Saturday, 4 June 2016

மனதுக்கு இசையாதவை - ஓர் அலசல்

திரையிசை - ஓர் அலசல் 


இளமை துள்ளும் பருவங்களில் வெளிவரும் அனேக திரைப்பட பாடல்கள் பெரிதாய் அலசப்படாமல் நம் மனதுக்குள் போய் நின்றுக்கொள்ளும். திரைப்படத்தில் கதையும் இருக்காது, பாடல்களும் பிரமாதப்படுத்தாது. இருந்தும் அதில் வரும் சில பாடல்கள் மனப்பாடம் செய்யப்பட்டிருக்கும். அதில் குத்து பாட்டுகள், காதல் பாட்டுகள் அதிகமாக இருக்கும். அவை அந்த நேரத்தில் நம் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும். 

காலப்போக்கில் அவற்றை நாம் மறந்திருக்கவும் கூடும். இருந்தும் என்றோ ஒரு நாள் ஓடும் பேருந்தில், டீ கடையில், கடந்து செல்லும் சமயம் மாரியம்மன் கோவில் திருவிழா மைக்செட்டில் இருந்து காதில் விழும்போது, நம்மை அறியாமல் பாடலின் வரிகளை வாய் முணுமுணுக்கும். நம் மூளையின் ஏதோ ஒரு மடிப்பில் சொருகப்பட்டவைதான் அவை. மீட்சிக்காக காத்திருப்பவை. ‘நம்ம ஊரு சிங்காரி, சிங்கப்பூரு வந்தாளாம்...’ போன்ற பாடல்கள் இம்மாதிரிபட்டவையே.

எண்பதுகளில் வெளிவந்த படங்களில், பல கதாநாயகர்கள், மைக்கும் கையுமாக வண்ண விளக்குகளின் சிதறல்களுக்கு நடுவில் பளபள டிரஸுடன் கை கால்களை வெட்டிக்கொண்டு டிஸ்கோ ஆடுவதை பார்த்திருப்போம். ரவீந்தர், கமலஹாசன், மோகன், சுரேஷ், ஆனந்தபாபு என்று பட்டியல் நீளும். இன்றும் கூட அந்த மாதிரி பாடல் காட்சிகள் டிவியில் காட்டப்பட்டால், சேனல் மாற்றிவிடும் பழக்கத்தை வைத்திருக்கிறேன்.


உலக நாயகனின், ‘உனக்கென மேலே நின்றாய், ஓ நந்தலாலா...’ என்னும் பாடலுக்கான ஜிமிக்ஸ் தவிர்த்து அந்த பாடலை மட்டுமே ரசித்திருக்கிறேன். அப்புறம் வந்த தொன்னூறுகளின் படங்களில், டிஸ்கோ இல்லாமல், மைக் மட்டும் போதுமென்று நின்று பாடிய கதாநாயகர்களும், முரளி போல, உண்டு. அது எவ்வளவோ பரவாயில்லை.  

இன்னும் மோசமாய், காதல் காட்சிகளில் கதாநாயகிகள் பரதநாட்டியம் ஆடுவது வழக்கம். வராத ஒரு நாட்டியத்தை கை கால்களை அஷ்டகோணலாக்கி உடம்பை வளைத்து, பிட்டம் காமேராவுக்குள் விழுமாறு மிக மோசமான காட்சிகளாக அவை அமைந்திருக்கும். டி ஆரின் ஒரு படத்தில் ஜீவிதாவின் நடனம் ஒன்றை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

அடுத்து, பாக்கியராஜின் மோசமான, ‘கண்ணை திறக்கனும் சாமி..’ போன்ற ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட சிலபல பாடல்கள். இவையெல்லாம் கிளர்ச்சிக்காகவே எடுக்கப்பட்டவை. காமம் வாழ்க்கையில் ஒன்றுதான். அது ரசிக்கபடவேண்டியதே தவிர, ஆபாசப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதே அப்போதும் இப்போதும் என் கருத்தாய் இருந்திருக்கிறது.

Artificiality, செயற்கைத்தன்மை இல்லாத பட பாடல்கள் அந்த காலத்தில் மிக குறைவு தமிழில். பாலு மகேந்திரா கேமேராவுக்குள் மட்டுமே அம்மாதிரி சாத்தியங்கள் நிகழ்ந்திருக்கிறது.

கதையோ காட்சியோ மிகைப்படுத்தப்படலாம். மிகைப்படத்தப்பட்ட ஒன்றுதான் சில நேரங்களில் மக்களின் மனதுள் இடம்பெறும் என்ற புரிதலின் சூட்சமங்கள் அதில் அடங்கியுள்ளதால், அதை ஒத்துக் கொள்ளலாம்.

பாடல்கள் மிகைப்படுத்தப்படும் போது, அவையும் ரசிக்கப்படலாம். காட்சிக்காக இல்லை, பாடலின் வரிகளுக்காக, அதில் உள்ள வார்த்தை செறிவுக்காக. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும், ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது..’ போன்ற பாடல்கள் என்னுள் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு.

