Monday, 1 August 2016

கபாலி - ஓர் அலசல்

  கபாலி...கபாலிடா...
Kabali - The Gangster
Cast & Crew 

Director : Ranjith Pa
Producer : Kalaipuli S Thanu
Music Director : Santhosh Narayanan

Rajinikanth, Winston Chao, Radhika Apte, John Vijay, Dhansika,
Dinesh Ravi, Kishore, Kalaiyarasan, Riythvika, Nandakumar  கதை :
  
ஒரு கேங்ஸ்டர் கதை. கதைக்களம் ஒரு பெரிய நாடு, அதாவது மலேசியா (என்னென்னவோ ஊர் பெயரெல்லாம் சொல்றாங்க, படத்துல)

அங்கே நடக்கிற கேங்வார் - Gang War. நடுத்தர வயது கேங்ஸ்டர் கபாலி ரிலீஸ் ஆகிறார் சிறையில் இருந்து. 25 வருஷமா மனசுல ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்து பழி வாங்குறார். ஒரே துப்பாக்கி சத்தம். அதற்கிடையில், சமூக சீர்திருத்தம், லெட்சர், அந்த லெட்சரைக் கேட்டு தேவையில்லாத கோபம், அழுகை போன்ற முகபாவனைகளைக் காட்டும் இளைஞர்கள். பழிவாங்கல். மனைவியை பெண்ணைத் தொலைத்துவிட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பயணம், அதுக்கு மதுரை, பாண்டிசேரி என்று சுத்தல், இடையில் சென்னையின் செட்டியார் பங்களா(?), கடைசியில் பழிவாங்கல், கிளைமாக்ஸ்ஸுக்கு என்றே அமைக்கப்பட்ட, வாடகைக்கு எடுக்கப்பட்ட, ஒரு உயரமான Roof Top Restaurant, உட்கார்ந்த இடத்திலேயே வில்லனின் அனைத்தையும் தீ வைத்துக் கொளுத்துதல், போலீஸ் ரெய்டு பண்ணுதல் என்று ஏகப்பட்ட காமெடி சீன்கள், கடைசியில் இரண்டு கேங் லேயும் கொஞ்சம் நல்லவனாயிருக்கிற கபாலி கேங் வெற்றிவாகை சூடல்.

இவ்வளவுதான் கதை. 

தமிழில்தான் படம் பார்த்தேன். இருந்தும் தமிழ்மாறன் சூழ்ச்சி செய்தான் என்பதும் இன்னும் சில விஷயங்களும் விக்கிபிடியாவில் படித்துதான் தெரிந்துக்கொண்டேன். போகிற போக்கில் இருக்கிறது காட்சிகள் எல்லாம். நாம எப்படி அதையெல்லாம் சேர்த்து கதையைகதை ட்விஸ்ட்டை வொர்க்அவுட் பன்னுவோம்ன்னு எதிர்ப்பார்த்தாங்கன்னு புரியல. 

அவசர கோலமாய் அள்ளித் தெளிக்கப்பட்ட ஆங்கில நாவலின் தழுவலோ என்கிற சந்தேகம் வருகிறது. . இயக்குனர் ரஞ்சித் 


இந்த கதைக்கு, ரஜினி வேணுமா வேண்டாமான்னு யோசித்து, இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.  

1. ரஜினி இல்லாத கபாலி
2. ரஜினிதான் கபாலி 


முதலில் ரஜினி இல்லாமல் :

'ஆரண்ய காண்டம்' ன்னு 2012 ல வெளிவந்தது எல்லோருக்கும் நினைவிருக்கும். இதே போன்றதொரு கதைக்களத்தைக் கொண்டது. இயக்குனர் குமாரராஜாவின் முதல் படைப்பு. ஆனால் அவ்வாறு சொல்லமுடியாத அளவுக்கு இருந்தது. அதுவே பரவாயில்லை என்று ஆக்கிவிட்டது இந்த 'கபாலி' கதை.

சும்மா சும்மா எல்லோரும் ஒரே ஹோட்டல் மீட்டிங் ஹாலிலேயே கூடி கூடி பேசுறாங்க. செத்தது, சாகாதது என்று சாப்பாடு பதார்த்தம் ஏகப்பட்டது மேஜை மீது. அந்த காட்சிகளின் பின்புலத்தில் ஆணும் பெண்ணும், புகை மண்டலமும், சரக்கு பாட்டில்களும். முன்பெல்லாம் ஏதோ ஒரு சில காட்சிகளில் இப்படி வரும். இதில் படமே கிளப்புக்குள்தான் இருக்கிறது.

படம் தொடங்கும்போது, பெரிய பெரிய செயினு, விதவிதமான ஹேர் ஸ்டைல் வச்சுகிட்டு பத்து பதினைந்து இளம்வில்லன்களை அறிமுகப்படுத்துறாங்க. ஆஹா... நல்ல கலர்புல்லா இருக்கேன்னு பார்த்தால், அந்த ஒரு சீனுக்கு அப்புறம் இன்னொரு சீன்ல வராங்க. அவ்வளவுதான். அதுக்கப்புறம் ஒருத்தரையும் காணோம். இவங்க எல்லாம் பத்தாதுன்னு, குழப்புறதுக்குன்னு சென்னையில ஒரு கேங். 

