Feel The Army
Cast & Crew
Director : A R Murugadoss
Producer : S Dhanu
Music : Harris Jeyaraj
Cinematography : Santhosh Sivan
முதல் நாளே துப்பாக்கி பார்க்கணும்னு ஒரு முடிவோட இருந்தேன். குடும்பத்தில் எல்லோரும் எனக்கு எதிராக இருக்க (விஜய் படமாம் - குப்பை படத்தை டிவிகாரன் போட்டா உட்கார்ந்து பார்ப்பாங்க ) , நான் பிடிவாதமாக இருக்க, இரண்டாம் நாள் inox தியேட்டரில்....படம் நல்லா இல்லையென்றால் குடும்பமே என்னை காலி செய்துவிடுவதாக மிரட்டிதான் வந்தார்கள். படம் முடிந்து வெளியே வந்தபிறகு எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் படம் சூப்பர்ன்னு.....என்னை மறந்துபோய் வெகு நேரம் ஆகி இருந்தது....சூப்பரு....
முதல்ல டைரக்டர் முருகதாஸுக்கு ஒரு பெரிய சபாஷ்...
போலீசை வைத்து நிறைய கதை, சென்டிமென்ட் பக்கத்தை டச் பண்ணாம கூட எடுத்திருக்காங்க. ஆர்மியை வைத்து கதை பண்ணுவது கொஞ்சம் கடினம்தான். ராணுவம் செய்கிற வேலை எதுவும் நம்மை பெரிதாக கவர்ந்ததில்லை....
இதுவரை வந்த படங்களில் எல்லாம் ராணுவ வீரன் லீவில் ஊருக்கு வந்தால், ஒன்னு குடும்பத்தை அழிச்சவங்களை பழி வாங்குவான், இல்ல கும்மாளமா காதல் பண்ணுவான்....பாக்கியராஜ் முதல் சரத்குமார் வரை இப்படித்தானே கதை பண்ணியிருக்காங்க..இல்லேன்னா நம்ம விஜயகாந்த் மாதிரி one man armyயா கதை பண்ணியிருப்பாங்க...
இதுதான் முதல் முறை ஆர்மியில் வேலை பார்க்கும் இளைஞன், தீவிரவாதிகளை எப்படி தேசப்பற்றுடனும் (பாரா பாராவாக டயலாக் இல்லாமல் ) புத்திசாலிதனத்துடனும் தண்டிக்கிறான் என்று காட்டப்பட்டுள்ளது.
இதற்கு கதை ஒன்றும் பெரிதாக தேவைப்படவில்லை. ஆனால் படமாக்கி இருக்கும் விதம்தான் இயக்குனருக்கு சபாஷ் போட வச்சிருக்கு.
விஜய் என்கிற ஒரு மாஸ் ஹீரோவுக்கு மேல் தன் முத்திரையை பதித்திருக்கிறார்.
விஜய்யை பொருத்தவரை இந்த படம் கில்லி மாதிரி ஒரு milestone படம்தான். பழைய கோபக்கார விஜய்யை இந்த படத்தில் மீண்டும் மெருகேற்றியிருக்கிறார் டைரக்டர்.
விஜய் fansக்கே தெரியும், இதுவரை வந்த படமெல்லாம் எவ்வளவு கேவலமாக இருத்தது, நண்பனை தவிர (ரீமேக் ஆனதால் தப்பித்தது) என்பது.
நம்ம ஹீரோ பத்தி சொல்லணுமே. படம் பார்க்க போனதே விஜய்காகதானே....கண்ணில் துப்பாக்கியும் காதலில் காமெடியும் செய்து கலக்கியிருக்கிறார். விஜயை விட துறுதுருப்பாக இந்த படத்தில் நடித்திருக்க முடியாது. முதலில் 12 தீவிரவாதிகளை கொல்லும் காட்சியில் அதை படமாக்கிய விதமும் சரி அதை விஜய் வேகமாக செயல்படுத்தி இருப்பதும் அழகு.
கடமையை மெயின் டிராக்கிலும் காதலை காமெடி டிராக்கிலும் முதல் சீன்லே இருந்தே ஓட்டியிருக்கிறார். ஜெயராம் அடிக்கும் லூட்டி நல்ல இருக்கு.