இன்றைய காலகட்டத்தில், பாடலும் கதையின் தளமும் இணைந்தே இயங்குவதால், பெரிதாய் நாம் சலிப்படைய வேண்டியதில்லை. ஒரு படத்தில் ஐந்தில் மூன்றாவது, தளம் மாறாமல் இருக்கிறது. இருந்தும் ஒப்பிடுகளில் வைக்கும் போது, எண்பதுகளில், ஐம்பதுகளில், அறுபதுகளில் வெளிவந்த பாடல்கள் மனதில் தங்கிய அளவு இப்போதுள்ளவை தங்குவதில்லை. சொற்செறிவு குறைவாக இருப்பதாக கூட காரணம் சொல்லலாம்.


காட்சி அமைப்புகளில் செயற்கை இழைக்கப்படுவது தெரியாமல் எடிட் செய்யப்படுகிறது. இருந்தும் சில காட்சிகள் காட்டிக் கொடுத்துவிடுகிறது. சமீபத்தில் வெளிவந்த அப்பாவும் மகளுமாய் பாடும் பாடல் காட்சிகள், இரு வேறு நடிகர்கள் நடித்தது, ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’, ‘ஈனா, மீனா டீகா,...’.
ஒப்பிட்டில் இரண்டையும் வைக்கும் போது, இரண்டிலும் செயற்கை தன்மை காணப்படினும், முதலில் குறிப்பிட்ட பாடலில் அதிகமாய் தென்படுகிறது என்பது உண்மை..

பிடித்த அலசலும் தொடரும்..



Saturday, 30 January 2016

இளமை ஊஞ்சலாடுகிறது..

மீண்டும்..



டீன் ஏஜ்ஜில் ஒரு திரைப்படத்தை உள்வாங்கியதற்கும் இப்போது நாற்பதுகளில் உள்வாங்குவதற்கும் வித்தியாசம் அதிகமிருக்கிறது.

அனுபவங்கள் அதிகமில்லாத அந்த வயதில், ஜெயகாந்தனின் கதைகளுக்குள் தலையை உருட்டிக் கொண்டிருந்தாலும், காதலை மறுக்கும் எந்த வாதமும் எதிர்ப்பாகவே மனதில் பதிந்தது எனலாம்.

காதலை உடல் ரீதியாக யோசித்தறியா வயது அது. தெய்வீகம் என்னும் வார்த்தையை காதலுடன் சேர்த்து பார்த்த வயது. என் கல்லூரி தோழி ஒருத்தி எண்பதுகளின் காலகட்டத்திலேயே ரொம்ப அட்வான்ஸ். படகின் மறைவில் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போனதற்காக அவளுடன் பேசாமல் அவளை நட்பில் இருந்து ஒதுக்கிவைத்த காலம் அது.

அந்த காலகட்டத்தில் வெளிவந்த இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தை வெவ்வேறு கோணங்களில் தோழிகளுக்குள் அலசியிருக்கிறோம்.

நாயகன், நாயகி தவிர்த்து இன்னொரு பெண்ணுடன் மோகம் கொண்டவனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், காதலில் உடலளவில் பரிசுத்தமாய் இருப்பது உண்மை இல்லையா என்பது போன்ற கேள்விகளும் அதனால் கதானாயகனாய் நடித்த கமலை பிடிக்காமல் போனதும் என்று நிறைய விஷயங்கள் தர்க்க ரீதியாகவும் அலசப்பட்டு இருந்தது எங்களுக்குள். ( அந்த காலத்தில் ஆண்கள் மட்டும் அறிவாளிகள் இல்லை, பெண்களும்தான்..ஆனால் அவர்கள் அளவுக்கு எங்களால் அப்போது வெளிவர முடியவில்லை என்பதை இப்போதும் தோழிகள் நாங்கள் யோசிப்பதுண்டு. )

காதலும் மோகமும் வேறு வேறு என்பதை பிரித்தறியா காலம் அது. அவை இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறே என்று சொன்ன திரைப்படம் அது. அப்போது அதை ஏற்கும் மனநிலை இல்லை எங்களுக்குள். ஆனால், புதிதாய் ஒரு பார்வை காதலுக்குக் கொடுத்தது அந்த திரைப்படம் எனலாம்.

உடல் ரீதியான விஷயங்களுக்கு காதல் மட்டுமல்ல, சூழலும் இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியான பழக்கமும் காரணங்கள் எனவும் புதிதான ஒரு பார்வை அந்த திரைப்படம் காட்டியிருக்கிறது. காதலற்று ஒரு உறவு உண்டாவதும், காதலுடன் நாயகி உறவுக்காய் காத்திருப்பதும், ஏற்றுக் கொள்வதும் திரைக்கதையின் போக்கை புதிதாய் புரிய வைக்க முயற்சித்திருக்கிறது.

இதை அந்த காலத்தில் ஒரு முயற்சியாக ஸ்ரீதர் இயக்கினாரா என்பது தெரியவில்லை. ஆனால், அதை ரசிகர்கள் ஜனரஞ்சகமான ஒரு திரைப்படமாகவே பார்த்தார்கள் என்பது மட்டுமே உறுதி. அதை 175 நாட்கள் ஓட்டி வெற்றி படமாக்கியதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம்.

சமூகம் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இல்லாதபோது சொல்லப்படும் சில விஷயங்கள் சமூக கட்டுகள் சற்று தளரும் சமயங்களிலேயே புரியப்படுகிறது.

ம்ம்..மீண்டுமாய் ஒர் இளமை ஊஞ்சலாடுகிறது..