தமிழ்நேசன்னு நாசர் வராரு. நாசரா அப்படின்னு நாம நிமிர்ந்து உட்காறதுக்குள்ளே அவரை காரிலேயே கொன்னு கதையை முடிச்சுட்டாங்க. இப்படிதாங்க படம் முழுக்க யாரையும் நாம முழுசா பார்க்கவே முடியாது. ஒரு குடும்பம் மட்டும் படம் முழுக்க அங்கேயும் இங்கேயும் ஓடுது, அது ஹீரோ கபாலியின் குடும்பம். இன்னொருத்தரும் அதுக்கு பின்னாடியே ஓடுறார், ஜான் விஜய். 

இன்னுமொரு சந்தேகம், எண்பதுகளில் இளைஞர்கள் எல்லோரும் இந்த மாதிரி சட்டைதான் போட்டிருந்தாங்கன்னு யார் இவங்களுக்கு எல்லாம் சொன்னா. அந்த காலத்து படத்துலே காமிச்சத்தை அப்படியே காப்பி அடிச்சிருக்காங்க. எல்லா படங்களிலுமே இப்படிதான் காண்பிக்கிறார்கள். நாங்களும் அந்த காலத்துலதான் படித்தோம். கிராப், கிருதா எல்லாம் ஓகே. ஆனால் பெரிய படம் போட்ட சட்டையெல்லாம் எல்லோரும் போட்டதில்லை. ஒரு பேஷன் இருந்தது என்றால், அதையே அந்த கால கட்டத்திற்கு சீல் குத்துவதா?..மாத்துங்க இந்த டிரெண்டை.

இப்படியொரு கதைக்கு ரஜினி என்னும் மெகா ஸ்டார் தேவையே இல்லை. 
இப்போ கதையில் ரஜினியோட :

முதலில் இந்த மாதிரி வயசான கேங்ஸ்டராக நடிக்க ரஜினி ஒத்துக்கொண்டதைப் பாராட்டலாம். அவருக்கு பர்சனல் ஆக ஒரு ஆசை இருந்திருக்கலாம். அது நிறைவேறிவிட்டது. எனக்கும் அந்த கதாபாத்திரம் பிடித்திருக்கிறது. ஆனால் அவர் தேர்ந்தெடுத்த இயக்குனர்தான் சரியில்லாமல் போய்விட்டார்.


ரஜினி இதில், மிக கூலாக நடித்திருக்கிறார். எதிரிகளிடம் கோபம் காட்டுவதாகட்டும், மனைவியின் இழப்பை நினைத்து வருந்துவதாகட்டும், யாரோ ஒரு பெண் அப்பா எனும்போதும், தன் பெண்ணே அப்பா என்று திடீரென்று வந்து நிற்கும்போது ஆகட்டும், முகம் பாவனைகளை காட்டுகிறது.

ஒவ்வொரு கட்டத்திலும் அவரால் சொல்லப்படும் 'மகிழ்ச்சி' என்னும் சொல், மாற்றத்தை உணர்வளவில் காட்டுகிறது.

நிறைய காட்சிகளில் ரொம்ப கேஷுவலாக நடித்திருக்கிறார். மனைவியைத் தேடிப்போகும் சமயம் ஹோட்டல் அறையில் மகளின் பதைபதைப்பை பார்த்து சிரிக்கும் தகப்பனாய், மனைவியை சந்தித்த பிறகு ஒரு கணவனாய், நடித்தல் மாதிரி இல்லாமல், மனதோடு சேர்த்து உடல் முழுவதுமே ரிலாக்ஸ் ஆனது போல் காட்சி தருகிறார். நமக்கும் ரசிக்க முடிகிறது.

ஆனால், அதே மாதிரியே கடைசி காட்சியிலும் சுகமாக ஒரு சோபாவுக்குள் அமிழ்ந்து உட்கார்ந்துக்கொள்வது, கொஞ்சம் அபத்தமாக இருக்கிறது.

ஒரு காட்சியில் சரக்குன்னா மலேஷியாவில் என்ன, தமிழ்நாட்டில் என்னன்னு சொல்வது சற்று அவரின் வயதுக்கும் காட்சிக்கும் ஒட்டாத ஒன்றாய் தோன்றுகிறது.அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்லியே ஆகணும்.

ஜான் விஜய் உண்மையிலேயே அசத்தல். ஆனால், ஒரு கொடுமையான டோப்பாவுடன் தொளதொள சட்டையுடன் இளமைகாலத்தில் காட்டப்பட்டதை விட நடுத்தர வயதில் அழகாய் காட்டப்பட்டிருக்கிறார். இதுக்கும் அந்த போலியான 80s சினிமா Dressing Culture தான் காரணம்.


ரஜினியின் மனைவியாக நடிக்கும் ராதிகா அப்தே. மனைவி என்றால் சிறு உருட்டல்கள் இருக்கும், ஒத்துக்கொள்கிறேன். அதுவும் திருமணமாகி வயிற்றில் பிள்ளை சுமக்கும் வரை இருக்கும் காலகட்டம் மிக குறைவு. அதற்குள் பேசப்படும் வசனங்கள் எல்லாம் மிரட்டும் தொனியிலேயே அமைந்திருக்கிறது. இது மிகவும் செயற்கையாக இருக்கிறது. டப்பிங் பண்ணும்போது, இதை கவனித்திருக்கவேண்டும். இதனாலேயே இவர் மனதில் நிற்காமல் போகிறார்.


ஜான் விஜய்க்கு அப்புறம் கிஷோர்  ஓகே. வில்லன் வின்ஸ்டன் ஓகே. படத்தில் 'உள்ளேன் அய்யா' சொன்ன எல்லோரும் ஓகே.  


