Thursday, 27 December 2012

நீதானே என் பொன் வசந்தம்டைரக்டர்....கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயர் பலகை தாங்கி வெளிவந்திருக்கிற படம். இவரைவிட இளையராஜா என்கிற கிராமத்து கலைஞனின் இசைத்தட்டை சுமந்து வந்த படம் என்பதை சொல்வது பொருத்தம்.

படம் பார்த்த பிறகு எனக்கு என்ன தோணுச்சுன்னா இசை வெளியீட்டு விழாவோடே 'இத்துடன் இந்த படம் முடிந்தது' என்று சரோஜ் நாராயணசாமியை வைத்து ஒரு end card போட்டிருக்கலாமோன்னு....

இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய hype யை ஏற்படுத்தி நம்மை இப்படி ஏமாற்றியிருக்க வேண்டாம். எப்போ ஹீரோ ஸ்கூல் படிக்கிறாரு...எப்போ காலேஜ் படிக்கிறாரு...எப்போ IIM ல PG பண்றாரு...ஒண்ணுமே புரியல...

கௌதம் முதல்ல உங்க காலேஜ் லைப்பை பிட் பிட்டா படம் எடுக்கிறதை நிப்பாட்டுங்க. எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது. வேற கதை பண்ணுங்க கௌதம்...நீங்க படிச்ச காலத்தை விட்டு வெளியே வந்த பிறகு சொல்லி அனுப்புங்க. நாங்க படம் பார்க்க வரோம்...ஹீரோ....ஜீவா ஸ்கூல் படிக்கும் போது பெரிய பாடி பில்டர் மாதிரி உடல், matured முகம், காலேஜ் படிக்கும் போது ஸ்கூல் பையன் மாதிரி முடியை க்ளோஸ் கட்....நல்ல வேளை IIM படிக்கும் போது காட்டலை. ஏன்னா ஹீரோயின் அங்க படிக்க போகாததாலே நாம தப்பிச்சோம்....

இந்த படத்தை ஏனோதானோன்னு பண்ணியிருக்கார் ஜீவா. முகமூடி தோல்வி அடைந்ததாலா என்னமோ தெரியலை....கடைசி  சீன்ல மட்டும் கொஞ்சம் சின்சியரா பண்ணியிருக்கார். 


இனிமேல் இந்த ஸ்கூல் பையன் ரோல் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஜீவாவுக்கு. அது எல்லாம் தனுஷ் மாதிரி ஒல்லிகுச்சிகளுக்கு சரிவரும். ஹீரோயின் சமந்தாவை நான் ஈ படத்தில் பார்த்ததில் இருந்து கொஞ்சம் பிடித்திருந்தது. இந்த படத்தில் அதை காப்பாற்றியிருக்கிறார். 

Barbie doll  மாதிரி அழகாய் இருக்கிறார். நல்லாத்தான் பேசுகிறார். சோகம் நல்லா வருது. அழுகை எல்லாம் ஓகே. அது என்ன கோபம் வரும்போது மட்டும் வலிப்பு வந்த மாதிரி கை கால் எல்லாம் உதறுது.  


ஸ்கூல் பொண்ணா, காலேஜ் பொண்ணா, அப்புறம் வேலை பார்க்கும் போது என்று எல்லா மேக்கப்பும் அழகாய் பொருந்துகிறது சமந்தாவிற்கு. காமெடி சந்தானம் இந்த படத்தில் கொஞ்சம் தானே நடித்த மாதிரி தெரிகிறது. கடிக்கிற காமெடியை கொஞ்சம் அளவோடு செய்திருக்கிறார். யார் அந்த குண்டு பெண்....சில இடங்களில் ஓவர் ஆக்டிங். மற்றபடி ஓகே....


இசை இசைஞானியின் மெட்டு மட்டுமே தாளம் போட வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்பேன்... 


சுபம் 
போதும் காபி குடிச்சுகிட்டே படிச்சது. எழுந்து வேற வேலை இருந்தா பாருங்க. இதுக்கு மேல எழுத படத்துல ஒன்னும் இல்லை. 


