Saturday, 2 November 2024

மெய்யழகன் | ஆண்கள் உலகம் | திரை விமர்சனம்

மெய்யழகன் 

ஆண்கள் உலகம் 




இயக்கம்: பிரேம் குமார் 

நடிகர்கள்:    கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண்,ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி 

ஒளிப்பதிவு:     மகேந்திரன் ஜெயராஜூ

எடிட்டிங்: கோவிந்தராஜ்

இசை: கோவிந்த் வசந்த்

தயாரிப்பு நிறுவனம்: 2D எண்டடெயின்மெண்ட் (ஜோதிகா, சூர்யா)

******

மெய்யழகன்

 


மெய்யழகனை எழுதும் அளவுக்கு உந்தியிருப்பது இரண்டு விடயங்கள்: 
ஒன்று, கதையின் பின்புலத்தில் கத்தியின்றி இரத்தமின்றி வெட்டப்படும் உறவுக்கயிறு. 
இரண்டாவது, கண்முன் காட்டப்படும் கிராம, நகர மனித மேம்பாடுகள்/சிக்கல்கள். 


வீட்டு / சொத்து பிரச்சனை: 

திரைக்கதையில், எடுத்ததும் கிட்டத்தட்ட அரை மணி நேரமாக காட்டப்படும் ஒரு குடும்பம் தனது வீட்டைத் துறந்து இரவோடு இரவாக வெளியேறும் காட்சி. அந்த வீடு அந்த குடும்பத்தலைவரின் சகோதரியின் கைக்கு போய் சேருவதாகப் பேசுகிறார்கள். அதுவும் கூட முணுமுணுவென்று. பின்னால் அந்த பிரச்சனைக் குறித்து பேசுவார்கள் என்று பார்த்தால், யாரும் அது குறித்து பேசவில்லை. கல்யாண வீட்டு சாப்பாட்டு அறையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் அமர்ந்து சாப்பிடுவதாகக் காட்டுகிறார்கள். அவ்வளவே. படம் பார்க்கிற நீங்கள் அருளின் பக்கமாக நிற்கச்செய்யும் உத்திதான் இது. நாம் தேடும் விடையை கதை நிராகரிக்கிறது. நான் சொல்வதை, நான் காட்டுவதைதான் நீங்களும் பார்க்க வேண்டும்; நம்பவேண்டும் என்பதாக செல்வதால், நமது மனசு அருள் கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கொள்ள முதலில் சற்று சிரமப்படுகிறது.    

இன்றைய சமூகத்தில்  வரதட்சணை என்னும் கான்செப்ட் மீண்டும் வேர் விட்டு முளைப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. தொலைகாட்சி விவாதங்கள் மூலம் அவை தூசு தட்டி எழுப்பப்பட்டு வருகின்றன. கல்யாணத்திற்கு நிற்கும் பெண்பிள்ளைகளை வைத்தே காய் நகர்த்துகிறார்கள். அதை பெண் பிள்ளைகள் ஆதரிப்பதும் நடக்கிறது. எம்மாதிரியான குடும்பங்களில் அது முளைவிடுகிறது என்றால், எந்த குடும்பங்களில் பரம்பரை சொத்து என்ற ஒன்று இல்லையோ, அங்கு அந்த வீட்டு பெண்பிள்ளைகள் பெற்றோர் கடன்பட்டாவது, தனக்கு கல்யாணத்தின் போது, வேண்டியதை செய்து விடவேண்டும் என்று நினைக்கிறார்கள், அல்லது நினைக்க வைக்கப்படுகிறார்கள். அதை ஒரு முதலீடாக, அந்த பெண்பிள்ளைகள் பார்ப்பதுதான் வருந்தத்தக்க விஷயம். பெண்ணுக்கு படிப்பை கொடுப்பதன் நோக்கமே, அதை பயன்படுத்தி, அவள் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பல பெண்பிள்ளைகள் திருமணத்திற்கு பிறகு, வீட்டிலேயே இருந்து கொண்டு ஹவுஸ் வைப்பாக வாழ்வது சுகம் என்று நினைக்கிறார்கள். இந்த விடயத்தையும் பிரமோட் செய்ய ஒரு கூட்டம், ஊடகங்களில் புறப்பட்டு வந்திருக்கிறது. 