படத்தில் இளைஞர்கள் :

மகளாய் நடித்திருக்கும், தன்சிகா. போட்டிருந்த உடையும், அதற்கேற்ற நடை மற்றும் பாவனைகளும் ஓகே. ரஜினியிடம் பேசும் வசனங்களில் அதிகமான 'அப்பா' என்னும் சொல்லின் உபயோகத்தைக் குறைத்திருக்கலாம். வருடங்கள் கழித்துப் பார்க்கும் பெண் இவ்வளவு சகஜ நிலைக்கு வரமாட்டாள் என்பதையும் டைரக்டர் இந்த இடத்தில் கோட்டைவிட்டிருக்கிறார்.

அப்பா என்று கூப்பிட்டு கொண்டுவரும் பெண், டைகர் என்று வரும் பையனும் எல்லோருமே ஏதோ பெரிய இடத்து பிள்ளைகள் போலவே நடித்திருக்கின்றனர். யாரும் நிஜ வாழ்க்கைக்குள் இருக்கிறவர்கள் போலவே இல்லை. ஒருவேளை மலேஷியாவில் (!) அப்படிதான் இருப்பார்களோ என்னவோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங்கும் கூட. கலையரசன், நந்தகுமார் இவர்கள் இருவரும் பாஸ் மார்க் வாங்கிட்டாங்க.


இதில் தினேஷ் நடிப்பை சொல்லியாக வேண்டும். கொஞ்சம் கண்ணில் பேச, முகத்தில் உணர்வுகளைக் காட்ட என்று முன்னேறியிருக்கிறார். பிராமிசிங் ஆக்டர்.


பாடல்கள் :


"வீரா..துரந்தரா.." பாடலின் இசை பாகுபலியோட காப்பி மாதிரி இருக்கு..  
"நெருப்புடா..." பாடல் ஓகே. 
"மாய நதி .." பாடல் மட்டுமே நல்லாயிருக்கு. என்ன ஏதுன்னே புரியாம ஓடுற படத்துல ஒரு இரண்டு நிமிஷம் நம்மை உள்ளே இழுக்கிற வித்தை செய்திருக்கு இந்த பாடல். இப்படியே நீடிக்காதா என்று கூட நினைக்க வைக்கிறது. 
கிட்டத்தட்ட 'நல்லவனுக்கு நல்லவனில்வரும் "உன்னைத்தானே தஞ்சமென்று.." என்னும் பாடலை கொஞ்சமாய் நெருங்குது. இருந்தும் காட்சிதான் பாடலைவிட அதிகமாய் கண்முன் வருது. பாடல் முதலில் வந்துகாட்சி கண்முன் விரியணும். அதுதான் ஒரு பாட்டை நெஞ்சில் நிறுத்தும். இனி அலசல் :

முதல் சீனுக்கும், அதாவது டிரைலரில் ஓட்டிய படத்திற்கும், மீதி நாம் தியேட்டரில் பார்க்கும் படத்துக்கும் ஒட்டாத ஒரு நிலையே இருந்தது. அதில் காண்பித்த ரஜினியின் கதாபாத்திரம் அடுத்தடுத்த காட்சிகளில் மலேஷியாவாசியாகி, சடையர்கள், ஆண்டைகள், ரப்பர் தோட்டம், யூனியன் என்று வேறு மாதிரி மாறிப்போகிறது. சும்மா சும்மா மேலே போட்டிருக்கும் கோட் பற்றியே வசனங்கள் வருவது சற்று எரிச்சலாகவே இருக்கு. இடையிடையே பேசும் காந்தி, அம்பேத்கர், அம்பேத்கரின் கோட்டுக்குள்ளே நிறைய விஷயம் இருக்கு போன்ற வசனங்கள் புரியவேயில்லை. விளக்கப்பட்டிருக்க வேண்டும். ரஞ்சித்துக்கு மட்டும் தெரிந்து என்ன பயன். 
Native, Sarcastic, Slang Languages has to be understand by the main viewing people. That he missed. 
ஏகப்பட்ட ரத்தம் கொட்டியிருக்கிறார்கள் படம் முழுவதும். ஓன்று துப்பாக்கி இல்லையென்றால் வாள். மால்களில் உள்ள ஸ்க்ரீனில் படம் பார்க்க இரவு ஆட்டத்திற்கும் ஏகப்பட்ட குழந்தைகள்.  முடிந்தவரை நல்ல விஷயங்களைக் காண்பிக்க பாருங்களேன். விஷுவலாக நாம் பார்க்கும் விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மனதை விட்டு அகலாது. 

ரஜினி என்னும் உயரத்தில் இருக்கும் ஒரு கலைஞனை பார்க்க சமூகத்தின் எல்லா நிலைகளில் இருந்தும் ரசிகர்களாக இருப்பவர்களும் இல்லாதவர்களும் வருவார்கள். அவருக்கு உண்டான கதையை அவருக்கு கொடுங்க. இந்த வயதான டிராகன் ரிடர்ன்ஸ் கதை கூட நல்லாதான் இருக்கு. படம் முழுக்க ரஜினிக்கு முன்னே பின்னே ஆட்கள், கார்கள், பெரிய ஹோட்டல் ரூம்கள் எல்லாம் போட்டு அசத்திட்டீங்கதான். ஆனால் கதையில் அழுத்தமில்லை. இரண்டரை மணி நேரத்துக்குள் அடைபடவில்லை. அதை சொன்னவிதமும் எடுபடவில்லை. ஏதோ ரஜினிக்கு ரத, கஜ படைகளை கொடுத்து அவரை மரியாதையாய் படம் எடுத்திருக்கேன்னு ரஞ்சித் சொல்றமாதிரியே இருக்கு.  
  

