Thursday, 16 May 2013

கௌரவம் - ஒர் அலசல்



Cast & Crew

Director : Radha Mohan
Producer : Prakash Raj
Music Director : Thamman
Lyricst : Karkky
Allu Sirish, Yami Gautam, Prakash Raj, Nassar 

கௌரவம் படம் பார்த்து ஒரு பத்து நாட்களுக்கு மேல் ஆகிறது. சென்ற வாரம் நடந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இலக்கிய வட்டத்தில் அதன் விமர்சனம் வந்தபோது கூட நான் அதிகமாய் பேசவில்லை.  

காரணம் ஒன்றுதான்...மனதில் அந்த படத்தின் தாக்கம் சரியாக இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. இந்த படம் சிறிது பாதிப்பை ஏற்படுத்தியது என்னமோ உண்மை. 


கௌரவக் கொலைகள்...

இந்த கௌரவக் கொலைகள் டெல்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் நிறைய நடப்பதை நாலைந்து மாதங்களுக்கு முன் பத்திரிக்கைகள் பெரிதுப்படுத்தி இருந்தன. லண்டனில் வாழும் இந்தியர்கள் கூட வீட்டை விட்டு காதலனுடன் போகும் தன் வீட்டு பெண்களை டாக்ஸி ஓட்டுனர்களை வைத்து கண்டுபிடித்து தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்ள கொலைகள் செய்வதாக படித்திருக்கிறேன். 


கதை...

இதை தான் ராதாமோகன் படமாக எடுத்திருக்கிறார். இளைஞன் ஒருவன் தற்செயலாக தன் நண்பனின் ஊரின் வழியாக பயணிக்க, பார்க்க வேண்டும் என்ற ஆவலில் அவனை தேட, அந்த தேடல் முடியும் இடம் கௌரவக் கொலையாக இருக்கிறது. 

அவனின் நண்பன் காதலித்தப் பெண் உயர் சாதியை சேர்ந்தவள். கௌரவம் பார்த்த அவளின் வீட்டு ஆண்கள் அவர்கள் இருவரையும் கொலை செய்துவிடுகிறார்கள்...அதை கதாநாயகனும் அவன் நண்பர்களும் கண்டுபிடிக்கிறார்கள். மீடியா, சமூக வலைதளங்கள் என்று அனைத்தையும் உபயோகித்து உடன் படித்த நண்பர்களை வரவழைத்து போராடி கடைசியில் கொலையை கண்டுப்பிடிக்கிறார்கள்.      





நிறைகளும் குறைகளும்...

நிஜத்தை கதைப் பண்ணியிருக்கிறார்கள். நேரடியாய் கதைப் பண்ணாமல் நண்பனின் மூலமாய் சொல்லியிருக்கும் முறை சற்று வித்தியாசமானது. இதில் நாமும் கதை வழியாகவே பயணிப்பதால் நமக்கு அந்த வன்முறையின் முழு பாதிப்பும் தெரியாமல் மிதமாய் கதை நகர்கிறது. 

ஆனால் அதுவே டைரக்டர் தான் சொல்ல வந்த கருத்தை அழுத்தி சொல்ல முடியாமல் போனதற்கும் நம் மனதில் இந்த சமூக கொடூரம் சரிவர பதியாமல் போனதற்கும் காரணமும் ஆகிறது. 

இதை வெறும் திரைப்படமாக மட்டும் பார்த்தால் நல்ல படம்தான். 


இதில் உயர் சாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக வரும் பிரகாஷ்ராஜ் மற்றும் ஹரிஷ் தங்களின் பங்கை ஒழுங்காய்ச் செய்திருக்கிறார்கள். எல்லா திரைக்கதைகளிலும் இருக்கும் பெரிய வில்லன் அமைதியாகவும் சிறிய வில்லன் கோபமாகவும் வரும் ஸ்டாண்டர்ட் பார்மட் இந்த படத்திலும் உண்டு. பிரகாஷ் ராஜின் அழுத்தமான நடிப்பினால் அந்தக் குறை காணாமல் போய்விட்டது. 





ஹீரோ அல்லு சிரிஷ் நமக்கு புதுசுதான். இந்த திரைக்கதைக்கு தேவையான இளவயதின் சுறுசுறுப்பை கண்களில் காட்டியிருக்கிறார். இயல்பாய் நடித்திருக்கிறார். 




ஹீரோயின் எமி கௌதமுக்கு கதையில் இருக்கும் பங்களிப்பு குறைவுதான். அதை டைரக்டர் சொன்ன வார்த்தைகளின் வழி நடித்திருக்கிறார்.  




ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் நண்பன் மூவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் யதார்த்தமானவை. 

இப்போதிருக்கும் படங்களில் வருவது போல் வக்கிரமான காமெடி இல்லாமல் எடுத்திருப்பதே இந்த படத்தின் தரத்தைக் கண்பித்துவிடுகிறது. 

ஆடிசம் வந்த பையனாக வரும் அந்த சிறுவன் கூட பேசாமலே நடித்திருக்கிறான். இளங்கோ குமாரவேல், நாசர், ஸ்ரீ சரண் அனைவரின் யதார்த்த நடிப்பு படத்தின் கதைக்கு ஆணித்தரமாய் அஸ்திவாரம் போடுகின்றன. 

காதல் காட்சிகள் எதுவும் பெரிதுப்படுத்தப்படவில்லை என்பதே இதில் சந்தோஷமான விஷயம். சாதாரணமாய் சந்திப்புக்களை உருவாக்கிக் கடற்கரைக் காதலை ஒதுக்கியிருக்கிறார்.  

'ஒரு கிராமம் கெடக்கு....' என்ற ஒரு பாட்டு, கானா பாலா, பாடியது மட்டும் நல்லாயிருக்கு. 




அங்கங்கே சில தோய்வுகள் கதையில் இருக்கின்றது. 


கதாநாயகன் தன் நண்பர்களை அழைத்து வருவது வரைக்கும் சரிதான். அடுத்து வரும் காட்சிகள் அந்த டெம்போவைக் கொண்டு செல்லவில்லை. மறுபடியும் கதாநாயகனே அலைவதாகத் தான்  காட்சிகள் வருகிறது. 

பாழடைந்த கோயில் என்று அந்த ஊரினரால் காட்டப்படும் ஒரு இடம் பயம் தருவதாக இல்லவே இல்லை. அந்த சிறுவன் அங்கே தான் இருக்கிறான் என்பதும் சாதாரணமாகவே காட்டப்படுகிறது. 

சித்தர் என்று ஒருவர் வருகிறார். இதுவும் எல்லா படங்களிலும் வரும் பைத்தியக்காரன் கதாபாத்திரம் போல். தவிர்த்திருக்கலாம் இதை. 

அந்த சிறுவன் வரைந்த படங்களை ஹீரோவும் அவன் நண்பர்களும் ஆராயும் போது பார்த்தவுடனே கண்டுப்பிடித்துவிடக் கூடிய ஒரு விஷயத்தை திருப்பி திருப்பி காண்பித்து கொஞ்சம் சலிக்க வைத்திருக்கிறார்கள்.

கடைசிக் காட்சியின் போது பெரிய குடும்பத்தில் இருக்கும் இரு பெண்களும் (மனைவியும் மருமகளும் ) 'இனி இங்கு இருக்க மாட்டோம் ' என்று கூறிவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். பிரகாஷ்ராஜும் தற்கொலை செய்துக் கொள்கிறார். ஏதோ அவசர முடிவு போல் அமைத்திருக்கிறார் டைரக்டர். 

இந்த மாதிரி திரைக்கதையில் சில இடங்களில் தோய்வு இருந்தாலும் கதையை சரியான பாதையில் ராதாமோகன் இட்டுச் செல்வதால் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. 


டைரக்டர் ராதாமோகன்....




பாராட்டியே ஆகவேண்டும் இந்த கதையை எடுத்ததற்கு. ஒரு சமூக அநீதியை வன்முறை இல்லாமல், தியேட்டர்கள் பற்றி எரியாமல் ஒரு கிளை கதையாய் எடுத்து கௌரவக் கொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். 

கௌரவம் என்ற போர்வையில் இரு உயிர்கள் பறிக்கப்படும் கொடூரமான செயலை தொட்டுச் சென்றிருக்கிறார். சிறு பாதிப்பையும் உண்டு பண்ணியிருக்கிறார். 



சமூகக் கொடுமையைக் கதையின் கருவாகக் கொண்டு அதை பணியாரமாக்க பூரணமாய் அதை மாவின் உள்ளே வைத்து நமக்கு கொடுத்திருக்கிறார். அவசியமில்லைதான். ஆனாலும் இந்த சமூகத்தில் நல்லதொருப் படைப்பைப் படையலாக்கத் தேவையாயிருக்கிறது. 





Tuesday, 19 February 2013

விஸ்வரூபம்





இந்த படம் பண்ணிய பிரச்னை எல்லோரும் அறிந்ததே. அப்படி ஒன்றும் இதில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. 