இங்கு சிரமப்படுபவன் ஆண் எனும்போது, அவனுமே வரதட்சணையை ஆதரிக்கிறான். திருமணத்தின் போது அதீத நகைகளை கொடுப்பதையும், கார் பைக் என்று கொடுப்பதையும் நிறுத்திவிட்டால், வீட்டை பிரிக்கும்போது அல்லது சொத்தை பிரித்தெழுதும் போது, பெண்பிள்ளைகளுக்கும் அந்த சம உரிமையை அளிக்க தயங்காத ஒரு நிலை உருவாகும். சொத்தை ஆண் மையப்படுத்துதல் குறையும். நம்முடைய சமூகத்தில், திருமணத்தின் போது பெண் வீட்டார் அதிகமான செலவுக்கு உட்படுத்தப்படுவது உண்டு. 'உன் கல்யாணத்துக்கு அப்பா நிறைய செய்துட்டார். அதனால் உனக்கு சொத்தில் பங்கு கிடையாது' என்ற தோரணையில் ஆண் வாரிசுகள் பேசுகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, இரு வீட்டாரும் சமமாக செலவுகளை ஏற்றுக்கொள்வது நடைமுறையில் இருந்தது. இதன் பின்னாலிருக்கும் சமூக அரசியலே தனி. பெண்ணை சீதையின் உருவகத்திற்கு மாற்றும் ஆதிக்கக்கூறுகள்தான் இவை என்பது புரியாத இன்றைய நடுத்தரவர்க்கத்து பெண்கள்/குடும்பங்கள் பலியாவது வருத்தமான ஒன்று. 

பெண்ணுக்கான திருமணச்செலவைக் கணக்குக்காட்டி, பல குடும்பங்கள் சொத்து பிரிக்கும் விடயத்தில் கோர்ட் வாசற்படி ஏறி வருடக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஆண் பெண் வீட்டார் இருவரும் சமமாக ஒரு திருமணத்தில் தன்னுடைய பங்களிப்பை கொடுக்கும்போது, சொத்து பிரித்தல் கட்டத்தில், அந்த வீட்டின் ஆண் வாரிசுகள் பெண் பிள்ளைகளுக்கும் சொத்துக் கொடுப்பது குறித்து வருத்தம் இன்றி, தயக்கம் இன்றி செய்வார்கள். அவ்வாறு இல்லாமல் போகும்போதுதான் இந்த திரைப்படத்தில் காட்டியபடி குடும்பத்திற்குள், உறவுகளுக்குள் பலவித சங்கடங்களும் நெருடல்களும் உண்டாகின்றன எனலாம். ஆனால் இந்த திரைப்படம் அது குறித்து ஒரு லைனை மட்டும் இழுத்துவிட்டு, ஒரு நாள் கூத்தாக நடைபெறும், கிராமத்தில் சொந்த வீட்டை இழந்த ஒரு நகரத்தானின் கதையாக, பின்நவீனத்துவ பாணியில் சிறுகதையொன்றை அருமையாக மேடையேற்றிருக்கிறார்கள். 
 
