Thursday, 27 December 2012

நீதானே என் பொன் வசந்தம்டைரக்டர்....கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற பெயர் பலகை தாங்கி வெளிவந்திருக்கிற படம். இவரைவிட இளையராஜா என்கிற கிராமத்து கலைஞனின் இசைத்தட்டை சுமந்து வந்த படம் என்பதை சொல்வது பொருத்தம்.

படம் பார்த்த பிறகு எனக்கு என்ன தோணுச்சுன்னா இசை வெளியீட்டு விழாவோடே 'இத்துடன் இந்த படம் முடிந்தது' என்று சரோஜ் நாராயணசாமியை வைத்து ஒரு end card போட்டிருக்கலாமோன்னு....

இந்த படத்துக்கு இவ்வளவு பெரிய hype யை ஏற்படுத்தி நம்மை இப்படி ஏமாற்றியிருக்க வேண்டாம். எப்போ ஹீரோ ஸ்கூல் படிக்கிறாரு...எப்போ காலேஜ் படிக்கிறாரு...எப்போ IIM ல PG பண்றாரு...ஒண்ணுமே புரியல...

கௌதம் முதல்ல உங்க காலேஜ் லைப்பை பிட் பிட்டா படம் எடுக்கிறதை நிப்பாட்டுங்க. எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது. வேற கதை பண்ணுங்க கௌதம்...நீங்க படிச்ச காலத்தை விட்டு வெளியே வந்த பிறகு சொல்லி அனுப்புங்க. நாங்க படம் பார்க்க வரோம்...ஹீரோ....ஜீவா ஸ்கூல் படிக்கும் போது பெரிய பாடி பில்டர் மாதிரி உடல், matured முகம், காலேஜ் படிக்கும் போது ஸ்கூல் பையன் மாதிரி முடியை க்ளோஸ் கட்....நல்ல வேளை IIM படிக்கும் போது காட்டலை. ஏன்னா ஹீரோயின் அங்க படிக்க போகாததாலே நாம தப்பிச்சோம்....

இந்த படத்தை ஏனோதானோன்னு பண்ணியிருக்கார் ஜீவா. முகமூடி தோல்வி அடைந்ததாலா என்னமோ தெரியலை....கடைசி  சீன்ல மட்டும் கொஞ்சம் சின்சியரா பண்ணியிருக்கார். 


இனிமேல் இந்த ஸ்கூல் பையன் ரோல் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஜீவாவுக்கு. அது எல்லாம் தனுஷ் மாதிரி ஒல்லிகுச்சிகளுக்கு சரிவரும். ஹீரோயின் சமந்தாவை நான் ஈ படத்தில் பார்த்ததில் இருந்து கொஞ்சம் பிடித்திருந்தது. இந்த படத்தில் அதை காப்பாற்றியிருக்கிறார். 

Barbie doll  மாதிரி அழகாய் இருக்கிறார். நல்லாத்தான் பேசுகிறார். சோகம் நல்லா வருது. அழுகை எல்லாம் ஓகே. அது என்ன கோபம் வரும்போது மட்டும் வலிப்பு வந்த மாதிரி கை கால் எல்லாம் உதறுது.  


ஸ்கூல் பொண்ணா, காலேஜ் பொண்ணா, அப்புறம் வேலை பார்க்கும் போது என்று எல்லா மேக்கப்பும் அழகாய் பொருந்துகிறது சமந்தாவிற்கு. காமெடி சந்தானம் இந்த படத்தில் கொஞ்சம் தானே நடித்த மாதிரி தெரிகிறது. கடிக்கிற காமெடியை கொஞ்சம் அளவோடு செய்திருக்கிறார். யார் அந்த குண்டு பெண்....சில இடங்களில் ஓவர் ஆக்டிங். மற்றபடி ஓகே....


இசை இசைஞானியின் மெட்டு மட்டுமே தாளம் போட வைத்திருக்கிறது. இல்லாவிட்டால் எப்போதோ தியேட்டரை விட்டு வெளியே வந்திருப்பேன்... 


சுபம் 
போதும் காபி குடிச்சுகிட்டே படிச்சது. எழுந்து வேற வேலை இருந்தா பாருங்க. இதுக்கு மேல எழுத படத்துல ஒன்னும் இல்லை. 


இது பொன் வசந்தம் இல்லை....நமக்கு முன்னாடி படம் பார்க்க போனவங்க தொலைச்ச வசந்தம்....


Sunday, 16 December 2012

நீர்ப்பறவை - ஓர் அலசல்...

Cast : Vishnu, Sunaina, Nanditha Das, Samuthra Kani
Director : Seenu Ramasamy
Producer : Uthayanidhi Stalin
Music : N R Ragunanthan

நீர்ப்பறவை என்பது Gull (Sea Gull) இன்னும் பறவையை குறிக்கும். அந்த பறவை ரொம்ப அறிவாகவும் கூட்டமைப்பான வாழ்வு முறைகளையும் பின்பற்றக்கூடியது என்று கேள்விபட்டிருக்கிறேன். 