இது பொன் வசந்தம் இல்லை....நமக்கு முன்னாடி படம் பார்க்க போனவங்க தொலைச்ச வசந்தம்....


Sunday, 16 December 2012

நீர்ப்பறவை - ஓர் அலசல்...

Cast : Vishnu, Sunaina, Nanditha Das, Samuthra Kani
Director : Seenu Ramasamy
Producer : Uthayanidhi Stalin
Music : N R Ragunanthan

நீர்ப்பறவை என்பது Gull (Sea Gull) இன்னும் பறவையை குறிக்கும். அந்த பறவை ரொம்ப அறிவாகவும் கூட்டமைப்பான வாழ்வு முறைகளையும் பின்பற்றக்கூடியது என்று கேள்விபட்டிருக்கிறேன். 

ஆனால் இந்த படத்தில் அந்த பறவையின்  அறிவாளித்தனத்தை காணவில்லை. அந்த மீனவ மக்களின் வாழ்வியல் மட்டும் அழகாக காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு...சரியாகவே கதாபாத்திரத்துக்குள் ஒட்டவேயில்லை. இந்த மாதிரி படங்களில் யதார்த்தமாய் நடிக்கவேண்டும். வேறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம். 

குடிகாரனாய் வரும் காட்சிகளில் மனதில் நிற்கவேயில்லை. அவருடைய அம்மா, அப்பாவாக வருபவர்கள் மட்டுமே நம் கவனத்தில். நேர் எதிர்பதமாக நம் கதாநாயகி சுனைனா சூப்பர்.  சரியான தேர்வு.பெரும்பாலும் இந்த மாதிரி costumeயில் ஹீரோயின்  அழகாக தெரியமாட்டார். சுனைனா அழகாகவும் இருக்கிறார். யதார்த்தமாய் நடித்தும் இருக்கிறார்.    மற்ற எல்லோரும் படத்தின் தன்மை அறிந்து செய்திருக்கிறார்கள். சமுத்திர கனி சாட்டை படத்திற்கு அப்புறம் இதில். அளவாய் கண்ணிலே கண்ணியம் காட்டியிருக்கிறார். நந்திதா தாஸ் எல்லோரையும் விட ஒரு பிடி அதிகமாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரி நிறைய படம் செய்த அனுபவம் தெரிகிறது.

மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களின் கிறிஸ்துவ சமய சார்பையும் அளவாக எடுத்துரைத்திருக்கிறார் டைரக்டர். அதுவும் பாதிரியாரின் பேச்சுக்கு கட்டுப்படுதல் போன்ற விஷயங்கள் கூட மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டுள்ளது.தகப்பனும் தாயும் சேர்ந்து இலங்கை ராணுவத்தால் சுடப்பட்ட தன் மகனின் உடலை தங்களுடன் வைத்து கொள்ள வேண்டி தன் வீட்டிலேயே புதைத்து வைப்பது எல்லாமே நடைமுறை சாத்தியம். அந்த பாசம் நிஜம் என்பதை நம் கண்ணில் இருந்து வரும் ஒரு துளி நீர் சாட்சி.


கண்ணில் தப்பாய் பட்டவை : 


பாடல்கள் எல்லாமே ஏதோ திருசபை கூட்டத்திலிருந்து ரகுநந்தன் எழுந்து வந்த மாதிரி தேவதூதனின் துதியாய் இருக்கிறது. திகட்டுகிறது. ஒரு மதம் சார்ந்த மக்களை வைத்து படம் பண்ணும் போது அணைத்து பாடல்களுமே அந்த மதம் சார்ந்த இசையின் அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.   

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் தன்மை சமீப காலமாய் அதிகரித்துவருகிறது. நல்லதுதான். 

வழக்கு எண் 18/9 படமே முதல் தடவை பார்க்கும் போது புரியாத மாதிரியும் இரண்டாம் முறையே புரிந்ததாகவும் என் தோழிகள் சிலர் சொன்னார்கள்.  