இந்த திரைக்கதை சொத்துப்பிரிப்பு பிரச்சனையை பின்னுக்குத் தள்ளி வைத்து, அதன் மேல் ஊரை வெறுக்கும் அல்லது ஊரை எதிர்நோக்க முடியாத அருளின் உளசிக்கலை முக்கியப்படுத்தி உள்ளது. மறைக்கப்பட்ட இந்த பின்புலத்தைப் பற்றி திரைப்படத்தில் அதன்பிறகாக யாரும் பேசாமல் போயிருந்தால் பரவாயில்லை. அந்த டாபிக் தான் இதன் மூலம் என்பது போல, சைக்கிள், ஜல்லிக்கட்டு என்றெல்லாம் சுற்றி வந்து, கடைசியாக மெய்யழகன், 'அந்த நாலு பேரை மன்னிச்சிடுங்க அண்ணே' என்கிறான். தன்னையுமறியாமல் (அறியாமல் எல்லாம் இல்லை) கதாசிரியர், என் கதையோட மையப்புள்ளி இதுதான் என்று சிவப்பு மை கொண்டு லைன் போடுகிறார். 


கிராம, நகர மனித சிக்கல்கள்: 

இந்த சிக்கல்களை பல கதைகள் பேசியிருக்கின்றன. கிராமத்து ஆணுக்கும் நகரத்து பெண்ணுக்குமாக (மாட்டுக்கார வேலன், பட்டிக்காடா பட்டணமா, தம்பிக்கு எந்த ஊரு, சகலகலா வல்லவன்) இருக்கும் சிக்கல்களைத் திரைக்கதைகளாக நாம் பார்த்துவிட்டோம். ஆண் மைய சமூகத்தில், நகரத்து பெண் சேலை கட்டி, குடும்ப குத்துவிளக்காக மாறிவிடுவாள். அவையெல்லாம் காதலை அடிப்படையாகக் கொண்டவை. 

உறவு அல்லது நட்பை அடிப்படையாகக் கொண்டு, ஆணுக்கும் ஆணுக்குமான ஈகோ சிக்கலைப் பேசுகிறது இப்படம். அதையும் கூட சில காட்சி அமைப்புக்களில் கிராமத்துக்காரன் அப்பாவி, நல்லவன் என்ற கோணத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பதை உணரமுடிகிறது. அதன் உச்சமாக, 'நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன், நீயும் அப்படியாகு' என்று காட்டுவதற்காகதான் மெய்யழகனின் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருப்பதும் புரிகிறது. இது ஒருவகையில் நகரத்துக்காரனான அருளின் குற்றவுணர்வைத் தூண்டுதல். அதன் பொருட்டுதான் இந்த கதையை கதாசிரியரும் இயக்குனருமான பிரேம்குமார் நகர்த்தியிருக்கிறார். 

எனக்கு இந்த கதையின் பின்நவீனத்துவம், அதன் பொருட்டு அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் (இழுவை காட்சிகளும் உண்டு) பிடித்திருக்கிறது எனலாம். இம்மாதிரியான தற்செயலாக நேரும் பிணைப்பை, ஆணுக்கான இந்த சுதந்திர காட்சியமைப்புக்களைப் போல பெண்களுக்கும் அமைக்கமுடியுமா என நான் பலமுறை யோசித்திருக்கிறேன். 'அவள் ஒரு தொடர்கதை' என்று நினைக்கிறேன். படாபட் ஜெயலட்சுமிக்கும் சுஜாதாவுக்குமான நட்பை, படாபட் சுஜாதா மேல் இழைந்து குழைந்து அருவெறுக்க வைத்திருப்பார்கள். பெண்கள் நடிக்கும் காட்சி என்றால் மார்பகங்கள் உரசிக்கொள்ளும் அளவுக்கு ஏன் ஆபாசமாக்க வேண்டும்? ஆண் மைய சமூகத்தைச் சந்தோஷப்படுத்தவா? ஏன் அது இயல்பாக அமையவே கூடாதா என்ற கேள்விகள் என்னுள் எழுந்து பல காட்சிகளை நான் ஒதுக்கியிருக்கிறேன். ஆனால் இதிலும் கூட ஆணுக்கும் ஆணுக்குமிடையே ஒரு கட்டத்தில் இழைதல் அதிகமாவதும், பின் அக்காட்சி, கதையின் அடுத்த கட்டத்திற்கு நகரும்போது, இழைவு சரிசெய்யப்படுவதுமாக செல்கிறது. ஆனால் இத்தகைய நட்பை, காதலை, பிணைப்பை பெண்களிடையே காட்சிப்படுத்த திரைப்படங்கள் ஏன் முயலுவதில்லை என்னும் கேள்வியை 'ஆட்டோகிராப்' படத்திலிருந்து பல பெண்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