வெறும் பேப்பரில், டிவியில் மற்ற மீடியாக்களில் வந்த ஆப்கானிஸ்தான் பற்றிய விவரங்களை சேகரித்து கோடிக் கணக்கில் கொட்டியதாக(?) சொல்லி படம் பண்ணி வியாபாரம் செய்ய வழி தேடி கடைசியில் அம்மாவுடன் under table dealing பண்ணி சமர்த்தாக படத்தை விற்றுவிட்ட சந்தோஷம் கமலஹாசனின் முகத்தில் தெரிந்தால் அது ஆச்சிரியபடுவதற்கு இல்லை. 



இதில் ஏமாந்தவர்கள் கமலின் ரசிகர்கள் தான். படத்தை பார்க்க ப்ளைட் பிடித்து ட்ரெயின் பிடித்து அடுத்த மாநிலத்துக்கு எல்லாம் போய் காசை செலவழித்து இந்த ஒன்றுமே இல்லாத டாகுமெண்டரி படத்தை பார்க்க போன அவர்களை சொல்லணும். படத்தில் ஒன்றுமில்லை என்பது தெரிந்தவுடன் ஆஹா..ஓஹோ ...என்று பொய்யாய் பிரசாரம் செய்து மனச் சமாதானப்பட்டுக் கொண்டார்கள். பாவம் தான்....அடுத்த முறை சூடு போட்டுக் கொள்ளமாட்டார்கள். நம்புவோம்.....



நான் இப்படி எழுதுவதற்காக, 'அறிவு ஜீவிகளுக்கு தான் புரியும் இந்த கதை' என்கிற கதையெல்லாம் இங்கு வேண்டாம். நாலு இங்கிலீஷ் படத்தையும் ஐந்து சத்யஜித் ரே படத்தையும் பார்த்தவன் தான் அறிவுஜீவி என்றால் நாங்களும்  அந்த மாதிரி நாற்பது படம் பார்த்துவிட்டுதான் இதை எழுதுகிறோம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

கமல் முத்திரையுடன் ஒரு படம் வந்தால் அது அறிவுஜீவிகளுக்கானது தான் என்று யார் சொன்னது?.... 

எடுத்தவுடன் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும் பிராமண பாஷையை பேசி மற்ற தமிழர்கள் யாரும்  அமெரிக்காவில் வசிக்கவே தகுதியில்லாதவர்கள் என்பது மாதிரி காட்டியிருக்கிறார்கள். வன்மையாக கண்டிக்கதக்க ஒரு விஷயம் இது. சொல்லப் போனால் இந்த படத்தை எதிர்த்து இதுக்கு தான் போராடியிருக்கணும்.

ஒரு படத்துல காசு வாங்காம, இல்ல.. கொஞ்ச சீனுல மட்டும் வந்து போறவங்களை ஏதோ சொல்லுவாங்களே....ஆங்...Guest Appearance... அந்த மாதிரி கமல் இந்த படத்துல....சுத்தமா நடிக்கவே இல்லை...

ஒரு போராளி கூட்டத்துக்குள்ளே வேவு பார்க்க போகிறவன் எந்த மாதிரி இருப்பான்னு தெரியாத அளவுக்கு நம்ம பொது ஜனத்துக்கு அறிவில்லாம இல்ல. ஏதோ நம்ம ஊரு ஜனாதிபதி வெளிநாடு சுற்று பயணம் போவாருல்ல அந்த மாதிரி கமல் அங்கே போனவுடன் அந்த கூட்டத்தில இருக்கிறவங்க இவரை வரவேற்கிறதென்ன சுத்தி காமிக்கிறதென்ன....ரொம்ப காதுல பூ சுத்தாதீங்க கமல் சார்......



ஒரே விஷயத்தை மட்டும் கமல் இந்த படத்தில மீண்டும் நிருபிச்சிருக்கார். அது என்னன்னா டான்ஸ்...பிஜூ மகாராஜ் அவர்களின் துணையோடு அழகாக ஆடியிருக்கிறார். அதுக்காக இவ்வளவுவுவுவு.....நீள பாட்டு வேணுமா....




இந்த படத்துல கொஞ்சம் வித்தியாசப்படுவது ஆண்ட்ரியா மட்டுமே. அழகாகவும் இருக்கிறார். அளவாகவும் நடித்திருக்கிறார். 

வேற எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை...

இந்த மாதிரி ஒரு சாதாரண படத்துக்கு இனி யாராவது பந்தா பண்ணினா அதுக்கு எதிரா நாம தான் விஸ்வரூபம் எடுக்கணும்...