படம் எடுக்கப்பட்ட இடம், சூழல், பிரச்சனை இவை எவற்றையுமே அவர்கள் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லவேயில்லையே. சொல்லியிருக்கலாம். நாமும் அதை நல்லவிதமாக ரசிகர்கள் என்பதை கடந்து படத்தை வரவேற்றிருப்போம். அந்த மலேசிய தமிழர்களின் பிரச்சனை என்னவென்பதை பத்திரிகைகள் மூலம் சொல்லியிருக்கலாம். ஒரு விமானத்தை பெயிண்ட் அடிக்க நேரம் இருந்திருக்கிறது. வேண்டாத பேட்டி எல்லாம் கொடுக்கமுடிந்திருக்கிறது. இதை தெளிவாக சொல்லியிருந்தால், கதையில் அழுத்தம் இல்லாவிட்டாலும் ரஞ்சித் முயற்சித்தார், ரஜினியை வைத்து எடுத்ததால், பூசி மழுப்பி கதையில் அழுத்தம் கொடுக்கவில்லைன்னாவாது நாம் சமாதானப்பட்டிருப்போமே.

மெகா ஸ்டார்களை வைத்து  படம் எடுக்கும் போது, அவங்களுக்குன்னு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். ஆயிரமாயிரம் ரசிகர்கள், இன்னும் கட் அவுட்டுக்கு பால் ஊற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள் நம்ம ஊரில். ஏசி ரூமுக்குள்ளே வேலைப்பார்க்கிற சாப்ட்வேர் பசங்களும் மனசுக்குள்ளே கட் அவுட்க்கு பால் ஊத்துறவங்கதான். அறிவுஜீவிகளும் பால் ஊத்தாட்டியும் ஒரு எதிர்ப்பார்ப்பு சுமந்துதான் படம் பார்க்கப்போவார்கள். படமும் அப்படி ஒண்ணும் வித்தியாசமான சமூக சீர்திருத்தம் / மறைக்கப்பட்ட சமூக வன்முறைகள் / பெண் முன்னேற்றம் / குழந்தைகளுக்கான வழிகாட்டி இப்படி எந்த கருத்தையும் போதிக்கவும் இல்லை. இதையெல்லாம் ஏன் ரஞ்சித் கூட்டி கழிச்சு பார்க்கலை?
கபாலி மொத்தமாய் எட்டு நாட்களில் 262 கோடி சம்பாதித்து உள்ளது, பாகுபலியை விட குறைவாக என்று கணக்கு சொல்கிறது. இந்த படம் இதற்கு தகுதிபட்டதா என்னும் கேள்விக்கு இல்லை என்பதே பதில். நிச்சயமாய், ரஞ்சித்தோ ரஜினியோ இதற்காக 'மகிழ்ச்சி' என்று சொல்ல முடியாது. கலைபுலி தாணு வேண்டுமானால் ஒன்றுமில்லாத கதைக்கு கொட்டிய காசுக்கு அதிகமாக சம்பாதித்த குற்றஉணர்வு இல்லாமல் இருக்கலாம்.

இதுக்கு sequel வேற வரபோவதாக தாணு சொல்லியிருக்கார். நோ சான்ஸ்.. இனி ஒரு Gangster Returns எல்லாம் எங்களாலே தாங்க முடியாது.   


கபாலி : 


ரஜினியை முதன்முதல் ஸ்க்ரீனில் பார்த்தது, 'புவனா ஒரு கேள்விக்குறி'யில். மிகவும் பிடித்துப்போனதுதீவிர ரசிகையானதுவயது ஏற ஏற ரசிப்பு தன்மை மாறிஅலசல் ஆரம்பித்ததுமூன்று முடிச்சைவிட இளமை ஊஞ்சலாடுகிறதை சிலாகித்து விமர்சித்ததுஇன்றைய சிவாஜிலிங்கா வரை உள்வாங்கிக்கொண்டது - இவையெல்லாமே உண்டுஎன்னைப்போலவே ரஜினியை ஆரம்பத்திலிருந்து பார்த்தவர்களுக்குரசித்தவர்களுக்கு.

இந்த கபாலிகிட்டத்தட்ட அவருடைய 'பைரவி'யைப் போல. கூலிக்காரனாய் இருந்துஎதிர்த்து கிளர்ந்து பின் தன் செயல்களுக்காக வெட்கப்பட்டு நல்லது செய்யும் ஒரு பாத்திரம். இரண்டுக்கும் கதைக்கூறு ஓன்று போலில்லை. ஆனால் கதாபாத்திரத்தின் அழுத்தம் அவ்வாறே. அந்த பாத்திரமும் பெரிதாய் பேசப்பட்டதில்லை. பத்தோடு பதினொன்றாய் அப்போது  வந்துபோன படம். 
இந்த படத்தில் ரஞ்சித் உட்பட எல்லோருமே ரஜினியை ஒரு சூப்பர் ஸ்டாராகவே பார்த்திருப்பது தெரிகிறது. அதனால் படம் பார்க்கும் நாமளும் ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது போன்ற உணர்வே அதிகமாய் இருக்கிறது. 

டைரக்டர் ரஞ்சித்துக்கு, இம்மாதிரி படங்களை, மெகா ஸ்டார்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை படிப்பிக்கும் ஓர் அனுபவம். அதுபோலவே ரஜினிக்கும் பட்ஜெட் முக்கியமில்லை, கதையும் அதை எடுக்கும் இயக்குனரும் முக்கியம் என்பதை உணர்த்தும் ஒரு படிப்பினை. 