கதாபாத்திரத்தை உள்வாங்குதல் என்று பார்த்தால், கார்த்தி சரியாக செய்திருக்கிறார். அரவிந்த்சாமியை நாம் எப்போதுமே நகரத்து அழகனாக ஒரு பிம்ப கட்டமைப்பில் வைத்திருக்கிறோம். அப்படியென்றால் - சிரிப்புடன், கண் சிமிட்டலுடன் சீன் டூ சீன் கதாநாயகன் நகர்வதை உறுதி செய்திருக்கிறோம். அதாவது நடிப்பு தேவையில்லை. அரவிந்த்சாமி எந்த கதாபாத்திரத்திலும், இப்படியே வந்து போவார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த படம் அவரின் நடிப்பைக் கோரியிருக்கிறது. அதற்கு பெரிதாக அவர் நியாயம் செய்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. நிறைய இடங்களில் கார்த்தியை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறார். அதுவே நடிப்பு என்று அரவிந்த்சாமி தரப்பில், இயக்குனர் தரப்பில் நியாயப்படுத்தலாம். சைக்கிளைக் குறித்து கார்த்தி உணர்ச்சி வசப்பட்டு பேசும்போதும், ஜல்லிக்கட்டு காளைக் குறித்த உரையாடலின் போதும் கார்த்தியை ரசிக்கும் ஒரு கதாபாத்திரமாகவே நகரத்து நாயகன் வருவதால், அரவிந்த்சாமிக்காகவே அருளை உருவாக்கியிருக்கிறார்களோ என்று தோன்றியது. கார்த்தி வீட்டிலிருந்து குற்றவுணர்வுடன் வெளியேறும் இடத்தில் மட்டும் அவர் அருள் என்னும் கதாபாத்திரத்திற்குள் சென்று வந்தது போலவிருந்தது. 

இத்திரைப்படத்தில் பெண்கள்? பேசும்படி இல்லை என்பதைவிட, இக்கதையில் அவர்கள் செய்வதற்கு ஏதுமில்லாதது போல செய்துவிட்டார்கள் என்று புரிகிறது. சொத்து பிரச்சனையில் அருளின் அத்தையைப் பேசவைத்திருக்கலாம் அல்லது அருளின் மனைவி அது குறித்து பேசியிருக்கலாம், மெய்யழகனின் மனைவி சும்மா சிரித்துக்கொண்டு வந்து உபச்சாரம் செய்வதைவிட வேறு ஏதாவது முக்கியமாக பேசியிருக்கலாம்... இப்படி நிறைய 'லாம்' கள். ஆனால் முக்கியத்துவப்படுத்த வேண்டியது, அதாவது prioritize செய்வது, என்ற ஒன்றை நோக்கி சென்றதில், திரைக்கதை பெண்களைப் பின்னுக்குக் கொண்டு போயிருக்கிறது.

ஒளிப்படக்காட்சிகள், இசை ஓகே. கமலஹாசனின் குரலில் 'யாரோ இவன் யாரோ' பாடல் ஓகே. 

முதலில் கூறிய நுண்ணரசியலை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இப்படம் தனியொரு மனித ரசனையை நம்முடன் பகிர்ந்து கொள்வது புரிகிறது. ஒவ்வொரு திரைப்படத்தின் போதும், சில பார்வைகளை முன்வைப்பதன் மூலம், அது குறித்த உரையாடல்கள் தொடரும் என்றுதான் நான் நினைக்கிறேன். 


மெய்யழகன் - ஆண்களிடையே ஊடாடும் புரிதல்