Saturday, 4 June 2016

மனதுக்கு இசையாதவை - ஓர் அலசல்

திரையிசை - ஓர் அலசல் 


இளமை துள்ளும் பருவங்களில் வெளிவரும் அனேக திரைப்பட பாடல்கள் பெரிதாய் அலசப்படாமல் நம் மனதுக்குள் போய் நின்றுக்கொள்ளும். திரைப்படத்தில் கதையும் இருக்காது, பாடல்களும் பிரமாதப்படுத்தாது. இருந்தும் அதில் வரும் சில பாடல்கள் மனப்பாடம் செய்யப்பட்டிருக்கும். அதில் குத்து பாட்டுகள், காதல் பாட்டுகள் அதிகமாக இருக்கும். அவை அந்த நேரத்தில் நம் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும். 

காலப்போக்கில் அவற்றை நாம் மறந்திருக்கவும் கூடும். இருந்தும் என்றோ ஒரு நாள் ஓடும் பேருந்தில், டீ கடையில், கடந்து செல்லும் சமயம் மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட்டில் இருந்து காதில் விழும்போது, நம்மை அறியாமல் பாடலின் வரிகளை வாய் முணுமுணுக்கும். நம் மூளையின் ஏதோ ஒரு மடிப்பில் சொருகப்பட்டவைதான் அவை. மீட்சிக்காக காத்திருப்பவை. ‘நம்ம ஊரு சிங்காரி, சிங்கப்பூரு வந்தாளாம்...’ போன்ற பாடல்கள் இம்மாதிரிபட்டவையே.

எண்பதுகளில் வெளிவந்த படங்களில், பல கதாநாயகர்கள், மைக்கும் கையுமாக வண்ண விளக்குகளின் சிதறல்களுக்கு நடுவில் பளபள டிரஸுடன் கை கால்களை வெட்டிக்கொண்டு டிஸ்கோ ஆடுவதை பார்த்திருப்போம். ரவீந்தர், கமலஹாசன், மோகன், சுரேஷ், ஆனந்தபாபு என்று பட்டியல் நீளும். இன்றும் கூட அந்த மாதிரி பாடல் காட்சிகள் டிவியில் காட்டப்பட்டால், சேனல் மாற்றிவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.


உலக நாயகனின், ‘உனக்கென மேலே நின்றாய், ஓ நந்தலாலா...’ என்னும் பாடலுக்கான ஜிமிக்ஸ் தவிர்த்து அந்த பாடலை மட்டுமே ரசித்திருக்கிறேன். அப்புறம் வந்த தொன்னூறுகளின் படங்களில், டிஸ்கோ இல்லாமல், மைக் மட்டும் போதுமென்று நின்று பாடிய கதாநாயகர்களும், முரளி போல, உண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை.  

இன்னும் மோசமாய், காதல் காட்சிகளில் கதாநாயகிகள் பரதநாட்டியம் ஆடுவது வழக்கம். வராத ஒரு நாட்டியத்தை கை கால்களை அஷ்டகோணலாக்கி உடம்பை வளைத்து, பிட்டம் காமேராவுக்குள் விழுமாறு மிக மோசமான காட்சிகளாக அவை அமைந்திருக்கும். டி ஆரின் ஒரு படத்தில் ஜீவிதாவின் நடனம் ஒன்றை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்து, பாக்கியராஜின் மோசமான, ‘கண்ணை திறக்கனும் சாமி..’ போன்ற ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட சிலபல பாடல்கள். இவையெல்லாம் கிளர்ச்சிக்காகவே எடுக்கப்பட்டவை. காமம் வாழ்க்கையில் ஒன்றுதான். அது ரசிக்கபடவேண்டியதே தவிர, ஆபாசப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதே அப்போதும் இப்போதும் என் கருத்தாய் இருந்திருக்கிறது.

Artificiality, செயற்கைத்தன்மை இல்லாத பட பாடல்கள் அந்த காலத்தில் மிக குறைவு தமிழில். பாலு மகேந்திரா கேமேராவுக்குள் மட்டுமே அம்மாதிரி சாத்தியங்கள் நிகழ்ந்திருக்கிறது.

கதையோ காட்சியோ மிகைப்படுத்தப்படலாம். மிகைப்படத்தப்பட்ட ஒன்றுதான் சில நேரங்களில் மக்களின் மனதுள் இடம்பெறும் என்ற புரிதலின் சூட்சமங்கள் அதில் அடங்கியுள்ளதால், அதை ஒத்துக் கொள்ளலாம்.

பாடல்கள் மிகைப்படுத்தப்படும் போது, அவையும் ரசிக்கப்படலாம். காட்சிக்காக இல்லை, பாடலின் வரிகளுக்காக, அதில் உள்ள வார்த்தை செறிவுக்காக. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும், ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது..’ போன்ற பாடல்கள் என்னுள் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு.

