மீண்டும்..
டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது.
அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம்.
காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது.
அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம்.
நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் அறிவாளிகள் இல்லை, பெண்களும்தான்..ஆனால் அவர்கள் அளவுக்கு எங்களால் அப்போது வெளிவர முடியவில்லை என்பதை இப்போதும் தோழிகள் நாங்கள் யோசிப்பதுண்டு. )
காதலும் மோகமும் வேறு வேறு என்பதை பிரித்தறியா காலம் அது. அவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறே என்று சொன்ன திரைப்படம் அது. அப்போது அதை ஏற்கும் மனநிலை இல்லை எங்களுக்குள். ஆனால், புதிதாய் ஒரு பார்வை காதலுக்குக் கொடுத்தது அந்த திரைப்படம் எனலாம்.
உடல் ரீதியான விஷயங்களுக்கு காதல் மட்டுமல்ல, சூழலும் இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியான பழக்கமும் காரணங்கள் எனவும் புதிதான ஒரு பார்வை அந்த திரைப்படம் காட்டியிருக்கிறது. காதலற்று ஒரு உறவு உண்டாவதும், காதலுடன் நாயகி உறவுக்காய் காத்திருப்பதும், ஏற்றுக் கொள்வதும் திரைக்கதையின் போக்கை புதிதாய் புரிய வைக்க முயற்சித்திருக்கிறது.
இதை அந்த காலத்தில் ஒரு முயற்சியாக ஸ்ரீதர் இயக்கினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அதை ரசிகர்கள் ஜனரஞ்சகமான ஒரு திரைப்படமாகவே பார்த்தார்கள் என்பது மட்டுமே உறுதி. அதை 175 நாட்கள் ஓட்டி வெற்றி படமாக்கியதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.
சமூகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாதபோது சொல்லப்படும் சில விஷயங்கள் சமூக கட்டுகள் சற்று தளரும் சமயங்களிலேயே புரியப்படுகிறது.
ம்ம்..மீண்டுமாய் ஒர் இளமை ஊஞ்சலாடுகிறது..