அதற்கு காரணம் எல்லா சஸ்பென்சையும் கடைசி நேரத்தில் அவிழ்க்க நினைப்பது. அதற்கு சீன் continuity தேவையாகிறது. அப்போது repetition ஆகிறது சில காட்சிகள். அதுவும் இல்லாமல் முதலில் இருந்து புரியாமலே ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைசியில் தான் புரிகிறது. தியேட்டர் விட்டு வரும் போது நம் தலையில் ஏதோ பாரம் ஏத்தி வைத்தது போல் தோன்றும். 

சரி அந்த படத்தை விடுவோம். இதிலும் அதே தப்பைதான் செய்திருக்கிறார்கள். ஏதோ கதாநாயகியே கொலை செய்தது போலும் அவள் என்ன காரணம் சொல்வாள் என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டு வேறு மாதிரி முடித்துவிட்டார்கள். 

இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?....
டைரக்டர் படத்தில் முக்கியமாக இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டு தள்ளுவதை பற்றி சொல்ல வந்து, அதற்காக ஒரு கோர்ட் சீனும் வைத்து, ஆனால் அதை இந்த சஸ்பென்ஸ் விஷயத்தால் சப்பென்று ஆக்கிவிட்டார். சொதப்பிவிட்டார். 

இனிமேல் நிஜ விஷயங்களை படம் எடுப்பவர்கள் இந்த தப்பை செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோம். 

Thursday, 15 November 2012

துப்பாக்கி

Feel The ArmyCast & Crew 
Director : A R Murugadoss
Producer : S Dhanu
Music : Harris Jeyaraj
Cinematography : Santhosh Sivan


முதல் நாளே துப்பாக்கி பார்க்கணும்னு ஒரு முடிவோட இருந்தேன். குடும்பத்தில் எல்லோரும் எனக்கு எதிராக இருக்க (விஜய் படமாம் - குப்பை படத்தை டிவிகாரன் போட்டா உட்கார்ந்து பார்ப்பாங்க ) , நான் பிடிவாதமாக இருக்க, இரண்டாம் நாள் inox தியேட்டரில்....படம் நல்லா இல்லையென்றால் குடும்பமே என்னை காலி செய்துவிடுவதாக மிரட்டிதான் வந்தார்கள். படம் முடிந்து வெளியே வந்தபிறகு எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் படம் சூப்பர்ன்னு.....என்னை மறந்துபோய் வெகு நேரம் ஆகி இருந்தது....சூப்பரு....

முதல்ல டைரக்டர் முருகதாஸுக்கு ஒரு பெரிய சபாஷ்...
போலீசை வைத்து நிறைய கதை, சென்டிமென்ட் பக்கத்தை டச் பண்ணாம கூட எடுத்திருக்காங்க.  ஆர்மியை வைத்து கதை பண்ணுவது கொஞ்சம் கடினம்தான். ராணுவம் செய்கிற வேலை எதுவும் நம்மை பெரிதாக கவர்ந்ததில்லை....

இதுவரை வந்த படங்களில் எல்லாம் ராணுவ வீரன் லீவில் ஊருக்கு வந்தால், ஒன்னு குடும்பத்தை அழிச்சவங்களை பழி வாங்குவான், இல்ல கும்மாளமா காதல் பண்ணுவான்....பாக்கியராஜ் முதல் சரத்குமார் வரை இப்படித்தானே கதை பண்ணியிருக்காங்க..இல்லேன்னா நம்ம விஜயகாந்த் மாதிரி one man armyயா கதை பண்ணியிருப்பாங்க...

இதுதான் முதல் முறை ஆர்மியில் வேலை பார்க்கும் இளைஞன், தீவிரவாதிகளை எப்படி தேசப்பற்றுடனும் (பாரா பாராவாக டயலாக் இல்லாமல் ) புத்திசாலிதனத்துடனும் தண்டிக்கிறான் என்று காட்டப்பட்டுள்ளது. 

இதற்கு கதை ஒன்றும் பெரிதாக தேவைப்படவில்லை. ஆனால் படமாக்கி இருக்கும் விதம்தான் இயக்குனருக்கு சபாஷ் போட வச்சிருக்கு. 

விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு மேல் தன் முத்திரையை பதித்திருக்கிறார். 
விஜய்யை பொருத்தவரை இந்த படம் கில்லி மாதிரி ஒரு milestone படம்தான். பழைய கோபக்கார விஜய்யை  இந்த படத்தில் மீண்டும் மெருகேற்றியிருக்கிறார் டைரக்டர். 

விஜய் fansக்கே தெரியும், இதுவரை வந்த படமெல்லாம் எவ்வளவு கேவலமாக இருத்தது, நண்பனை தவிர (ரீமேக் ஆனதால் தப்பித்தது) என்பது. நம்ம ஹீரோ பத்தி சொல்லணுமே. படம் பார்க்க போனதே விஜய்காகதானே....கண்ணில் துப்பாக்கியும் காதலில் காமெடியும் செய்து கலக்கியிருக்கிறார். விஜயை விட துறுதுருப்பாக இந்த படத்தில் நடித்திருக்க முடியாது. முதலில் 12  தீவிரவாதிகளை கொல்லும் காட்சியில் அதை படமாக்கிய விதமும் சரி அதை விஜய் வேகமாக செயல்படுத்தி இருப்பதும் அழகு. 

கடமையை மெயின் டிராக்கிலும் காதலை காமெடி டிராக்கிலும் முதல் சீன்லே இருந்தே ஓட்டியிருக்கிறார். ஜெயராம் அடிக்கும் லூட்டி நல்ல இருக்கு. 

காஜல் சான்சே இல்ல....காஜலின் கண்கள் காதலாகவும் பேசுது, கலக்கலாகவும் பேசுது. ஆனா பாவம் நிறைய இடங்களில் டிரஸ் தான் சின்னதா போச்சு. விஜய் படத்தில இதெல்லாம் இல்லைன்னா ஹீரோயின் எப்படி எங்க ஹீரோவுக்கு முன்னாடி அழகா தெரிவா? ....

சத்யன் இந்த படத்தில் SI ஆக வருகிறார். கொஞ்சம் காமெடி தான். அதை கரெக்டா பண்ணியிருக்கார். 

வில்லனாக வரும் வித்யூத் ஜம்வால்  எல்லா படத்திலேயும் வரும் வில்லன் போல்தான். அவரை இங்கிலீஷில் மட்டுமே பேசவைத்து ஒரு பில்ட் அப் கொடுத்து வித்தியாசப்படுத்திவிட்டு கிளைமாக்ஸ் மட்டும் தமிழ் பேச வைத்து அந்த கதாபாத்திரத்தை சற்று நிமிர்த்தியிருக்கிறார் முருகதாஸ்....

கதையிலும் வில்லன் ஹீரோவை கண்டுபிடிக்க தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது நாமும் கூடவே யோசிப்பது போல ஒரு புத்திசாலித்தனமான மாயையை உண்டாக்கியிருக்கிறார். இந்த மாதிரி விஷயங்களில் நிறைய கவனம் செலுத்தியிருப்பது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம். 

சில லாஜிக் (ஹீரோ வில்லனை துப்பாக்கி இருக்கும் போது கை சண்டைக்கு தூண்டுவது) பழைய காப்பி தான் என்றாலும், நிறைய புது முயற்சிகளுக்காக அதை மன்னித்துவிடலாம். 
சண்டை காட்சிகள் பிரமாதம். அதை படமாக்கிய விதத்திற்கு சந்தோஷ் சிவனுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். ஒரு ஆர்மிகாரனின் ஆக்ரோஷமான சண்டை, தண்டிக்க தயங்காத உணர்வு எல்லாமே இருக்கிறது பைட்டில்.

கத்தி, துப்பாக்கி என்று எதை கையில் எடுத்தாலும் அதை வைத்து ஈஸியாக எதிராளியை கொன்றுவிடுகிறார். அது தவறு என்று நாம் யோசிப்பதற்கு முன் அடுத்த அடி என்று சண்டையில் stunt master  கலக்கியிருக்கிறார். அருமை....