ரஜினியின் ஆரம்பகாலம் தொட்டே இருக்கும் என்னைப் போன்ற ரசிகர்களுக்கு, இந்த வயதில் ரஜினி என்பது படம் முழுவதும் பார்க்க ரசிக்க சுகமாய் இருந்தது. கண்களில் தெறிக்கும் அதே கோபம், அந்த சிரிப்பு எல்லாம் அப்படியே. வயதின் பரிணாமமாய் அவரின் சிரிப்பில் செயற்கைதன்மை குறைந்து இயல்பாய் சிரிக்கமுடிந்திருக்கிறது. அதை ரசிக்கலாம். அவ்வளவே..

நடிகர்கள் எல்லோரும் கும்பலாக நின்னு ரஜினி கூட போட்டோ ஷூட் எடுத்த படம்தான் கபாலி. வேற ஒண்ணுமில்லை.

Saturday, 4 June 2016

மனதுக்கு இசையாதவை - ஓர் அலசல்

திரையிசை - ஓர் அலசல் 


இளமை துள்ளும் பருவங்களில் வெளிவரும் அனேக திரைப்பட பாடல்கள் பெரிதாய் அலசப்படாமல் நம் மனதுக்குள் போய் நின்றுக்கொள்ளும். திரைப்படத்தில் கதையும் இருக்காது, பாடல்களும் பிரமாதப்படுத்தாது. இருந்தும் அதில் வரும் சில பாடல்கள் மனப்பாடம் செய்யப்பட்டிருக்கும். அதில் குத்து பாட்டுகள், காதல் பாட்டுகள் அதிகமாக இருக்கும். அவை அந்த நேரத்தில் நம் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும். 

காலப்போக்கில் அவற்றை நாம் மறந்திருக்கவும் கூடும். இருந்தும் என்றோ ஒரு நாள் ஓடும் பேருந்தில், டீ கடையில், கடந்து செல்லும் சமயம் மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட்டில் இருந்து காதில் விழும்போது, நம்மை அறியாமல் பாடலின் வரிகளை வாய் முணுமுணுக்கும். நம் மூளையின் ஏதோ ஒரு மடிப்பில் சொருகப்பட்டவைதான் அவை. மீட்சிக்காக காத்திருப்பவை. ‘நம்ம ஊரு சிங்காரி, சிங்கப்பூரு வந்தாளாம்...’ போன்ற பாடல்கள் இம்மாதிரிபட்டவையே.

எண்பதுகளில் வெளிவந்த படங்களில், பல கதாநாயகர்கள், மைக்கும் கையுமாக வண்ண விளக்குகளின் சிதறல்களுக்கு நடுவில் பளபள டிரஸுடன் கை கால்களை வெட்டிக்கொண்டு டிஸ்கோ ஆடுவதை பார்த்திருப்போம். ரவீந்தர், கமலஹாசன், மோகன், சுரேஷ், ஆனந்தபாபு என்று பட்டியல் நீளும். இன்றும் கூட அந்த மாதிரி பாடல் காட்சிகள் டிவியில் காட்டப்பட்டால், சேனல் மாற்றிவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.


உலக நாயகனின், ‘உனக்கென மேலே நின்றாய், ஓ நந்தலாலா...’ என்னும் பாடலுக்கான ஜிமிக்ஸ் தவிர்த்து அந்த பாடலை மட்டுமே ரசித்திருக்கிறேன். அப்புறம் வந்த தொன்னூறுகளின் படங்களில், டிஸ்கோ இல்லாமல், மைக் மட்டும் போதுமென்று நின்று பாடிய கதாநாயகர்களும், முரளி போல, உண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை.  

இன்னும் மோசமாய், காதல் காட்சிகளில் கதாநாயகிகள் பரதநாட்டியம் ஆடுவது வழக்கம். வராத ஒரு நாட்டியத்தை கை கால்களை அஷ்டகோணலாக்கி உடம்பை வளைத்து, பிட்டம் காமேராவுக்குள் விழுமாறு மிக மோசமான காட்சிகளாக அவை அமைந்திருக்கும். டி ஆரின் ஒரு படத்தில் ஜீவிதாவின் நடனம் ஒன்றை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்து, பாக்கியராஜின் மோசமான, ‘கண்ணை திறக்கனும் சாமி..’ போன்ற ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட சிலபல பாடல்கள். இவையெல்லாம் கிளர்ச்சிக்காகவே எடுக்கப்பட்டவை. காமம் வாழ்க்கையில் ஒன்றுதான். அது ரசிக்கபடவேண்டியதே தவிர, ஆபாசப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதே அப்போதும் இப்போதும் என் கருத்தாய் இருந்திருக்கிறது.

Artificiality, செயற்கைத்தன்மை இல்லாத பட பாடல்கள் அந்த காலத்தில் மிக குறைவு தமிழில். பாலு மகேந்திரா கேமேராவுக்குள் மட்டுமே அம்மாதிரி சாத்தியங்கள் நிகழ்ந்திருக்கிறது.

கதையோ காட்சியோ மிகைப்படுத்தப்படலாம். மிகைப்படத்தப்பட்ட ஒன்றுதான் சில நேரங்களில் மக்களின் மனதுள் இடம்பெறும் என்ற புரிதலின் சூட்சமங்கள் அதில் அடங்கியுள்ளதால், அதை ஒத்துக் கொள்ளலாம்.

பாடல்கள் மிகைப்படுத்தப்படும் போது, அவையும் ரசிக்கப்படலாம். காட்சிக்காக இல்லை, பாடலின் வரிகளுக்காக, அதில் உள்ள வார்த்தை செறிவுக்காக. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும், ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது..’ போன்ற பாடல்கள் என்னுள் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு.

