காதல்: அதன் மூலம்
Kadhal: The Core
இயக்கம்: ஜியோ பேபி
எழுதியவர்: ஆதர்ஷ் சுகுமாரன், பால்சன் ஸ்கரியா
நடிகர்கள்: மம்முட்டி, ஜோதிகா
ஒளிப்பதிவு: சாலு கே. தாமஸ்
எடிட்டிங்: பிரான்சிஸ் லூயிஸ்
இசை: மாத்யூஸ் புலிக்கன்
தயாரிப்பு நிறுவனம்: மம்முட்டி கம்பனி
காதல்: தி கோர்
பேசப்படாத பல விடயங்கள் இங்கு சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்பாலினச்சேர்க்கை, திருநங்கைகள்/நம்பிகள் குறித்தெல்லாம் வெளிப்படையாக பேசுவதற்கு, திரைப்படமாக எடுப்பதற்கு, இன்னும் இங்கு சமூகத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. ஏன் பேசவேண்டும், இருக்கிற சமூக சீர்கேடுகள் போதாதா, expose பண்ணுவதாலே தான் அதிகப்பட்டு போகிறது, இப்படி போனா இனி ஆணுக்கும் பெண்ணுக்குமான கல்யாணம், சந்ததி வளருதல் இல்லாமல் போய்விடாதா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன..
சிலருக்கு பிடித்திருந்தும், எதுக்கு இதெல்லாம் என்கிறார்கள்; சிலருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, அதனால் மொத்தமாக மறுக்கிறார்கள்; சிலர் ஏன் மலையாள படங்களில் அதிகமாக கிறித்துவ, இஸ்லாம் மதத்தினரை வைத்து எடுக்கிறார்கள் என்று மதத்தை முன்வைக்கிறார்கள்; சிலருக்கு, ஓரினச்சேர்க்கை குறித்த காட்சிகளே இல்லையெனவும், சரியாக எதுவும் காட்டப்படவில்லை என்னும் சரோஜாதேவி பத்திரிகை அளவுக்கு எதிரபார்க்கிறார்கள்.
இவையெல்லாம் 'காதல்: The Core' திரைப்படத்தை முன்வைத்து பேசுபவர்களிடம் இருந்து, எனக்கு கிடைத்த கருத்துகள்தான். படத்தை, நான் பார்த்து முடித்து ஐந்து நாட்கள் ஆகின்றது. படம் குறித்து நிறைய உரைகளையும் வாசித்தேன்.
சரி, தவறு என்ற இரண்டு வாதங்களுக்கு இடையில், இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்னும் நிலைப்பாடு ஒன்று சாம்பல் வண்ணத்துடன் உடல் குறுக்கி, நசுங்கி படுத்திருக்கும். அதை மிதித்துவிடாமல் செல்வதில், தாண்டுவதில், கண்டும் காணாமல் கடப்பதில், இந்த மனிதர்களானவர்கள் செய்யும் சாகசங்கள் இருக்கிறதே, அது வேடிக்கையானது.
இந்த படம் அந்த சாம்பல் நிறத்தினுள் ஒளிந்திருக்கும் இருண்மையை உடைத்துப்பேசுகிறது. அதற்கு மதமோ, இனமோ தடையில்லை. மனிதர்கள் மட்டுமே தடையாக நிற்கிறார்கள். திருமணம் ஆகாத இளவட்டங்களின் தன்பாலினச்சேர்க்கையைக் குறித்து சற்று வெளிப்படையாக பேச முன்வருபவர்கள் கூட, திருமணமாகியிருக்கும் ஆண்களைக் குறித்து பேசுவதில்லை. திருமண பந்தத்திற்குள் சென்றுவிட்டால் அவன் பெண்ணின் உடல் சுகத்திற்கு அடிமையாகி சரியாகிவிடுவான் என்னும் கணிப்பு, பருவமடையாத பெண்ணை கல்யாணம் கட்டிக்கொடுத்தால் வயதுக்கு வந்துவிடுவாள் என்பதைப்போல.. ஆனால், அப்படி நடக்காவிட்டால்.. இது குறித்து பேச நம் சமூகம் ஒத்துக்கொள்வதில்லை. அதற்கடுத்தாற்போல், அவனின் மனைவியின் நிலை? நோ சான்ஸ்!