Saturday, 5 January 2013

கும்கி - யானை





Director: Prabhu Solomon
Music Director: D. Imman
Lyricst: Yugabharathi
Vikram Prabhu, Lakshmi Menon, Thambi Ramaiya 


படம் வந்து ஒரு மாசம் கழிச்சு அந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவது ரொம்ப நல்லது. 
ஏன்னா,
  •  அப்போதானே எல்லோரும் படத்தை பார்த்து முடிச்சிருப்பாங்க. முதல் ரெண்டு நாள்ல எழுதினா யாருக்குமே புரியாது. எவ்வளவு மார்க் போட்டிருக்காங்கன்னு மட்டும் தான் பார்ப்பாங்க. 
  • அதே மாதிரி, நான் எழுதுறதும் அவங்களுக்கு புரியும். அவங்களும் நான் படத்தை விமரிசித்ததில் ஏதாவது தப்பு இருந்தா சொல்ல முடியும்....

அப்பாடா...லேட்டா படத்துக்கு விமர்சனம் எழுதுறதுக்கு எத்தனை சப்பைக்கட்டு சொல்ல வேண்டியிருக்கு....

சரி...இனி கும்கி யானையை பார்ப்போம்...

இந்த படத்துக்கு கும்கின்னு பெயர்  வச்சிருக்காங்க....ஊரு பக்கம் இருக்கிறவங்களுக்கு கும்கிக்கு அர்த்தம் தெரியும். சிட்டியில இருக்கிறவங்களுக்கு தெரியவே தெரியாது. ஒரு லைன் அதை பத்தி சொல்லியிருக்காங்க....அது போதுமான்னு தெரியலை...

இந்த படத்தை ரெண்டாக பிரிக்கலாம்....
ஒண்ணு காதல், ரெண்டு யானை


  • காதல்


காதலா இது...கவிதை + காவியம் மாதிரி இருக்கு.....காதலின் முதல் பாதியில் ஹீரோ விக்ரம் பிரபு புதுமுகம் மாதிரியே இல்லாமல் அழகாய் உருகுகிறார். யானை பாகன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல்வாகு. நன்றாக பொருந்துகிறார். 




கதாநாயகி லட்சுமி மேனன் தானா என்பதில் எனக்கு  சந்தேகமாக இருந்தது....சுந்தரபாண்டியனில் பெரிய பெண்ணாக தெரிந்த இவர் இதில் சின்ன பெண்ணாய், அழகாய், மிக அழகாய்....ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையில் இடை கூடவா எடை கூடும்?...ம்ம்ம்....யோசிக்க வேண்டிய விஷயம்தான்....



காதலின் கிளைமாக்ஸ் 


படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஹீரோ பேசும் வசனம் 'மதம்  பிடிச்சிருந்தது உனக்கில்லடா மாணிக்கம்...எனக்குதான்...' என்பதும், 'நான் ஏண்டி உன்னை பாத்தேன்'  என்னும் போது விழும் ஒரு துளி கண்ணீரும் யானைக்கும் அந்த மதம் பிடித்த காதலுக்குமாக ஒரு சமாதியை அழகாய் கட்டிவிடுகிறது...டைரக்டர் பிரபு சாலமன் தான் சொல்ல வந்ததை மிக தெளிவாய் நம் முன் வைத்திருக்கிறார்...

அந்த காதல் தவறில்லை என்று நம் மனதுக்கு படும்படியாகவும் எடுத்திருக்கும் விதம் அருமை.  அவனின் காதல் தான் அனைத்துக்கும் காரணம் என்கிற போது அதை எவ்வளவு அழுத்தமாய் நியாயப்படுத்த முடியுமோ அதை நேர்த்தியாக செய்த பிரபு சாலமனை பாராட்டியே ஆகவேண்டும்...


அவன் காதலை தப்பாக்க யானையை கொன்றிருக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. ஆனால் அந்த ஒரே ட்விஸ்ட்டில் தான் காதலை ஆழமாய் நம் மனதில் பதியவைக்க முடிகிறது. கதை என்ற ஓன்று இருப்பதை காட்டுகிறது.


  • யானை 

யானையை சொல்லணும்....முதல்ல அதுக்கு திருஷ்டி சுத்தி போடணும். அப்புறம் ஒரு அவார்ட் கூட கொடுக்கலாம். அவ்வளவு க்யூட்டா இருக்கு....நான் என் சிஸ்டம் வால்பேப்பரில் கூட யானையை வைத்துவிட்டேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்....

அந்த யானையின் கண்ணை அடிக்கடி காட்டுவதால் யாராவது ஏதாவது சொன்னால் யானை என்ன நினைக்குதுன்னு அது கண்ணை பார்க்கும் ஆசை வருகிறது நமக்கு. 