இன்றைய காலகட்டத்தில், பாடலும் கதையின் தளமும் இணைந்தே இயங்குவதால், பெரிதாய் நாம் சலிப்படைய வேண்டியதில்லை. ஒரு படத்தில் ஐந்தில் மூன்றாவது, தளம் மாறாமல் இருக்கிறது. இருந்தும் ஒப்பிடுகளில் வைக்கும் போது, எண்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் மனதில் தங்கிய அளவு இப்போதுள்ளவை தங்குவதில்லை. சொற்செறிவு குறைவாக இருப்பதாக கூட காரணம் சொல்லலாம்.


காட்சி அமைப்புகளில் செயற்கை இழைக்கப்படுவது தெரியாமல் எடிட் செய்யப்படுகிறது. இருந்தும் சில காட்சிகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது. சமீபத்தில் வெளிவந்த அப்பாவும் மகளுமாய் பாடும் பாடல் காட்சிகள், இரு வேறு நடிகர்கள் நடித்தது, ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’, ‘ஈனா, மீனா டீகா,...’.
ஒப்பிட்டில் இரண்டையும் வைக்கும் போது, இரண்டிலும் செயற்கை தன்மை காணப்படினும், முதலில் குறிப்பிட்ட பாடலில் அதிகமாய் தென்படுகிறது என்பது உண்மை..

பிடித்த அலசலும் தொடரும்..Saturday, 30 January 2016

இளமை ஊஞ்சலாடுகிறது..

மீண்டும்..டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது.

அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம்.

காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம்.

நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் அறிவாளிகள் இல்லை, பெண்களும்தான்..ஆனால் அவர்கள் அளவுக்கு எங்களால் அப்போது வெளிவர முடியவில்லை என்பதை இப்போதும் தோழிகள் நாங்கள் யோசிப்பதுண்டு. )

காதலும் மோகமும் வேறு வேறு என்பதை பிரித்தறியா காலம் அது. அவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறே என்று சொன்ன திரைப்படம் அது. அப்போது அதை ஏற்கும் மனநிலை இல்லை எங்களுக்குள். ஆனால், புதிதாய் ஒரு பார்வை காதலுக்குக் கொடுத்தது அந்த திரைப்படம் எனலாம்.

உடல் ரீதியான விஷயங்களுக்கு காதல் மட்டுமல்ல, சூழலும் இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியான பழக்கமும் காரணங்கள் எனவும் புதிதான ஒரு பார்வை அந்த திரைப்படம் காட்டியிருக்கிறது. காதலற்று ஒரு உறவு உண்டாவதும், காதலுடன் நாயகி உறவுக்காய் காத்திருப்பதும், ஏற்றுக் கொள்வதும் திரைக்கதையின் போக்கை புதிதாய் புரிய வைக்க முயற்சித்திருக்கிறது.

இதை அந்த காலத்தில் ஒரு முயற்சியாக ஸ்ரீதர் இயக்கினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அதை ரசிகர்கள் ஜனரஞ்சகமான ஒரு திரைப்படமாகவே பார்த்தார்கள் என்பது மட்டுமே உறுதி. அதை 175 நாட்கள் ஓட்டி வெற்றி படமாக்கியதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

சமூகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாதபோது சொல்லப்படும் சில விஷயங்கள் சமூக கட்டுகள் சற்று தளரும் சமயங்களிலேயே புரியப்படுகிறது.

ம்ம்..மீண்டுமாய் ஒர் இளமை ஊஞ்சலாடுகிறது..Friday, 31 July 2015

பாகுபலி - விமர்சனம் - Bahubali

பாகுபலிபாகுபலி, மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டு, மிகப் பெரிதாய் உலகெங்கும் திரையிடப்பட்டு, அதிகமாய் பேசப்பட்ட படம். 
இந்த படத்தை நான் இரண்டு முறை பார்க்கும்படி ஆயிற்று. 

முதல் முறை சென்னை PVR பிவிஆர் ஸ்க்ரீன்லே. அடுத்த முறை, கோவையில் கங்கா தியேட்டரில்.

ஒன்று, படத்தை படம் எடுக்கப்பட்ட எபக்ட்டோடவே காண்பித்தது. மற்றொன்று, படத்தை சாதாரணமாக்கி காண்பித்தது. இது சம்பந்தமாக கடைசியில் அலசலாம்.

கங்கா தியேட்டரில், moviebuzz விளம்பரம் வழியே, படம் போடும் முன்பே ராஜமௌலி வந்து, இது முதல் பாகம், இரண்டாம் பாகம் விரைவில் வரும்ன்னு சொல்லிட்டாங்க.

ஓகே.. இனி கதைக்குள் போவோம்..


Director RajaMouli  
Bahubali, The Begining

முதல் களம்படம் தொடங்கியதுமே, மலையடிவாரம். அதில் முழுக்க முழுக்க ஜிவ்வுன்னு தண்ணீர், அருவியாய் கொட்டுது. எங்கே பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர்...நாமளே தண்ணிக்குள்ளே இருக்கிற மாதிரி குளிர்ச்சியாக ஒரு உணர்வு.
பிவிஆர் தியேட்டரில் பின் சீட்டு சிறுவன், ‘இந்த இடம் எங்கேம்மா இருக்குன்னு கேட்டு அவங்க அம்மாவை தொல்லை பண்ணிக்கிட்டு இருந்தான்.