‘காதல்: அதன் மூலம்’ படத்தில், முதலில் காட்டப்படும் இந்த குடும்பத்தின் சித்திரம் ஏறக்குறைய நமது குடும்பங்களைப் போலவே சாதாரணமானது தான். கணவன், மனைவி, கல்லூரி படிக்கும் மகள், வயதான அப்பா என்று. அந்த மனைவியானவள், இருபது வருட தாம்பத்தியத்திற்கு பின்பு, திருமணத்தை ரத்து செய்ய நினைத்து கோர்ட் வாசல் ஏறும்போது, அவள் கணவனுக்கு இருப்பது போல நமக்கும் குழப்பமாக இருக்கிறது. ஆனால், அதன் பின் ஒளிந்திருக்கும் யதார்த்தம்.. காட்சிகள் தொடர தொடர.. முதலில், இதற்குதானா.. இதற்காக குடும்பத்தை உடைக்கணுமா என்று நமக்குள்ளும் தோன்றவைப்பதும், மெதுவாக, அந்த கோர்ட் சீன் மூலம், வீட்டுக்குள், ஊருக்குள் நடக்கும் சத்தமில்லாத உரையாடல்கள் மூலம் படம் பார்க்கும் நமக்கும், நமக்குள்ளும், ஓரினச்சேர்க்கை விருப்பமுள்ள ஒருவனுடன் வாழ்தலின் கடினத்தை, அந்த கனத்தை சரியாக உண்டாக்கியிருக்கிறார்கள். இரண்டாவது முறையாக (முதலில், ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’) வாழ்த்துகள் இயக்குனர் ஜியோ பேபி.. வசனங்கள் ஒவ்வொரு காட்சியிலும் ஷார்ப்.. வாழ்த்துகள் ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா
...............................
கோர்ட்:
‘உங்க புருஷன் உண்மையிலே gay ஆக இருந்திருந்தால், எப்படி உங்க ரெண்டு பேருக்கும் குழந்தை பொறந்திருக்கும்’ என்ற வக்கீலின் கேள்விக்கு, 'என் குழந்தைய நான் கேட்டு வாங்கினேன்..' என்றதான மனைவியின் பதில் அதிர வைக்கிறது.
..................................
'அப்ப ஓமனா, உங்க கணவர் மேத்யூவோட எவ்வளவு frequent ஆ உடலுறவு வச்சுகிட்டு இருந்திருக்கீங்க?'
'நாலு..'
'மாசத்துல நாலுன்னா இது ஒரு healthy ஆன மேரேஜ் லைப்புக்கு ஆரோக்கியமானது தானே, யுவர் ஆனர்?
'மாசத்துல இல்ல.. கல்யாணத்துக்கு அப்புறம்.. இப்ப வரைக்கும் நாலு..'
.................................................
கோர்ட்டில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த இந்த mental cruelty பற்றி விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் போது, மனைவியாக ஜோதிகா கூண்டிலும், கணவனாக மம்மூட்டி அந்த சாட்சி கூண்டின் வெளியிலும், அவளுடைய கைப்பையை வைத்துக்கொண்டு நிற்கும் காட்சி கிரேட்... Framed Secne.. கணவன் மனைவியின் சகிப்புத்தன்மை கொண்ட வித்தியாசமானதொரு உறவின் மீது நமக்கு ஆச்சரியம் எழுகிறது. வருடங்களான உடலுறவு அற்ற ஒரு நிலையிலும், ஒரு பெண் உடையாமல் அமைதியாக விவாகம் ரத்தாக நிற்பதும், அந்த ஆண் அவளுடன் அதை சரிவர வெளிபடுத்த இயலாமல் போனதான மனநிலையுடன் நிற்பதும் யதார்த்த வாழ்விலும் திரை வாழ்விலும் சாத்தியமற்ற ஒன்று. இது நுணுக்கமான அக வாழ்வை வெளிபடுத்துகிறது. சாதாரணமாக, இதை, விளிம்பு தட்டிய சலிப்பு நிலை, தோழமையுடன் வாழும் வாழ்வுக்கு பழக்கப்பட்டிருத்தல், உடல் குறித்த மரத்துப்போன நிலை (இருவருக்குமே), உடல் மற்றும் அது உண்டாக்கிய ஊனம் தவிர்த்த சமனானதொரு அகம்.. இப்படி எத்தனையோ காரணிகள்/சமாதானங்கள் நாம் சொல்லலாம். ஆனால் அதனுள் இறுகி போயிருக்கும் வலி?