முதலில் வரும் 'கொம்பன்' என்று சொல்லப்படும் யானை மிக ஆக்ரோஷமாய் அனைத்தையும் அழித்து துவம்சம் பண்ணி மதம் பிடித்த வெறியை நல்லா காட்டியிருக்காங்க. அந்த யானையை விரட்ட தான் நம்ம கும்கி வருகிறது உள்ளே. எப்போ அந்த யானை வரும்ன்னு ஊர்க்காரங்களை விட நம்மை ரொம்ப உசுப்பு ஏத்தி விட்டு விடுகிறார் டைரக்டர்.

ஆனால் அந்த யானை கடைசியில் வரும்போது அதன் கம்பீரத்தையோ ஆதிக்கத்தையோ காண முடியவில்லை. 


யானை கிளைமாக்ஸ் 


ஒரு நாள் கூட ஓடாத படங்களில் கூட கிளைமாக்ஸ் சண்டை அரை மணி நேரமாவது ஓடும். கடைசியில ஹீரோ தான் ஜெயிப்பாருன்னு தெரிஞ்சும் தாங்க முடியாத தலைவலியோட அதையெல்லாம் நாம பார்த்திருக்கோம். 

ஆனால் இந்த படத்துல டைரக்டர் நம்மை ஏமாற்றிய இடம் இது ஒண்ணுதான். ஒரு இருபது நிமிஷமாவது யானைகளின் சண்டையை காண்பித்திருக்கலாம். எல்லாமே கிராபிக்ஸ் வேற. சரி அதையாவது நல்லா காட்டியிருக்கலாம். சண்டை நடக்கும் போது எது மாணிக்கம் எது கொம்பன் என்று வித்தியாசமே தெரியவில்லை. 

அந்த யானையின் சாவு ஹீரோவை வேற மாதிரி யோசிக்க வைத்தா நாம 'ஐயோ யானை செத்து போச்சே' என்று யானையை மிஸ் பண்ணிட்ட பீலிங்கோட இருக்கோம். நாமளும் ஹீரோவும் வேறுபட்டு போகிறோம் அந்த யானையின் மறைவில்.....

தம்பி ராமையா 


எல்லாத்தையும் சொல்லிட்டு தம்பி ராமையாவை சொல்லாம விட்டா பாவம் பிடிக்கும் நமக்கு. முக்காவாசி கதையை அவர்தான் தன் முணுமுணுப்பால் சொல்லுகிறார். அப்பப்போ சந்தடி சாக்கில ஹீரோவையும் யானையையும் கலாய்த்து தள்ளுகிறார். நல்லா நடிச்சிருக்கார் அவர். இந்த முறை Supporting Actor அவார்ட் அவருக்கு கண்டிப்பா கிடைக்கும்.....

ஆனா ஒரே ஒரு சந்தேகம், எப்படி அவர் மட்டும் இவ்வளவு இங்கிலீஷ் வார்த்தைகள் பேசுகிறார்.
அடுத்தது அவர் மனசுக்குள் பேசும் காட்சிகள் அதிகம். நமக்கே சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது.  

ஹீரோ கம்மியா பேசுறார்...ஹீரோயின் பேசவே மாட்டேங்கிறா....நமக்கே தெரியும் யானை பேசாதுன்னு ...தம்பி ராமையாவை தவிர யாராவது வாயை திறந்து பேசமாட்டங்களான்னு தோணுது. 


அப்புறம் மாதையன் சமத்தான அப்பாவா வந்து போறார்...


இசை 

பாட்டு எல்லாமே உருக்குகிறது. இமானின் இசையில் யுகபாரதியின் வரிகள்....வசீகரம்....
பென்னி தயால், இம்மான், ஹரிசரண், ரஞ்சித், அல்போன்ஸ் என்று பாடகர்கள் களைகட்டியிருக்கிறார்கள்.....கேட்டுகிட்டே இருக்கலாம் போல.....
   

கும்கி......


மிருகங்களை வைத்து படம் எடுத்தவர்கள் நம்மை ஏமாற்றியதில்லை இதுவரை. அந்த படங்களில் எல்லாம் மிருகங்களை பயன்படுத்தி இருப்பாங்க. இந்த படத்தில் மட்டும் தான் கதையோட பின்னியிருக்காங்க அதுங்களையும்....

பிரபு சாலமனுக்கு தாராளமா தரலாம் யானை பாகன் பட்டம்....அதுவும்கும்கி யானை பாகன்.....