அருமையான படப்பிடிப்பு...சாபு சிரில், மனு ஜகத், செந்தில்குமார் மட்டுமல்லாமல் Visual effects, Camera, animation ன்னு ஒரு டிபார்ட்மென்ட் லிஸ்ட்டே ஓடுது. Credits go to them.

இதற்கு கேமரா மட்டுமே முழு பொறுப்பு அல்ல. இடையிடையே இழையோடும் இசை மற்றும் பாடல் வரிகள் மிக நேர்த்தி. அந்த காட்சிகளைத் தூக்கிப் பிடிப்பது அவைதான். இசையமைப்பாளர் கீரவாணி அவர்களுக்கு பாராட்டுக்கள்  முதலில், ரம்யா கிருஷ்ணன்.....குழந்தையை நீருக்கு மேல் தூக்கிப்பிடித்து... அழுத்தமான கணீரென்ற அவரின் குரல் ஒரு வசியம்தான்.அடுத்ததாய் கதாநாயகன் பிரபாஸ், இளமையாக அதுவும் அழகாக இப்படி ஒரு கதாநாயகனை தமிழ் சினிமா பார்த்து வெகு நாட்களாகிறது.

அது என்னமோ தெரியலங்க, அவங்க அம்மா பேச்சை கேட்காம அருவிக்கு மேலே ஏற முயற்சித்து, எவ்வளவு உச்சிக்கு போய் கீழே விழுந்தாலும் கதாநாயகனுக்கு மட்டும் அடியே படமாட்டேங்குது. அவ்வளவு வீரனாம்...

அப்புறம், ரோகினி அம்மாவாய்...எல்லா அம்மாக்களுமே இப்போது இளமையாகத்தான் இருக்கிறார்கள்.

இவ்வளவையும் கதை களத்தின் கீழ்படியில் நின்றுதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.


இரண்டாவது களம்  அடுத்து, கொஞ்சம் மேலே, கதாநாயகனுடன் நீர்மலை, அதுதாங்க அந்த அருவி + மலையோட பேரு, ஏறிப் போனால், அங்கே அழகாய் ஒரு கதாநாயகி, தமன்னா.

இயல்பான ஒரு ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். நம்ம தமிழ் சினிமாவில ‘வேங்கை’ மட்டும்தான் அவர் இதே போல் நடித்த ஒன்று என நினைக்கிறேன்.

இந்த களத்தில், கதாநாயகன் எப்படி இவ்வளவு ஆக்ரோஷம் காட்டும் கதாநாயகியை தன் வசப்படுத்துகிறான் என்பதே முக்கியமாய் காட்டப்பட்டுள்ளது. 

பெண் என்பவள் எளிதில் மயங்கிவிடும் தன்மை கொண்டவள் என்பதை மீண்டும் மீண்டும் சினிமா உலகம் நிருபித்துவருகிறது. இனிமையான ஒரு இசையுடன், புன்சிரிப்புடன், அவளை வன்மமாய் கையாண்டு அவளை பெண்ணாய் உணரவைத்து, அடுத்த நிமிடம் அனைத்தும் அவனால் முடித்துக் காட்டப்படுகிறது.

இது குறித்து, Anna MM Vetticad என்னும் விமர்சகரும் The Rape of Avanthika என்னும் தலைப்பில், தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
(http://www.thehindubusinessline.com/blink/watch/the-rape-of-avanthika/article7433603.ece)

இந்த இரண்டாவது களத்தில் குகை, மரங்கள் செடிகள் என்று கொஞ்சம் பசுமை. கதாநாயகனுடன் சேர்த்து நாமும் இதற்கு முந்தைய தண்ணீரையும் அம்மா அப்பாவையும் மறந்துவிடுவோம்.


மூன்றாவது களம்அடுத்த களமாய், பனிக் கட்டியுடன் எல்லாம் போராட்டம், அதாவது மலை உச்சிக்கு வந்துட்டோம்ன்னு அர்த்தம்.

அங்கு மகிழ்மதி ராஜ்யம். அடுக்கி வைக்கப்பட்ட கோபுரங்களும் மாட மாளிகைகளும் ஆபரணவாசிகளும் அகங்காரங்களுமாய் அழகாய் படமாக்கப்பட்டுள்ளது.  

இங்கு ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் என்று ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இவர்களே அதிகமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ராஜ்யத்தில் பொது மக்களையும் அவர்களின் வாழ்வியல் முறைகளையும் ஒரு காட்சியை தவிர, வேறு எங்கும் காட்டப்படவில்லை. எல்லோரும் மாளிகைகளின் உச்சியிலே நின்றே கதையை நகர்த்துகிறார்கள்.

இதன் இடையில் வரும் பாடல்களையும் நடனங்களையும் சொல்லியாக வேண்டும். அதுவும், மூன்று பெண்களுடன் பிரபாஸ் நடனம் வித்தியாசம். வழக்கமாய் high grade குத்துப் பாடல்கள் எல்லாம் C Grade லெவலுக்கு போய்விடும். ஆனால் இதில் தனித்துவம் காட்டப்பட்டுள்ளது பாராட்டுக்கு உரியது. Dance composition நன்றாக வந்துள்ளது. பிரேம் ரட்சித், தினேஷ் குமார், சங்கர் என்று நடன அமைப்பாளர்கள், உழைத்திருக்கிறார்கள்.
ராஜ்யம் என்றால், போர் இருக்கும் தானே. போரை காண்பித்திருக்கிறார்கள். பல ஆங்கிலப் படங்களின் கலப்பு இருந்தாலும், போரின் ஆரம்பத்தில் அம்பு விடும் காட்சியில் ஒரு அதிர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு சபாஷ் போடலாம்.