இருவரும் பிரிவதற்கான முன்னிரவில், தனித்திருக்கும்போது, அந்த ஆண், இத்தனை வருடமாக தான் ஓரினச் சேர்க்கைக்காரன் என்பதை செயல்களின் மூலமே உணர்த்தி வந்திருப்பதை அவன் சொல்லும், 'எனக்கு பயமா இருந்தது ஓமனா, உன் கிட்டே சொல்வதற்கு..' என்பது, மனைவி என்பவள், ஒருவகையில், எடுத்துக்கொள்ளப்பட்ட, தனக்கென உரித்தாக்கப்பட்ட/நேர்ந்து விடப்பட்ட அஃறிணை பொருள் என்ற மனநிலை அகங்காரமில்லாத ஆணின் உணர்வில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும், அவளாகவே துணிந்து விவாகரத்துக்கு விண்ணப்பித்து, வெளிக்கொணர வேண்டியிருப்பதுதான் வேதனை.
.................................
'நீங்க ஆசைப்படுற மாதிரியொரு வாழ்க்கை உங்களுக்கு வேண்டாமா மேத்யூ? நான் இதெல்லாம் எனக்காகதான் செஞ்சேன்னு உங்களுக்கு தோனுதா?' என்ற அவளின் கேள்வி, இருபது வருட தாம்பத்தியத்தின் அனுபவத்தை/maturity யை சொல்கிறது.
இதற்கு அடுத்தாற்போல், கண்ணீருடன் நெகிழ்வாய் அவள், அவனின் முன்வைக்கும் கேள்வி, 'இன்னைக்கு என் கூட படுப்பீங்களா' என்பதுதான்.. அதற்கு அவனின் பதிலாய், 'அடக்கடவுளே..' என்னும் கரைதல், அவர்கள் இத்தனை வருடங்களாக பேசிக்கொள்ளாத ஒன்றை அமைதியாய் சரிசெய்து கொண்டதாய் நமக்குள் ஒரு கணம் தோன்றுகிறதே, அது இப்படத்தின் ஓர் அகநிறைவு எனக்கொள்ளலாம்.
எத்தனை எத்தனை குடும்பங்கள் இவ்வாறு இருக்கலாம்.. இன்னும் கூட தொடர்ந்து கொண்டிருக்கலாம்.. எத்தனை ரத்துகள் இதை வெளிபடையாக பேசாமல் நடந்தேறி இருக்கலாம்.. எல்லோரும் முன்வைப்பது போல, எல்லா வீட்டிலுமா இவ்வாறு நடக்கிறது, பொது சமூகமோ, பெரும்பான்மையினரோ இப்படியில்லையே என்ற வாதங்களுக்கு என்னிடம் மறுப்பில்லை. ஆனால் இம்மாதிரியான விளிம்புநிலை கருத்தியல்களை யாரோ ஒருவர் பேசித்தானே ஆகவேண்டியிருக்கிறது.
இதை பெரிய நடிகர்களை நடிக்க வைத்து எடுத்திருப்பது இது சமூகத்தின் காதுகளுக்குள் விழட்டும் என்றுதான் திரைப்படம் எடுத்தவர்களுக்குத் தோன்றியிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த 'The Great Indian Kitchen' படமும் இதை போன்ற ஒன்றைதானே பேசியது. பெண் என்றால், சில கட்டங்களைச் சத்தமின்றி கடந்து தானே ஆகவேண்டும் என்ற நிலைபாட்டை இம்மாதிரியான திரைப்படங்கள் உடைத்துக்கொண்டுதானே இருக்கின்றன. பெண் கருத்தியல்களில் சிதறும் சிறு துரும்புகளாக இவை எங்கோ தன்னைப் புதைத்துக்கொள்கின்றன. கண்டெடுத்து நம்முன் வைப்பவர்களை பாராட்டுவோம்.
வாழ்த்துகள் படக்குழுவினருக்கு..