ஆனால் இந்த படத்தில் அந்த பறவையின்  அறிவாளித்தனத்தை காணவில்லை. அந்த மீனவ மக்களின் வாழ்வியல் மட்டும் அழகாக காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு...சரியாகவே கதாபாத்திரத்துக்குள் ஒட்டவேயில்லை. இந்த மாதிரி படங்களில் யதார்த்தமாய் நடிக்கவேண்டும். வேறு நடிகரை தேர்ந்தெடுத்திருக்கலாம். 

குடிகாரனாய் வரும் காட்சிகளில் மனதில் நிற்கவேயில்லை. அவருடைய அம்மா, அப்பாவாக வருபவர்கள் மட்டுமே நம் கவனத்தில். நேர் எதிர்பதமாக நம் கதாநாயகி சுனைனா சூப்பர்.  சரியான தேர்வு.பெரும்பாலும் இந்த மாதிரி costumeயில் ஹீரோயின்  அழகாக தெரியமாட்டார். சுனைனா அழகாகவும் இருக்கிறார். யதார்த்தமாய் நடித்தும் இருக்கிறார்.    மற்ற எல்லோரும் படத்தின் தன்மை அறிந்து செய்திருக்கிறார்கள். சமுத்திர கனி சாட்டை படத்திற்கு அப்புறம் இதில். அளவாய் கண்ணிலே கண்ணியம் காட்டியிருக்கிறார். நந்திதா தாஸ் எல்லோரையும் விட ஒரு பிடி அதிகமாகவே செய்திருக்கிறார். இந்த மாதிரி நிறைய படம் செய்த அனுபவம் தெரிகிறது.

மீனவர்களின் வாழ்க்கையும் அவர்களின் கிறிஸ்துவ சமய சார்பையும் அளவாக எடுத்துரைத்திருக்கிறார் டைரக்டர். அதுவும் பாதிரியாரின் பேச்சுக்கு கட்டுப்படுதல் போன்ற விஷயங்கள் கூட மிகைப்படுத்தாமல் காட்டப்பட்டுள்ளது.தகப்பனும் தாயும் சேர்ந்து இலங்கை ராணுவத்தால் சுடப்பட்ட தன் மகனின் உடலை தங்களுடன் வைத்து கொள்ள வேண்டி தன் வீட்டிலேயே புதைத்து வைப்பது எல்லாமே நடைமுறை சாத்தியம். அந்த பாசம் நிஜம் என்பதை நம் கண்ணில் இருந்து வரும் ஒரு துளி நீர் சாட்சி.


கண்ணில் தப்பாய் பட்டவை : 


பாடல்கள் எல்லாமே ஏதோ திருசபை கூட்டத்திலிருந்து ரகுநந்தன் எழுந்து வந்த மாதிரி தேவதூதனின் துதியாய் இருக்கிறது. திகட்டுகிறது. ஒரு மதம் சார்ந்த மக்களை வைத்து படம் பண்ணும் போது அணைத்து பாடல்களுமே அந்த மதம் சார்ந்த இசையின் அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.   

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை வைத்து படம் எடுக்கும் தன்மை சமீப காலமாய் அதிகரித்துவருகிறது. நல்லதுதான். 

வழக்கு எண் 18/9 படமே முதல் தடவை பார்க்கும் போது புரியாத மாதிரியும் இரண்டாம் முறையே புரிந்ததாகவும் என் தோழிகள் சிலர் சொன்னார்கள்.  

அதற்கு காரணம் எல்லா சஸ்பென்சையும் கடைசி நேரத்தில் அவிழ்க்க நினைப்பது. அதற்கு சீன் continuity தேவையாகிறது. அப்போது repetition ஆகிறது சில காட்சிகள். அதுவும் இல்லாமல் முதலில் இருந்து புரியாமலே ஓடிக் கொண்டிருக்கும் படம் கடைசியில் தான் புரிகிறது. தியேட்டர் விட்டு வரும் போது நம் தலையில் ஏதோ பாரம் ஏத்தி வைத்தது போல் தோன்றும். 

சரி அந்த படத்தை விடுவோம். இதிலும் அதே தப்பைதான் செய்திருக்கிறார்கள். ஏதோ கதாநாயகியே கொலை செய்தது போலும் அவள் என்ன காரணம் சொல்வாள் என்று நம்மை யோசிக்க வைத்துவிட்டு வேறு மாதிரி முடித்துவிட்டார்கள். 

இதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா?....
டைரக்டர் படத்தில் முக்கியமாக இலங்கை ராணுவம் தமிழ் மீனவர்களை சுட்டு தள்ளுவதை பற்றி சொல்ல வந்து, அதற்காக ஒரு கோர்ட் சீனும் வைத்து, ஆனால் அதை இந்த சஸ்பென்ஸ் விஷயத்தால் சப்பென்று ஆக்கிவிட்டார். சொதப்பிவிட்டார். 

இனிமேல் நிஜ விஷயங்களை படம் எடுப்பவர்கள் இந்த தப்பை செய்யாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.