முடிவுஅப்புறம், முக்கியமாய் கதையின் இல்லாத ஒரு முடிவை பற்றி பேசுவோம்.

இந்த மாதிரி sequel படங்கள் நிறைய மொழிகளில் வந்திருக்கிறது. spiderman, oz, lord of rings, Die Hard, matrix என்று சொல்லிக் கொண்டே போகலாம். நமது இந்திய மொழியில் இது ஒரு புது திருப்பம்தான், ஒரு படத்தை தொடராக எடுப்பது.

ஆனால், அந்த படங்களில் எல்லாம் ஒரு மனம் நிறையும் முடிவு கொடுக்கப்பட்டிருக்கும். இதில் அதை தவற விட்டுவிட்டார்கள். ரம்யா கிருஷ்ணனிடம் ஆரம்பித்த காட்சி இறுதியில் அவரிடமே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு sequel பிலிம் பார்த்த நிறைவு இருக்கும். இது நமது திரையுலகில் முதல் விஷயம் என்பதால், சற்று விட்டுவிடலாம்.

ஆனாலும், இப்படி ஒன்றை பார்த்திராத மக்கள் சற்று திகைத்து போனார்கள் என்பதே நிஜம். முடித்திருக்கலாமோ என்கிற ஆதங்கம் தியேட்டரிலேயே மக்களிடம் வெளிப்பட்டது.

இவ்வளவுதாங்க படம்...


சிறிய குறை  

இதில் முழுக்க முழுக்க ஒரு வரலாற்று கதையை உருவாக்கி அதற்கு பிரமாண்ட பட்டம் கட்டியிருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் நிறைய முதன்மைகளை செய்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள்.

1.        250 கோடி செலவு செய்த முதல் படம்.
2.        மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது.
3.    பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்.
4.        23 புகழ்பெற்ற கேமராமேன்
5.        48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.
6.       56 துணை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.
7.    தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா. அவர்களின் உடற்பயிற்சிகாக மட்டுமே 1.5 கோடி செலவு செய்துள்ளனர்.
8.        40 கலை இயக்குனர்கள்
9.        90 உதவி கலை இயக்குனர் வேலை செய்தனர்.
10.     2000 தொழிலாளர் வேலை செய்த முதல் இந்திய படம்.
11.     2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்.
12.     20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
13.     125 அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
14.     4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்.
15.   திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம்.
16.     26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
17.     ஒவ்வொரு காட்சியையும் 3 மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
18.     1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
19.   கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்.
20.     உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
21.     மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி,
22.     உணவுக்கு 24 கோடி  செலவு செய்த முதல் இந்திய படம்.
23.   சுமார் 1 லட்சம் டன் மரக்கட்டை, பழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
24.     109 நாட்கள் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்.
25  அதிக ஆடை, ஆபரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
26.     மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
27.   போரின்போது வில்லன் பேசும்  உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
28.     162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்.
29.     உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்.
30.     முதன்முறையாக BBC Tv சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்.
31.     ஒரே நாளில் ட்ரெய்லரை 5மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். .

(Courtesy : Wiki)
இதில் ஒரு சிறிய குறை மட்டும்தான் எனக்கு.

முதலில் சொன்னேனே, ரெண்டு தியேட்டரில் படம் பார்த்தேன் என்று. அதில்தான் குறை உள்ளது.

பெரிய multiplex தியேட்டரில் பார்க்கும் போது, நானும் படம் பார்த்து அதிசயித்து போனேன். மேலே சொல்லப்பட்ட 31 பாயிண்ட்டும் படத்தில் இருந்தது. தொழில்நுட்பம் விளையாடி இருக்கிறது.

அடுத்ததாய், சாதாரண தியேட்டரில் பார்க்கும் போது, அந்த அருவி படமாக்கப்பட்ட பிரமாண்டமோ சீட்டு கட்டாய் இருந்த மாட மாளிகைகளோ அற்புதமான போர் காட்சிகளோ எதுவுமே தெரியவில்லை. சாதாரண வரலாற்று படம் பார்க்கும் ஒரு பாதிப்புதான் இருந்தது.

முதலில் பார்த்தப்போதே இந்த விமர்சனம் எழுதியிருந்தால், தவறாய் புகழ்ந்திருப்பேனோ என்ற எண்ணம் உண்டாகியது.

பிரமாண்டங்கள் எடுக்கும் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். 

நீங்கள் எடுக்கும் படத்தை டவுன், கிராமம் மற்றும் பஞ்சாயத்து, நகராட்சி என அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள். பெரிய பெரிய மால் ஸ்க்ரீன்ஸ் காட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டு உங்களை புகழ்ந்து எழுதும் விமர்சகர்களை இந்த பட்டி தொட்டிகளிலும் போய் பார்த்து எழுதச் சொல்லுங்கள்.

நீங்கள் நகரத்துக்காக மட்டும் படம் எடுத்துவிட்டு பிரமாண்டம், பிரமாண்டம் என்று கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே எனக்குப் படுகிறது.

இதை பெரிதாய் கொள்ளவில்லையென்றால், பாகுபலி திரைப்படம் ஒரு மைல்கல் தான் நமது இந்திய திரையுலகத்திற்கு.

அடுத்த பாகுபலியின் கதையை நம்மால் அனுமானிக்க முடிந்தாலும், அந்த காட்சி அமைப்புக்காகவும் அனைத்து தொழில்நுட்ப விஷயங்களுக்காகவும் எதிர்ப்பார்ப்போம்.  

Bahubali, The Wonder..