ஹாரிஸ் ஜெயராஜின் இசை மட்டும் மனதில் பதியவில்லை.  எல்லா பாடலுமே ஒரே மாதிரி melodious ஆக இருப்பதுபோல் தோன்றியது. 

google லிலும் yahoo விலும் தேடிய பாட்டு மட்டுமே தாளம் போட வைக்கிறது. விஜய் படம்ன்னா ஒரு intro song,  ஒரு குத்து பாட்டு என்று நாமதான் எதிர்பார்த்து பழகிட்டோம். அதை மாத்திக்கணும் போல....

D R கார்த்திகேயன் (Former Director of CBI) அவருக்கும் ஒரு தேங்க்ஸ் ஸ்லைடு போட்டிருந்தார்கள். இவரின் பங்களிப்பு அடித்தள கதையை பலப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

 இந்திய ராணுவம் என்பது ஏதோ பார்டரில் சுடுவது, இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைப்பது, குடியரசு தினத்தன்று அலங்கார வாகனங்களில் நின்று சல்யூட் அடிப்பது என்றுதான் பார்த்திருக்கிறோம். அதற்கு மேல் நாம் அவர்களை பற்றி பெரிதாக யோசித்ததில்லை.

அவர்களை நம்மோடு...அதாவது பொது ஜனத்தோடு...இணைத்து பார்க்க மறந்திருக்கிறோம். நம் மனதில் அவர்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் முருகதாஸ்.  விஜய் படம் என்றில்லாமல், முருகதாஸ் விஜய் காம்போ என்பது போல இருந்தது படம். இந்த மாதிரி படங்களை வரவேற்போம்.  

உண்மையிலேயே துப்பாக்கியை இந்த தீபாவளிக்கு வெடிக்க வைத்திருப்பது அழகு...


Tuesday, 25 September 2012

சுந்தரபாண்டியன்....

கலக்கல் பாண்டியன்....படத்தின் பயோடேட்டா :
இயக்குனர் : பிரபாகரன்
இசை : ரகுநந்தன்
ஒளிப்பதிவு : பிரேம்குமார்
தயாரிப்பு : சசிகுமார்
நடிகர்கள் : சசிகுமார், லக்ஷ்மி மேனன், சூரி, விஜய் சேதுபதி, பிரபாகரன்நம்ம சுந்தரபாண்டியன்.....படம் பார்க்க போனா சந்தோஷமா பார்த்துட்டு வரணும்ங்கிற இலட்சியதோட வாழுறவ நானு.  அழுமூஞ்சி படங்களை பார்க்க போகவே மாட்டேன். இந்த படத்தில சிரிக்க வைக்கிறாங்கன்னு சொன்னாங்க. அதனால பார்க்க போனேன்.... 

எடுத்த உடனே உசிலம்பட்டிக்கு ஒரு பெரிய பில்ட் அப் கொடுத்து நம்ம உசுப்பேத்தி உட்காரவச்சாலும் படம் பாதி வரைக்கும் காமெடிதான். அப்புறம் வெட்டு குத்துன்னு போய் நம்மளை பயம் காட்டி கடைசில பாக்கியராஜூக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்ல, அது மாதிரி நம்ம சசிகுமாருக்குன்னு உள்ள ஸ்டைல்ல படத்தை முடிச்சிட்டாங்க...

ஹீரோ அறிமுகம் 'தமிழ் படம்' ன்னு சிவா நடிச்சு  வெளி வந்துதே (scoof film) அதை ஞாபகப்படுத்தியது.   கொஞ்சம் செயற்கையா இருந்தது. ஆனா பாட்டு நல்லா இருந்தது. பாட்டிகளும் நல்லா  இருந்தாங்க...

படம் முழுவதும் பார்க்க பார்க்க சசிகுமார்....சசிகுமார்....சசிகுமார்.....துறுதுறுப்பா சிரித்த முகத்துடன் ரொம்ப ரொமான்டிக்கா....இப்படியே எல்லா படத்திலும் நடிச்சா நல்லா  இருக்கும். முதலில் ஏற்றுக்கொள்ள கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த கண்களில் தெரிந்த குறும்பும் சிரிப்பும் சசிகுமாருக்கு ஒரு வெல்கம் போட வைத்துவிட்டது.அடுத்து இனிகோ பிரபாகரன் கொஞ்சம் அழகுதான். காதல் வந்து பொய்யாக பாடலில் காதலை நல்லாவே காட்டியிருக்கிறார். அப்புறம் சூரியை பற்றி சொல்லியேயாகனும். இந்த மாதிரி சாதாரணமாக நல்லா நடிக்கிறவங்களை சசிகுமார் மாதிரி ஒன்றிரண்டு பேர்தான் பயன்படுத்தனுமா என்ன.... அப்புக்குட்டி ஓகே...