இன்றைய காலகட்டத்தில், பாடலும் கதையின் தளமும் இணைந்தே இயங்குவதால், பெரிதாய் நாம் சலிப்படைய வேண்டியதில்லை. ஒரு படத்தில் ஐந்தில் மூன்றாவது, தளம் மாறாமல் இருக்கிறது. இருந்தும் ஒப்பிடுகளில் வைக்கும் போது, எண்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் மனதில் தங்கிய அளவு இப்போதுள்ளவை தங்குவதில்லை. சொற்செறிவு குறைவாக இருப்பதாக கூட காரணம் சொல்லலாம்.


காட்சி அமைப்புகளில் செயற்கை இழைக்கப்படுவது தெரியாமல் எடிட் செய்யப்படுகிறது. இருந்தும் சில காட்சிகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது. சமீபத்தில் வெளிவந்த அப்பாவும் மகளுமாய் பாடும் பாடல் காட்சிகள், இரு வேறு நடிகர்கள் நடித்தது, ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’, ‘ஈனா, மீனா டீகா,...’.
ஒப்பிட்டில் இரண்டையும் வைக்கும் போது, இரண்டிலும் செயற்கை தன்மை காணப்படினும், முதலில் குறிப்பிட்ட பாடலில் அதிகமாய் தென்படுகிறது என்பது உண்மை..

பிடித்த அலசலும் தொடரும்..



5 comments:

  1. மனதுக்கு இசையாதவை - ஓர்அலசல் - எண்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் மனதில் தங்கிய அளவு இப்போதுள்ளவை தங்குவதில்லை. சொற்செறிவு குறைவாக இருப்பதாக கூட காரணம் சொல்லலாம். - அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திருமதி Ahila Puhal

    ReplyDelete

  2. நல்லதொரு அலசல்..பழைய பாடல்கள் கேட்பதற்கு அருமையாக எப்பொழுதும் இருக்கிறது ஆனால் அதை இப்போது பார்க்கும் போது மிக கொடுமையாக இருக்கிறது இப்பொழுது வரும் பாடல்கள் கைவிட்டு எண்ணக் கூடிய அளவில்தான் சில பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது

    உங்களின் இதுமாதிரியான பதிவுகள் படிக்க மிக நன்றாக இருக்கிறது.இந்த பதிவை படித்தவுடன் அப்படியே அந்தகால இனிமையான அனுபவங்கள் மனதில் வந்து அசைபோடுகின்றன...

    ReplyDelete
  3. --ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் மனதில் தங்கிய அளவு இப்போதுள்ளவை தங்குவதில்லை. சொற்செறிவு குறைவாக இருப்பதாக கூட காரணம் சொல்லலாம்.----

    அப்படி ஒரேடியாக இன்றைய பாடல்களை தூர எறிந்துவிட முடியாது. இன்றும் நல்ல சொற்கள் கொண்ட பல பாடல்கள் வருகின்றன. நீங்கள் எண்பதுகளைச் சேர்ந்தவர் என்பதால் இதுபோன்றதொரு எண்ணம் வருவது இயற்கையே.

    இது தவிர பதிவின் மற்ற அனைத்து கருத்துகளுடனும் உடன்படுகிறேன். இன்னும் நீளமாக எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. நினைத்தாலே இனிக்கும் படத்தில் நம்ம ஊரு சிங்காரி பாடல் சிங்கப்பூரில் படம் பிடிக்காமல் எடுக்கப்பட்ட பாடல் அது. ஏனோ தானோ வென்று எடுத்து சொருகப்பட்ட பாடல்னுகூட சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் காதல் தோல்வியை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று பொதுவாக க்ளைமாக்ஸை சுபமாக மாற்றிவிடுவார்கள். ப்ரேம் நகர் என்கிற தெலுகு படத்தை வசந்த மாளிகையாக ரீமேக் செய்தபோது தமிழில் சுபமாக முடிவதாக மாற்றிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இந்த காலகட்டத்தில் வந்த ஒரு படம்தான் நினைத்தாலே இனிக்கும். ஒரே சோகம், ப்ளட் கேன்ஸர், ஹீரோயின் சாகப் போகிறாள்..இந்த மாதிரி ஒரு கதையில், "ஜாலியாக ஏதாவது பகுதிகள் தேவை" என்பதால் வலுக்கட்டாய் சேர்க்கப்பட்டதுதான் ரஜினியின் ரெண்டு பாடல்கள் "சம்போ சிவ சம்போ" மற்றும் "நம்ம ஊரூ சிங்காரி" மற்றும் ரஜினி-கீதா காமெடி பார்ட். இவைகள்தான் இப்படத்தை ஓரளவுக்கு "கமர்சியல்"லாகக் காப்பாற்றியது.

    சோக முடிவை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், படம் ஃப்ளாப் ஆயிடும் என்கிற ட்ரெண்டை மாற்றியது நம்ம "டி ஆரின்" ஒரு தலை ராகம் ஆகும்! அதன் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகே சோக முடிவை தமிழ் சினிமாவில் எடுக்க ஆரம்பித்தார்கள்னு கூட சொல்லலாம்.

    ReplyDelete
  5. நல்ல அலசல் இன்று வரும் பாடல்கள் மனசில்தங்குவது குறை ஒரு வேளை காலமாற்றமாக இருக்கலாம்.

    ReplyDelete