 

'அந்த ஏரியின் பக்கம் போகாதே' என்னும் டாக்டரின் எச்சரிக்கை, அவளை அங்கே போகச் சொல்கிறது என்பது கர்ப்பமாய் இருக்கும் பெண்ணின் மனநிலையின் படிமங்களைக் குறித்து, நம்மை யோசிக்கச்சொல்கிறது. தன் மகனை இத்தனை வருடங்களாக மறைத்து வைத்திருந்தவனிடமிருந்து காரணங்களை அறிய விழைகிறாள். அந்த எண்ணத்தைத் தீவிரபடுத்துகிறாள். இது வயிற்றில் வளரும் மற்றொரு சிசுவுக்கான ஆபத்து என்பதைப் புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு என்ன பெண் இவள் என்ற சாதாரண கேள்வியுடன் கடந்துச் செல்லமுடியாது. இது அந்த நேரத்து கர்ப்பமாய் இருக்கும் அப்பெண்ணின் தீவிரதன்மை, அதீத அன்பு எதன் மீது சார்ந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். 

இக்கதை அமைப்பை, இப்படி ஒரு பொம்பளை இருப்பாளா, இவள் மட்டும்தான் கண்டுபிடிக்க அலையனுமா, போலிஸ் இல்லையா, வீட்டுக்காரன் இல்லையா போன்ற சாதாரண காரணங்களுக்காக, இப்படம் எடுக்கப்படவில்லை என்பதை மேற்சொன்ன காரணங்களைக் கொண்டு யோசித்து பார்த்தால் புரியக்கூடும். 
கார்த்திக் சுப்புராஜ் படம் என்பது ஒரு கூடுதல் பார்வையாக இருக்கக்கூடும். 


ஆண்-பெண் சமன்பாடு :


இக்கதையில், பெண்ணைத் தூக்கிப்பிடித்திருப்பதாக சொல்ல ஏதுமில்லை. ஒவ்வொரு முறை அவள் பரிதவித்து விடையறியாமல் நிற்கும்போது, அவளுக்கு யோசனை சொல்வதாகவும் கதையை முன்னெடுத்து செல்ல உதவுவதாகவும் இருப்பதாய் காட்சி படுத்தப்பட்டிருப்பது ஆணை கொண்டுதான் என்பதை நாம் கவனிக்கலாம். 


அவளின் பையன் கிடைத்ததும், அவனின் செய்கைகளுக்கு, அவளின் முதல் கணவன்தான் யுக்தியை வெளிபடுத்துகிறான். 'ஒருவேளை இவனைக் கடத்தியவன் இவனை என்ன சொல்லி அனுப்பி வைத்திருப்பானோ..', மகன் மிரட்டலுக்கு அடிபணிவதாக சொல்வது.. இப்படி.. 


அடுத்ததாய், கடத்தியது ஒரு பெண் என்பதை அவளின் இரண்டாவது கணவன்தான் சரியாய் வழிகாட்டுகிறான். கொலைகார டாக்டர் கூட, அவளின் Critical sense யைப் பயன்படுத்தச் சொல்லி Game விளையாடுகிறார்.

கடைசியில் அவளின் தோழி, தான் கடத்தியதைச் சொல்லும்போது, 'ஓவர்கோட், குடை, கொலை, கடத்தல் என்றால் ஆண் என்றுதான் நினைப்பதா..' என்பது பெண்ணின் ஆளுமை இம்மாதிரியான செயல்களிலும் இருக்கக்கூடும் என்ற தாழ்மையை தான் உண்டுபண்ணுகிறது.  

இறுதியில் அம்மா என்னும் சொல்லை உணர்ச்சிகளுக்கு உரியதாய் சமர்ப்பித்திருப்பது இயக்குனர் கதை முழுவதும் கருப்பொருளைத் தேடி கடைசியில் கண்டெடுத்திருப்பதாய் சொன்னது, இதைதான். இது பெண்மை, தாய்மை, தாய்மையின் தீவிரம் என்னும் பெண்ணின் குணாதிசியங்களுடன் விளையாடும் உத்தியாகவும் எடுத்துக்கொள்ளலாம். 


இதில் ஆண் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரும் அறிவோடும், பெண்ணின் கதாபாத்திரம் என்பது உணர்வு சார்ந்தும் அதுவும் கர்ப்பம் என்ற கூடுதல் உணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. இக்கதை, பெண்ணுக்கானது என்று மேம்போக்காய் சொல்லப்படுவதை, இக்காரணங்களால் நாம் ஒதுக்கிவிடமுடியும். இருந்தும் இக்கதையின் ஏதோ ஓன்று ஈர்ப்பைக் கொடுப்பதை மறுப்பதற்கில்லை. 



'பென்குயின்'  

~அகிலா
எழுத்தாளர்..