காஜல் சான்சே இல்ல....காஜலின் கண்கள் காதலாகவும் பேசுது, கலக்கலாகவும் பேசுது. ஆனா பாவம் நிறைய இடங்களில் டிரஸ் தான் சின்னதா போச்சு. விஜய் படத்தில இதெல்லாம் இல்லைன்னா ஹீரோயின் எப்படி எங்க ஹீரோவுக்கு முன்னாடி அழகா தெரிவா? ....
சத்யன் இந்த படத்தில் SI ஆக வருகிறார். கொஞ்சம் காமெடி தான். அதை கரெக்டா பண்ணியிருக்கார்.
வில்லனாக வரும் வித்யூத் ஜம்வால் எல்லா படத்திலேயும் வரும் வில்லன் போல்தான். அவரை இங்கிலீஷில் மட்டுமே பேசவைத்து ஒரு பில்ட் அப் கொடுத்து வித்தியாசப்படுத்திவிட்டு கிளைமாக்ஸ் மட்டும் தமிழ் பேச வைத்து அந்த கதாபாத்திரத்தை சற்று நிமிர்த்தியிருக்கிறார் முருகதாஸ்....
கதையிலும் வில்லன் ஹீரோவை கண்டுபிடிக்க தன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது நாமும் கூடவே யோசிப்பது போல ஒரு புத்திசாலித்தனமான மாயையை உண்டாக்கியிருக்கிறார். இந்த மாதிரி விஷயங்களில் நிறைய கவனம் செலுத்தியிருப்பது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
சில லாஜிக் (ஹீரோ வில்லனை துப்பாக்கி இருக்கும் போது கை சண்டைக்கு தூண்டுவது) பழைய காப்பி தான் என்றாலும், நிறைய புது முயற்சிகளுக்காக அதை மன்னித்துவிடலாம்.
சண்டை காட்சிகள் பிரமாதம். அதை படமாக்கிய விதத்திற்கு சந்தோஷ் சிவனுக்கு ஒரு சபாஷ் சொல்ல வேண்டும். ஒரு ஆர்மிகாரனின் ஆக்ரோஷமான சண்டை, தண்டிக்க தயங்காத உணர்வு எல்லாமே இருக்கிறது பைட்டில்.
கத்தி, துப்பாக்கி என்று எதை கையில் எடுத்தாலும் அதை வைத்து ஈஸியாக எதிராளியை கொன்றுவிடுகிறார். அது தவறு என்று நாம் யோசிப்பதற்கு முன் அடுத்த அடி என்று சண்டையில் stunt master கலக்கியிருக்கிறார். அருமை....
ஹாரிஸ் ஜெயராஜின் இசை மட்டும் மனதில் பதியவில்லை. எல்லா பாடலுமே ஒரே மாதிரி melodious ஆக இருப்பதுபோல் தோன்றியது.
google லிலும் yahoo விலும் தேடிய பாட்டு மட்டுமே தாளம் போட வைக்கிறது. விஜய் படம்ன்னா ஒரு intro song, ஒரு குத்து பாட்டு என்று நாமதான் எதிர்பார்த்து பழகிட்டோம். அதை மாத்திக்கணும் போல....
D R கார்த்திகேயன் (Former Director of CBI) அவருக்கும் ஒரு தேங்க்ஸ் ஸ்லைடு போட்டிருந்தார்கள். இவரின் பங்களிப்பு அடித்தள கதையை பலப்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய ராணுவம் என்பது ஏதோ பார்டரில் சுடுவது, இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைப்பது, குடியரசு தினத்தன்று அலங்கார வாகனங்களில் நின்று சல்யூட் அடிப்பது என்றுதான் பார்த்திருக்கிறோம். அதற்கு மேல் நாம் அவர்களை பற்றி பெரிதாக யோசித்ததில்லை.
அவர்களை நம்மோடு...அதாவது பொது ஜனத்தோடு...இணைத்து பார்க்க மறந்திருக்கிறோம். நம் மனதில் அவர்களை ஒட்ட வைக்கும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார் முருகதாஸ். விஜய் படம் என்றில்லாமல், முருகதாஸ் விஜய் காம்போ என்பது போல இருந்தது படம். இந்த மாதிரி படங்களை வரவேற்போம்.
உண்மையிலேயே துப்பாக்கியை இந்த தீபாவளிக்கு வெடிக்க வைத்திருப்பது அழகு...