கதாநாயகி

அடுத்து ஹிரோயின் லக்ஷ்மி மேனன். பெரிய பிரமாத அழகு இல்லைதான். பெரிய நடிப்பும் இல்லைதான். அதற்காக அஞ்சலி மாதிரி ஓவர் அலட்டலும் இல்லை. போதும் இந்த படத்துக்கு......


இவர்தான் இசை 

இசைக்காக ரகுநந்தனுக்கு ஒரு சபாஷ் போடலாம். கிராமத்து இசை கேட்க சுகமாக இருக்கிறது....'ரெக்கை முளைத்தேன்'  பாடலில்  வேறு ஏதோ பாட்டின் சாயல் தெரிகிறது. பரவாயில்லை...பாட்டு நல்லா  இருக்கிறதாலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.  'காதல் வந்து பொய்யாக' பாட்டில்  ஹரிச்சரனின் குரல் சொக்கவைக்கிறது.

சரி....இனி கதைக்கு வருவோம்....
அதிசயமா இந்த படத்தில கொஞ்சமா கதை இருக்குப்பா...

காதல், கொலை, வெட்டு, குத்து எது வேணும்னாலும் நீங்க பண்ணலாம்....அப்பான்னு ஒருத்தர் மட்டும் கொஞ்சம் பசையோட  இருந்தா போதும்ங்கிற கிராமத்து லாஜிக்கை வைத்துதான் கதையை ஒட்டியிருக்கிறார்கள். திருப்பியும் இன்னொரு முறை நட்பை உயிர்ப்பித்து இருக்கிறார்கள். 

இவர்தான் டைரக்டர்

ஊரில அத்தை பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆனாலும் குழந்தை பெத்தாலும் இருக்கிற மவுசை அழகா உறவோட காமிச்சிருக்கார் டைரக்டர். முதல் படம்ன்னு சொல்ல முடியலை. சசிகுமாருக்கு கீழே வேலை பார்த்த அனுபவம் படம் முழுவதும் பேசுது. 

கொஞ்ச நாளைக்கு அப்புறமா ஒரு படத்தை குடும்பத்தோட உட்கார்ந்து சிரிச்சி பார்க்கலாம்னா அது இதுவா தான் இருக்கும். இப்படி அப்பப்போ ஒரு படம் வந்தா பொம்பளைங்க நாங்க கொஞ்சம் சந்தோஷப்படுவோம்ல....

தியேட்டர்ல போய் பார்க்க வேண்டிய படம்.....

Friday, 27 January 2012

அக்கா - தங்கை பாசம்

மனதை வருடும்......


           வேட்டை படத்தில் வரும் 'தைய  தக்க  தக்க..... அக்காகேத்த மாப்பிள்ளை' பாடல் ஹரிணி மற்றும் சைந்தவியின் குரலில் பெண்களாகிய எங்களுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு அக்கா தங்கையின் அன்யோன்யத்தை திரையில் காண்பித்தது.சமீரா ரெட்டியும் அமலா பாலும் ரொம்ப அழகு இதில். சகோதரிகளின் இடையே இருக்கும் அன்பு, மனம் விட்டு பழகும் விதம்,அந்த வயதின் நெருக்கம் எல்லாமே தனிதான். இந்த பாட்டு அதை உயிர்ப்பித்துவிட்டது.  பார்க்கும் போதே சகோதரிகளின் பாசமும் ஆட்டமும் பாட்டமும் மனதுக்குள் சந்தோஷத்தை கொடுத்தது. நன்றி அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமிக்கு....


பெண்களுக்கு மலரும் நினைவுகள் ....
ஆண்களுக்கு enjoy.....